வேறையாக்கள்

>> Saturday 17 January 2015

சிறுகதை

 ராஜேந்திரன்
 
மெலிதாக வியர்த்தது.மழைவரும் போல் இருந்தது.நேற்று பெய்த மழையில் குட்டைகளில் தேங்கியருந்த  நீர் வற்ற தொடங்கியிருந்தது.நடக்கும் போது பாதையில் இருந்த செம்மண் செருப்பில் ஒட்டியது. சாய்ந்து வீழ்ந்து இருந்த தென்னம்மர குற்றியில் காளான்கள் முளைவிட்டு இருந்தன. இருகரைப் புறங்களிலும் தொட்டாச்சினுங்கி செடிகள் நிறையவே இருந்தன. தூறல் எடுக்கும்போல் இலேசாக குளிர் காத்து வீசியது.முகில்கள் மெலிதாக கறுத்திருந்தது. கையில் குடையிருந்ததால் பதட்டம் இன்றி நிதானமாக நடந்தேன். இன்னும் அரைமைல் நடந்தால் வீடு வந்துவிடும்.
ஒரேயொரு கொய்யாமரம் சற்று விநோதமாக ஒரு சில கிளைகளுடன் பிஞ்சு காய்களுடன் அசொளகரியமாக நின்று கொண்டிருந்தது. கொய்யாமரங்களை பார்க்கும்போது அவள் நினைவு மெலிதாக வலிக்க வரும். மகிழினி.... அவளை எத்தனை தடவை தேடினேன். என் இதய அறையின் ஆழத்தில் மிக மிக இரகசியமாக இன்னும் நீச்சல் அடிப்பவள்.
அன்று நான் இருந்த வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி மகிழினி வீடிருந்தது. வாடகை வீட்டில் அவர்கள் இருந்தார்கள்.அவள் வீடு போர்ட்டிக்கோ முடக்கடியில் ஒரு கொய்யாமரம் ரொம்ப பரந்து சுதந்திரமாக கிளைகள் விட்டு விருச்சமாக இனிமையாக வளர்ந்திருந்தது. என் வீட்டு வரண்டாவில் இருந்து பார்க்கும்போது இரட்டை சடையுடன் மார்பில் புத்தகத்தை கட்டிபிடித்துக்கொண்டு மென்மையாக நடந்து போவாள். அவளை அடிக்கடி பார்க்க சுவாரசியமாகயிருந்தது.
உயர்தரம் கணித பிரிவில் படித்துக் கொண்டிருந்தேன். மகிழினி என்னை விட ஒருவயது குறைவு கலை பிரிவில் படித்து கொண்டிருந்தாள். யாழ் பல்கலைகழகத்தில் புவியியல் பாட டெமோவான என் அக்காவை பின்னேரங்களில் சந்திக்க வருவாள். நிறையநேரம் பாட சம்பந்தமாக கதைப்பார்கள். சிலசமயம் என்னை பார்த்து மெலிதாக புன்னகைத்து இருந்தாள். கீழ் உதட்டை பற்களால் கவ்விக்கொண்டு சொக்கையில் குழிவிழ அவள் மெலிதாக் சிரிக்கும் போது எனக்குள் சில விஷேச ஹோர்மோன்கள் அதிகமாக சுரக்கும்.
டியூஷனுக்கு போக அவசரவசரமாக புறப்படும்போது காத்தடிக்க பம் வேண்டும் என்று கேட் அடிக்கு வந்து கேட்டாள். அக்கா இன்னும் வரவில்லை.
“சுகந்தி அக்கா.... அக்கா..” என்றாள் நான் நிற்பதை கவனியாததுபோல்
“அக்கா இன்னும் வரவில்லை.... அஞ்சரை ஆகும் வர...”
“ஓ..........பம் ஒருக்கா தருவீங்களா....?” என்றாள் கேட் தூண் அடியில் நிண்டு கொண்டு.
“அத என்னட்டையே கேட்டு இருக்கலாமே...... அதுக்கு ஏன் அக்காவ கூப்பிடுறீங்க?”
போய் எடுத்து வந்து கொடுத்தேன். எதுவும் சொல்லாமல் மௌனமாக வேண்டினாள்.
“உங்களிட்ட சைக்கில் இருக்கா?” என்றேன்
“இல்லையே... அப்பாண்ட சைக்கில்க்கு...”
அவளை நினைக்கும்போது சில வினோத உணர்ச்சிகள் பிறக்கும். அடிவயித்தை யாரோ கவ்வி பிடிப்பது போல் இருக்கும். மகிழினி மேல் காதல் துளிர்விட்டு செழுமையாக படர்ந்து வளர்ந்தது. இராசாயன பாட கொப்பியை திறக்கும்போது அவளின் நினைவுகள் இராசயனதாக்குதல்களை என் மீது தொடுக்கும். மகிழினி நினைப்பில் தாள்கள் முழுவதும் பென்சில் வளையங்கள் வரைந்துகொண்டே இருப்பேன்.
வெயில் கொழுத்தி தள்ளினாலும் மகிழினி வீடுமுன் நிற்கும்போது சுவாரசியமான ராகம்போல் இன்ப படுத்தியது. அவள் வீட்டு கேட்டை திறக்கும்போது அந்த கொக்கத்தடி சரிந்து என் தோளில் விழுந்தது. சர்வபுலன்களும் எழுந்து திடுக்கிட...
“ஐயையோ.. சொறி சொறி....கவனிக்கல” என்று பதறியடித்து கொக்காத்தடியை விலக்கினாள். மெல்லிய தடியாக இருந்ததால் வலிக்கவில்லை. ஒரு சிறிய வாங்கில் ஏறி கொய்யா மரத்தில் இருந்த பழத்தைதட்டும் போது தவறி என் மேல் விழுந்ததை புரிந்துகொண்டேன். அவளுக்கு உயரம் போதவில்லை.
“இல்ல பரவாயில்லை, என்ன கொய்யா பிடுங்குறீங்களா?... நல்லவேலை கண்ணுல குத்தமா விட்டீங்க” என்றேன். ஒரு மாதிரி சிரித்தாள். “பம் தருவீங்களா?.. என்ட சைக்கிலுக்கு காத்து அடிக்கணும்... அப்போத வேண்டிநீங்க....”
“ஐயோ.. மறந்துபோனனே... அம்மா அப்பவே கொடுக்க சொன்னா நான் தான் தரல...” அவள் உள்ளே ஓடினாள். நான் வாங்கில் ஏறி கிளையை கொக்கியில்மாட்டி இழுக்க லாபகமாக கையில் அந்த விரிந்த கொய்யா கிளையோடு கையில்வர பறித்தேன்.
“அட..நீங்க பிடுங்கிட்டீங்களா?.. இந்தாங்கோ பம்.. சொறி நான் தர மறந்துடேன்...ரொம்ப தாங்ஸ்”
அவள் அம்மா பின்னால் வந்தாள்.
“என்ன ராஜு......” கையில் ஏதோ நாவலுடன் வந்தாள்.
“பம் வேண்ட வந்தனான் அன்டி...”
“மகிழ் நீ கொடுக்கலையா.. அப்பவே சொன்னனான் இரவல் வேண்டின ஒரு பொருளை உடனயே கொடுக்கணும் என்று.. இந்த பிள்ளை இப்படிதான்..”
அவள் அம்மாவை முறைத்தாள்.
“இல்ல பரவாயில்லை அன்டி...”
அவளிடம் கொய்யாவை கொடுத்து விட்டு பம்மை வேண்டிக்கொண்டு வீடுவந்தேன். இவ்வளவு அருகில் அவளை நான் பார்த்தது இல்லை. அந்த வினோத பிரம்மையில் இருந்து என்னால் விடுபட அதிகநேரம் பிடித்தது. அவள் நண்பிகளுடன் கதைத்துக்கொண்டு,என் வீட்டை கடந்து செல்லும்போது அவள் மட்டும் விசேஷமாகதெரிவாள். மௌனமாக அவள் புன்னகைப்பது புரிந்துகொண்டேயிருந்தது.
பல சமயம் அவள் வீடுவரும்போது என்னை பார்த்து மெலிதாக சிரிப்பாள். பதிலுக்கு நான் இளிப்பேன். எங்கள் வீட்டு ஒழுங்கை திருப்பத்தில் ஒரு குட்டி பிள்ளையார் கோயில் இருக்கும். அதன் பின் ஒரு சிறிய ஆழமான கிணறு இருக்கும். அங்கேதான் அப்பா தண்ணி அள்ளுவார். மகிழினி ஓவ்வொரு பின்னேரமும் தண்ணியள்ள குடத்துடன் செல்வாள். அப்பாக்கு வயசாகுது எதுக்கு தண்ணியள்ள அவர் போய் கஷ்டபடனும் என்று அன்றில் இருந்து நான் கடமை உணர்ச்சியுடன் புறப்பட்டேன். அப்பா நம்ப முடியாமல் விநோதமாக பார்த்தார்.
சில சமயம் அவளுக்கும் சேர்த்து தண்ணி அள்ளி கொடுப்பேன். உரையாடல்கள் வரையறையின்றி அவளுடன் வெக்கப்பட்டு, சிலிர்க்கப்பட்டு,கோவப்பட்டு,தனிமைப்பட்டு சென்றுகொண்டிருந்தது.
“எப்படி எக்ஸாம்?... நல்ல செய்தீங்களா?”
“ம்ம்ம்... பரவாயில்லை.....” அப்போதுதான் உயர்தரம் முடிந்திருந்தது. திருப்தியாகவே செய்திருந்தேன்
“நீங்க நல்லா செய்து இருப்பிங்க... டபுள்மக்ஸ்ல உங்களுக்குதான் நெடுவலும் ஹயஸ்ட் வாறது என்று துளசி அக்கா சொல்லுறவா....” என்றாள் குடத்தை இடுப்பில் தாங்கியவாறு.
“துளசியா? அவாட்ட எதுக்கு என்னை பத்தி கதைக்குறநீங்க.....” துளசி பாடசாலை நண்பி.
அவள் முகம் சிவந்தது. “இல்ல சும்மாதான்...”
“வேற என்ன சொன்னவா?”
“... ஒன்றும் சொல்லலை...” அவள் விருட் என்று சென்றுவிட்டாள்.
என் அக்கா திருமணம் நல்லாவே நடந்தது. மகிழினி அம்மா,அப்பா எல்லோரும் வந்திருந்தார்கள். மகிழினி புடவையில் முதல்முதல் கண்டேன். மாநிறமான அவளுக்கு சிவப்பு சேலை தனி வடிவை கொடுத்தது. ரட்டை சடை இல்லாமல் கூந்தலாக கேசத்தை விட்டிருந்தாள். என் எல்லா பாகங்களும் இன்பத்தால் அவஸ்தைப்பட்டது. இது எல்லாம் எனக்கா...!
அவள் மீது காதல் படர்ந்து சென்றுகொண்டிருந்தது.சின்ன சின்ன சில்மிஷங்களுடன் சென்று கொண்டிருந்த அதன் நினைவுகள் இப்போது என்னுள்ளே கரைந்துகொண்டே உள்ளது. என் பரீட்சை பெறுபேறுகளை வெளிவந்தவுடன் மகிழ் வீட்டை போய் இன்பமாக சொன்னபோது கற்கண்டு தந்தார்கள், ஆனால் அவள் அப்பா எனக்கு அன்று சொன்னது இன்றும் என்னகத்தே தாழ்த்தி கசக்கவைகிறது.
அவள் வீட்டு கேட்டடியில் செல்லும் போது அவள் அம்மா கூப்பிட்டாள். “ராஜேந்திரன் உங்களோட அங்கிள் ஒருக்கா கதைக்கனுமாம்.. ஒருக்கா வர்றீறா?”
போனேன், மகிழ் இல்லை.அவள் அப்பா டவுன்க்குள் கடை வைத்திருந்தார். வெத்திலை அடிக்கடி போடுவார். அதன் வாசம் அருகில் போகும்போது வீசியது. ஒரு பிளாஸ்டிக் கதிரையை காட்டி இருக்க சொன்னார்.
“தம்பி நீங்க இப்படி செய்யிறது நல்லாயில்லை....” என்றார்
“என்ன..” என்றேன் திடுக்கிட்டு.
“மகிழினி மேல விருப்ப படுறியலா...”
“.....” உதறியது
“நாங்க கவனிச்சுட்டுதான் இருக்கம்.. நீங்க அவாவோட அதிகமா மினக்கடுறியல்.. தண்ணி அள்ள போக தனிய போய் கதைகுறியல்... இது எல்லாம் சரியில்லை. அப்படி ஒரு எண்ணம் இருந்தா விட்டுடுங்க...”
“அங்....” வியர்த்தது. ஒரு வேளை மகிழ் ஏதும் சொன்னாளா.. ச்சே ச்சே அப்படி இருக்காது.
“நீங்க வேறயாக்கள் நாங்கள் வேறயாக்கள்... கடைசிவரை இது சரி வராது, உங்க அப்பாடயோ அம்மாடயோ நாங்க ஒண்டும் பிரச்னை பட விரும்பல நீங்க கெட்டிக்கார பிள்ளை.. நல்ல ரிசல்ட் வேற ஏல்ல எடுத்திருக்குறீர்..... ஒருக்க சொன்னா விளங்கும்.” என்று வெத்திலைக்கு சுண்ணாம்பு தடவியவாறு சொன்னார். அவள் அம்மா கதவடியில் நின்றாள்.
அவள் வீட்டை விட்டு வெளியில் வரும்போது கொய்யமரத்தில் இருந்த ஆணில் கத்திக்கொண்டேயிருந்தது.
அதற்கு அப்புறம் அவளை நான் காண்பது அரிதாகவேயிருந்தது.அவளை காணும்போது அவள் அப்பா சொன்னது நினைவுக்கு வரும் நாங்க “வேறையாக்கள் நீங்கள் வேறையாக்கள்”. அவர்கள்  சொந்த இது இல்லை.மகிழ் ஒரேயொரு பிள்ளை. நல்ல தண்ணி, நல்ல படிப்பு வேண்டும் என்று இங்கே வந்தார்கள். அன்னம் தளிர்க்கும் வேளாண்மை செயத்த குலத்தில் வந்ததாக சொல்லும் திமிர் பலசமயம் தென்பட்டது உண்டு. அவர்கள் வீட்டில கொந்தனார் வேலைக்கு வரும் நபர்களிடம் சிரட்டையில் தண்ணீர், தேத்தண்ணி கொடுப்பதை அவஸ்தைகளோடு பாத்திருக்கின்றேன். அவர்கள் வீட்டு இடப்பக்கம் இருக்கும் போஸ்ட் மாஸ்டர் வீட்டில் நடக்கும் விஷேசங்களுக்கு சென்றுவிட்டு சாப்பிடாமல் வருவதை கவனித்து இருக்கின்றேன். கூர்ந்து கவனித்தால் அவர் அப்பா வெத்திலைகூட அங்கே போட்டது இல்லை. ஏன் என்று துலாவும்போது தெரிந்தது போஸ்ட் மாஸ்டர் அப்பா சலவை கடை வைத்து இருந்தாராம்.
என் அக்கா வீட்டு கலியாணத்தில் சாப்பிட்டார்களா இல்லையா என்று எனக்கு தெரியாது, கவனிக்கவில்லை. துளசியை காணும்போது ஒரு சமயத்தில் மகிழினியை பற்றி கேட்டேன். அவள் வீட்டை விட்டு வெளியே போவது குறைவு காண்பது இல்லை என்றாள்.காரணம் இல்லாத சில வலிகளினால் புரண்டேன். யோசிக்க புரிந்தது வராண்டாவை தவிர்த்து உள்ளே அவர்கள் ஒருபோதும் என் அக்காவைக்கூட அனுமதித்தது இல்லை, ஒரு தாழ்வு மனப்பான்மை சுடர்விட்டது.
எனக்கு நிலஅளவியல் பிரிவில் பல்கலைகழகத்திக்கு தேர்வாகி மொறட்டுவை சென்றுவிட்டேன். அதன் பின் அவளை நான் காணவேயில்லை. விடுமுறைக்கு வரும்போது அவள் வீடு வெறிச்சோடியிருக்கும். கொய்யாமரம் மட்டும் அப்படியே இருக்கும். அதற்கு பிற்பாடு நாங்கள் வீடுமாறிட்டோம். கடைசிவருடம் இறுதிபரீட்சை எழுதிவிட்டு வரும்போது துளசி சொன்னாள் அவளுக்கு கலியாணம் முடிந்து விட்டதாம், சொந்தத்தில் திருமணம் செய்ததாக சொன்னாள். ஆர்வம் காட்டாதது போல் கேட்டாலும் அடிவயித்தில் ஒரு வினோதம் வலித்துக்கொண்டேயிருந்தது, நான் அவளை ஒன்றும் அப்படி காதலிக்கவில்லையே, இந்த வினோத வலி தாழ்வு அவமானத்தின் வெளிப்பாடா?, குளிர்ந்த தட்டையான வாலை அடிவயித்தில் செருகி கிண்டியது போல் ஜீரணிக்க முடியாமல் வலித்தது. அதே வீட்டில் இருப்பதாக சொன்னார்கள்.
கசக்கும் நினைவுகளோடு கடக்க வீடுவந்தது. அதே கொய்யாமரம் நின்றது. அந்த வீடு மகிழ்வீடுதான். கேட் அதே மாதியிருந்தது. வேலி இல்லாமல் மதில் முளைத்திருந்தது. கேட்டை திறக்க தயங்கினேன். என்னதான் படித்து அடுத்தகட்டம் போனாலும்,சில தாழ்வு மனப்பான்மையை கழுவமுடியவில்லை. அவள் அப்பா கேட்டடியில் வைத்து அனுப்பி விடுவாரா? கொழுக்கியை இழுத்து கேட்மீது தட்டினேன். அவள் வந்தாள். அவள் முகத்தை ஊடுருவ அவள் மிரட்சியுடன் பார்த்தாள். சமாளித்து தயங்கி வந்தாள்.

மகிழினி 
பூவரசு மரத்தில் புனில்கள் கத்திக்கொண்திருந்தன. மழை வரும்போல் இருந்தது. அவசரஅவசரமாக பின் கொடியில் இருந்த உடுப்பை எடுத்து வீட்டில் வைத்து விட்டுவர முன் கேட்டில் யாரோ நின்றார்கள். வாசலில் வந்து பார்க்க அந்த முகம் உறைத்தது. ஒரு கணம் அது ராஜுதனோ என்று நம்பமுடியவில்லை. ஒரு தயக்கமும் இருந்தது. அந்த இளமையான நினைவுகள் இளமையாக வளர அவசர அவசரமாக தவிர்க்க எண்ணி தோற்றேன்.
அவர் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் அப்போ இருந்தார். புவியியல் பாடம் உயர்தரத்தில் எடுத்ததால் அவர் அக்காவிடம் சிலசமயம் பாட சம்பந்தமாக கதைக்க செல்வேன். இவர் அப்போ ரொம்ப அமைதியாக இருப்பார். திருட்டுதனமாக அடிக்கடி பார்பார். என்னை நேர பார்த்து கதைக்க மாட்டாராம். அக்கா இல்லாத சமயம் புலி,பார்த்து இளிப்பார்.
பள்ளிக்கூடம் முடிந்து போகேக்க அவர்வீட்டு கேட்டடியில் நின்று பார்ப்பார். சிலசமயம் பார்க்க பாவமா இருக்கும். அது ஏன் என்றே தெரியா...
துளசி அக்கா இவர் பாடசாலை கிளாஸ்மேட். அவா என் தூரத்து உறவு. அடிக்கடி வீட்டை வருவா. இவரை பத்தி அடக்கடி கதைப்பா. ரொம்ப நல்லவராம். நல்லா படிப்பாராம். ரொம்ப டீசென்ட்டாம்.கேக்க சிரிப்பாக இருக்கும். ஆனா அவரை பத்திகேக்க ஆர்வமாக இருக்கும்.
அப்பாண்ட சைக்கிலுக்கு காத்து இல்லை பம் வேண்ட அவர் வீட்டை போனேன். சுகந்தி அக்கா நிற்க மாட்டா என்று தெரியும்.இவர் தான் நின்றார். எப்படி பம் கேக்குறதென்று புரியவில்லை. வெக்கமாக இருந்தது. அவர் அக்காவை கூப்பிட இவர் முழுசி அடிச்சுக்கொண்டு வந்தார். வீட்டிலை யாரும் இல்லை போல். தைரியமாகக் கதைத்தார். முதல் முதல் அவர் கதைத்தது அப்போதுதான் என்று நினைக்கின்றேன். அட இவர் கதைப்பாரா?
அப்பா டவுன்க்கு போக அம்மா பம்மை கொடுக்க சொன்னாள். போக ஏதோ மாதிரியிருந்தது போகவில்லை.
அடுத்தநாள் இதையே சாக்காக வைத்துகொண்டு வந்து விட்டார். கொய்யாமரத்தில் அணில்கள் ஓடி ஓடி திரிவதைபார்க்க ஆசையாக இருக்கும். நிறைய கொய்யாவை அவை கொறிக்கும். வால்கள் புசு புசு என்று புஷ்டியாக இருப்பதை பார்க்க ஆசையாக இருக்கும். ஒரு ஸ்டூலை எடுத்து ஏறி கொக்கத்தடியால் அந்த கொய்யாவை பறிக்க முயன்றேன். எட்டவில்லை. அப்பதான் இவர் வந்தார் கேட்டை தயக்கமாக திறந்துகொண்டு வர, எனக்கு குபீர் என்று தூக்கிவாரி போட்டது. பாவாடையோடு நான் நின்ற நிலை வெக்கமாக இருந்தது. அவசரமாக இறங்க அவர் மேல் கொக்கத்தடிய போட்டுவிட்டேன். எனக்கு ஒரு மாதிரி போய்விட்டது. பம் கேட்டார். வீட்டுக்குள் ஓடி போய் எடுத்து கொடுக்க போனேன்.
“ஏன் இப்படி ஓடுற....” அம்மா ரமணிசந்திரன் நாவல் படித்துகொண்டிருந்தாள்,நிமர்ந்து கேட்டாள்.
“பம் கொடுக்கலை அம்மா.. அதான் வேண்ட சுகந்தி அக்காண்ட தம்பி வந்திருக்குறார்...” என்றேன்.
“இப்படியா பொடியங்கள் முன்னால ஓடுவ?.. ஒழுங்கா போ...”
பம்மை கொடுக்க அம்மா வந்தாள். தான் அப்பவே கொடுக்க சொன்னான் என்று ஏதோ சொன்னாள். பொய் கோபமாக அம்மாவை பார்த்தாள்.
பாடசாலை முடிந்து போகும்போது அடிக்கடி என்னை குறு குறு என்று பார்ப்பார். ஐயோ.. ஏன் இப்படி வெக்கமே இல்லம பாக்கிறார் என்று சிலசமயம் கோவமா அல்லது வேறு ஏதும் உணர்சியா என்று தெரியாத ஒரு வினோத உணர்வு எழும். பாவமாகவும் இருக்கும். வெக்கமாகவும் இருக்கும். எனக்கே சிரிப்பு வரும். மெல்ல மெல்ல காதல் துளிர் விட்டது. அவர் என்னை விழுங்குவது மாதிரி பார்பதிலேயே அவர் என்னை விரும்புவது அப்பட்டமாக தெரிந்தது. வேண்டும் என்றால் இவரே சொல்லட்டும். நான் ஒன்றும் சொல்ல மாட்டன் வேணும் என்றால் பார்ப்பம்.
அடிக்கடி துளசி அக்காவிடம் இவரை பத்தி கேப்பேன். முதல் சாதாரணமாக சொன்னவங்க நான் நோண்ட ஒரு மாதிரி பார்த்தாங்க. அதோட கேக்குறதை நிப்பாட்டிட்டன். அவர் அக்காவுடன் கதைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக காதல் தவிப்புகள் ஊடுருவின,ஓவ்வொரு நாளும் தண்ணி எடுக்க பிள்ளையார் கிணத்தடி போவன், இவர் அப்பாதான் வழமையா வருவார் அங்க தண்ணி அள்ள. கேட்டில நின்று பார்ப்பார் இவர் நான் குடத்தோட போறத. அதுக்குள்ள இளிப்பு வேற.... ஏன் இவர் இன்னும் தண்ணியள்ள வரல என்று நினைக்க இவர் வாறார் கிணத்தடிக்கு. சிரிப்பாகயிருந்தாலும். அவஸ்தையான இன்பமாக இருக்கும் அப்போது. அது ஏனோ பிடித்திருந்தது. ஓவ்வொரு நாளும் அவரை பார்க்க முடியும் என்று ஒரு சிலிர்ப்பான இனம் புரியாத வெக்கம் இருந்தது. நான் எப்படி மாறிவிட்டேன். அடிக்கடி கண்ணாடியை பார்க்க வெக்கம் வந்தது.
அடிக்கடி சகஜமாக கதைத்தார். அவர் கதைக்கும்போது அவர் கண்கள் ஊடுருவுவதை தவிர்க்க முடியவில்லை. அந்த காதல் உணர்வு தொடர்ந்து கொண்டேயிருந்தது.
“இங்கவா... என்ன இது.....”
“என்னம்மா?”
“இங்க.. அந்த ராஜு வீட்டை ஏன் அடிக்கடி மினக்கிடுற...”
“எ..எ......” அம்மா ஏன் அப்படி கேட்டாளோ தெரியவில்லை.
“இங்க பாரு அவன்ட்ட கொஞ்சம் தள்ளியிரு....அவை வேறையாக்கள் தெரியும்தானே சும்மா.. அங்க போய் கிடக்காத, உன்னையும் பனைமரத்தில ஏற பழக்கிடுவாங்க,ஒன்னுகிடக்க ஒன்னு ஆகிடபோது...என்ன நீ அந்த ராஜு பொடியனோட அடிக்கடி கதைக்குற மாதிரி தெரிது.. இது எல்லாம் அவைளோட வேண்டாம்.....” அம்மா இப்படி நக்கலாக சொல்லும் போது. தூக்கி வாரியது,ஒரு பெண் தன் மனித தன்மை இல்லாமல் நிற்பது இது பற்றி கதைக்கும்போதுதான்.
அன்று ஏனோ நித்திரை வரவேயில்லை... ச்சே ஏன் இப்படி மட்டமாக இருக்கிறார்கள். தமிழ் சிங்கள பிரச்சனை அதுக்குள்ளே யாழ்பாழி மட்டுறால் அடிபாடு, அப்புறம் யாழ்ப்பாணதுக்குள்ள தமக்குள்ள நீ அது நான் இது என்று ஜாதி பிரிவினைகள். ஒரேஜாதியில் நீ அவ்விடம் நான் இவ்விடம் என்ற முறுகல். அவன் இந்த கோயில் வரக்கூடா நாம அங்க போக கூட, இவேளுக்கு இந்த தம்பிளர்ல கொடுக்க கூட... ச்சே... ஏன் நமது தமிழர்க்கு இப்படி கலாச்சார அடிப்படையில் பிரச்சனை? நமக்கு எதிரி உள்ளேயும் வெளியேயும், வடகிழக்கை ஒன்றாக ஆக்கணும் என்று கோஷம்போட, மறுக்கும் சிங்கள அரசுக்கு ஒன்று புரியவில்லை வடகிழக்கை ஒன்றா இணைத்தால்,கொஞ்ச காலம் ஒன்றாக இருந்துவிட்டு தாங்களே அடித்துப்பிடித்து ரோட்டில் உருண்டுபிரண்டு பிரிந்து விடுவார்கள்...ஹ்ம்ம்...
அவர்கள் அக்கா வீட்டு கலியாணம் நடந்தது. இவர் தான் மாப்பிள்ளை தோழன், ஷேவ் செய்து நஷனல் எல்லாம் போட்டு நிற்பவரை பார்க்க நல்லாத்தான் இருந்தது. இவரையே பார்த்து கொண்டேயிருந்தேன். என் பார்வை அவர் கண்டுகொண்டதாக தெரியவில்லை. சுவாரசியமாக அந்த வினோத உணர்வு இருந்தது. தவிர்க்க முடியவில்லை.
அப்பாவும் அம்மாவும் சாப்பிடவில்லை. சுருக் என்று இருந்தது. எதற்கு இந்த வெளிபாசாங்கு? சிரித்து கதைப்பது, தங்கட வேலை நடக்கணும் என்றா மட்டும் ஜாதி தெரியாது. எதோ ஒரு பக்கத்தில் வலித்தது ரொம்பபே......
அம்மா ஏனோ கத்தினாள் “ஏன் நீ அங்க சாப்பிட்டனி??? உனக்கு எங்க இருந்து இந்த திமிர்  போகக்கவே சொன்னான் இல்லோ.. போய் இருந்திடுவிட்டு சாப்பிடாம வரனும் என்று...”
“ஏன் இப்படி கேவலமாக இருக்குறீங்க.... ச்சா வெக்கமாக இருக்கு.. மனிசரா நீங்க....” புட்டு பானையை தூக்கியேறிந்தேன்
“ஏய் என்ன என்ன..? என்னடி நினைச்சிட்டிட்டு.. நானும் பாக்குறன் நீ அவனயே பாத்திட்டு இருக்குற, இளிக்குற அங்க...”
“ஓம் நான் அவர விரும்புறன்....” நான் திடும் என்று சொன்னதை, நானே நம்பாமல் சுதாகரிக்க முதல் அம்மா குடுமியை பிடித்து அறைய அப்பா குறுக்க வர..... ரொம்பவே அல்லோலப்பட்டது.
ரொம்பவே அழுதேன்... இப்ப நினைக்கும்போதும் வலித்தது... அந்த சோகம் இப்பவும் கண்ணில் வடிந்து. அதற்கு பிற்பாடு என்னை அங்கே போகவிடுவதில்லை. வீட்டையே இருந்தேன். அப்பா வேறே மிகவும் சஞ்சலபட்டார். நீ சொந்தத்தில் தான் கலியாணம் பண்ணணும் அதுதான் பாதுகாப்பானது இப்போ உனக்கு ஒன்றும் புரியாது என்றார். அப்போது புரியவில்லை, இப்போது அது புரிந்தது........
சிலசமயம் அவரை காணும்போது அவர் தெரியாதமாதிரி போவார். ஏன் அப்படி என்று புரியவில்லை. ஒருவேளை அப்பா அம்மா ஏதும் சொன்னார்களா அவருண்ட வீட்டை?. பாவம் அவர் விரும்புறாரா இல்லையா ஒன்றும் வெளிப்படையாக பேசவேயில்லை. நான்தான் ஏதும் பிழையாக விளங்கிக்கொண்டேனா? ஹ்ம்ம்... மெலிதாக குற்ற உணர்விருந்தது. அவர் பல்கலைகழகம் போய்விட்டார். கொஞ்ச நாள்ல அவர்கள் வீடு மாறி போய்விடார்கள்.
அவர் இல்லாத கிணத்தடி ரொம்பவே இடைஞ்சலாகயிருந்தது. அதன் நினைவுகள் சுழன்றவண்ணம் இருந்தது. விடுபட முடியவில்லை சோகம் வடிந்தபடியே இருந்தது. அவரை எங்கேயாவது பார்க்கமாட்டமா என்று ஏங்கியது உண்டு. துளசி அக்கா வரும்போது அவரை பத்தி கேக்க விருப்பம் ஆனால் கேக்க வில்லை.
அதன்பின் மாமா மகன் அகிலனை கலியாணம் பண்ண பேச்சுவார்த்தை தொடங்கியது. என்னை எதுவும் அவர்கள் கேக்கவில்லை. செய்துகொண்டேன். இனிமையாகவே அந்த பந்தம் அமைந்தது. அகில் என்னுடனே எங்கள் வீட்டில் இருந்தார். அப்பாவும் அம்மாவும் ஊருக்கே போய் விட்டார்கள். மெல்ல மெல்ல அந்த வினோதவாழ்க்கை பழகியது. ரொம்ப நாள் ஆகியும் என்னால் குழந்தை பெத்துக்க முடியவில்லை. நான்கு வருடத்துக்கு அப்புறம் கருத்தரித்து அவள் பிறந்தாள்.
நினைவுகள் தாக்க, அதில் இருந்து விடுபட்டு ராஜேந்திரனை பார்த்து புன்னகைத்தேன். அவர் தயங்கிநின்றார்.. உள்ளே கூப்பிட வந்தார். மழை பெலக்க தொடங்கியது...
“எப்படி இருக்குறீங்க? என்னை தெரியுதா? “ என்றார். பேர்டிக்கோவுக்கு உள்ளே வர தயங்கினார்.
“அட வாங்க வாங்க உள்ள வாங்க, ஏன் அங்க நிக்குறீங்க” மெலிதாக உள்ளே வந்தார். முன் ஹோலில் பிரம்பு நாற்காலியில் அமர வைத்தேன்.
“எப்படி இருக்குறீங்க.....?” அவர் புன்னகைக்க கஷ்டபட்டார்.
“...ம்ம்...இருக்குறம்.. அக்கா எப்படி? நீங்க இப்ப எங்க இருக்குறீங்க?”
“அக்கா.. இருக்குறா.. ரெண்டு பிள்ளைங்க....உங்க அப்பா அம்மா எங்கே..?” என்றார்
“அவங்க ஊருக்கு போட்டாங்க..அங்க தான் இப்ப... நானும் ஹஸ்பண்டும்தான் இங்க..அம்மா அடிக்கடி வருவாங்க.. நேற்றுதான் போனாங்க..”
“ஓ.. அவர் எங்க?”
“வெளில போட்டார் இப்ப வருவார்..நீங்க இப்ப எங்க? கலியாணம் ஆச்சா?”
“நான் இப்ப சிங்கப்பூர்ல வேலை...லீவுக்கு வந்தன், சும்மா ஒருக்கா உங்களை பார்த்துட்டு போலாம் என்று வந்தன்...கலியாணம் இன்னும் பண்ணிக்கவில்லை....”
ஏதோ.. ஒரு வினோத உணர்வு இருந்தாலும்.. “ஏன் பணிக்கல....”
“ம்ம்..நான்தான் வேண்டாம் என்றன்.. இந்தமுறை செய்து வைக்குறதுதான் என்று வீட்டுகாரர் விடாபிடியாக நிக்கினம்...” என்று மெலிதாக சிரித்தார்.
மாபிள்கப்பில் தேத்தண்ணி கொடுக்க விநோதமாக பார்த்து வேண்டிகொண்டார். என் பார்வையை அடிக்கடி தவிர்த்தது புரிந்தது.
குழந்தை அழுது கேட்டது...
“உங்க குழந்தையா.. சொல்லவேயில்லை..எப்ப பிறந்தது, இதபத்தி நீங்க கதைக்கவேயில்லை பார்க்கலாமா?”
தயங்கியவாறு அவரை தொட்டிலுக்கு அழைத்துச்சென்றேன். ஆர்வமாக பார்த்த அவருக்கு அந்த வித்தியாசம் உடனே தெரிந்து இருக்க வேண்டும். அவர் முக மாறுதல் அபத்தமாக காட்டி கொடுத்தது. என்னிடம் ஏதும் கேக்கவில்லை.
இடுப்புக்கு கீழ் பகுதி வளைந்து நெளிந்து இருந்தது. டாக்டர்கள்  நிறைய மரபணுக்கள் சம்பந்தமாக எதோ சொன்னார்கள் ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. அப்பா அப்போது சொன்னதும் புரிந்தது, இரத்த சொந்தத்தில் செய்தால் சில சமயம் இப்படி ஆகும் என்றார்கள். என் பிள்ளை ஊனமாக பிறந்திருந்தது...
                                  


Comments

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP