கடவுச்சீட்டு நாவல் - சிறுகுறிப்பு

>> Saturday 27 June 2015

துப்பாக்கி சந்தங்கள் ஒலிக்கும் ஈழத்து மக்களின் வாழ்வியலைப் பதிவுசெய்யும் இலக்கியங்கள் மத்தியில் இன்னும் ஆழமாகக் கவனிக்கப்படாமல் விட்டப்பட்ட முக்கியமான பக்கம் புலம்பெயர்வு. புலம்பெயர்வின் வலிகளையும், புலம்பெயர்ந்தவர்களின் சங்கதிகளின் எதிர்காலப்போக்கையும், மாற்றுக் கலாச்சாரத்துடன் இணைந்து சிக்கித்தவிக்கும் நம்மவர்களின் காலச்சார மாற்றங்களையும், நுட்பமான விளைவுகளையும் சொல்லும் நாவல் வி.ஜீவகுமாரனின் கடவுச்சீட்டு.

கடவுச்சீட்டு ஒரு நாட்டின் அடையாளமாக இருக்கின்றபோதும் புலம்பெயர் மக்களின் அந்தரங்க குறியீடாக இருக்கும் காரணத்தினால் நாவலின் தலைப்பு கடவுச்சீட்டாக இருக்கின்றது.

யாழ்ப்பாணச் சமூகமட்டத்தில் ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்துக் காதலித்துத் திருமணம் செய்த தமிழ்,சுபா என்ற இளம் தம்பதியினரின் புலம்பெயர்வு வாழ்கையையின் நகர்தலை நவால் பேசுகின்றது. ஏஜென்றின் துணையுடன் விமானத்தில் அகதி அந்தஸ்தைப் பெற ஜெர்மனியை நோக்கிப் பயணமாகின்றார்கள். ஜெர்மனியில் இருந்து களாவாக டென்மார்க்கு பயணமாகின்றார்கள், அவர்களைப்போலப் புலம்பெயர வந்துள்ள ஏனைய தமிழர்கள் ஊடக கதை நகர்த்தப்படுகின்றது.

மூன்று முக்கியப் பாகமாக நாவல் நகர்ந்கின்றது. முதலாவது பாகத்தில் புலம்பெயரும் பயண அனுபவங்களைப் பேசுகின்றது. விமானத்தில் பறப்பதும் விமானக் கழிவறையில் கடவுச்சீட்டை கிழிப்பதுமாக ஆரம்பிக்கின்றது. ஜெர்மனிசென்று அவர்களின் அகதிமுகாமில் தங்கவைக்கப்படுகின்றார்கள். வேறு தமிழர்களும் அறிமுகமாகின்றார்கள். டென்மார்க்கில் அகதிகளுக்கான உதவித்தொகை அதிகம் என்பதுக்கு இணங்க பெரும்பாழானவர்கள் டென்மார்க் செல்ல விருப்பம் காட்டுகின்றார்கள். பெற்றோல் பவுசர்களிலும், பன்றிகளின் ஏற்றிச்செல்லும் பாரிய வாகனங்களிலும் நெறிப்பட்டு மூச்சுமுட்ட அவர்களின் பயணங்கள் அபாயகரமாகத் தொடர்கின்றன. எள்ளலான நகைச்சுவை பேச்சோடும் மனைவியையும் ஐந்து மகள்மாரையும் டென்மார்க் வரவழைத்து வாழவிரும்பிய செல்லத்துரையண்ணனின் பெரும்கனவுகள் பெற்றோல்வண்டியில் கருகிய அவரின் உடலோடு முடிகின்றது. அவர்களுடன் பயணித்த லெபனான் குழந்தைகள்,மனிதர்கள் உற்படப் பலர் தீயில் வெந்து உருக்குலைந்து சிதைகின்றார்கள். எதிர்கால வாழ்க்கையின் உயிர்மேலான ஆசை வாழத்துடிக்கும் தவிப்புகளுக்காகப் போராட்டத்தில் புலம்பெயரும்போது ஆசைகளும் கனவுகள் யாருக்கும் தெரியாமல் பயணங்களிலே கருகி உடல்களோடு சிதைகின்றது. அவர்களின் உடல்கள் காட்டுப்பாதையில் யாருக்கும்தெரியாமல் எரியூட்டப்படலாம் என்பதினை வாசிக்கும்போது ஆழமாகத் தாகத்தைப் பெரும்மூச்சோடு இயல்பாகத்தருகின்றது.

டென்மார்க் நிலப்பரப்பில் அகதி அந்தஸ்து கிடைக்கப்பெற்று அவர்களின் மொழியைக் கற்றுக்கொள்வதில் சிரமங்களைத் தமிழர்கள் எதிர்நோக்கும் விடயங்களும் அவர்களின் கல்விநடவடிக்கைகளுடன் பேசப்படுகின்றன.

இரண்டாவது பகுதியில் அகதி அந்தஸ்து கிடைக்கப்பெற்று நிரந்தரமாக வாழத்தொடங்கிய மக்களின் நுண்ணியப் பிரச்சனைகளைப் பேசத்தொடங்குகின்றது. புலம்பெயர்ந்தாலும் தமிழர்கள் அனைவரும் ஒரே ஊரில் ஒன்றாகத் தங்கி குட்டியாழ்ப்பாணமாக இயங்குகின்றார்கள். புலம்பெயர்ந்தாலும் சாதீய கட்டமைப்பை விட்டுகொடுக்காமல் பேணும்தன்மையைக் கௌரி அன்ரி, மணியண்ணைப் பாதிரங்களுன் ஊடக அழகியல்தன்மையுடன் யதார்த்தமாகப் பதியப்படுகின்றது. சிவாஜினி,செந்தில் காதல் பதியப்பட்ட இடங்களுடன் முரண்பாடுகளுடன் சொல்லப்படுகின்றன. சொல்லமுடியா துன்பங்கள் மத்தியிலும் புலம்பெயர்ந்து வேறுதேசம் சென்றபோதிலும் தமிழர்கள் தொடர்ந்தும் சாதீயத்திணை முன்னிறுத்தும் மடத்தனங்களைப் பார்க்க வேதனையாகவும் இருக்கின்றது.

தமிழ்,சுபா இருவரின் பிள்ளைகளின் வளர்ச்சியின் போக்கையும் டென்மார் காலச்சாரத்தில் தங்களுது பிள்ளைகள் தொலைக்கப்போவதை எண்ணி வருந்தம் அடையும் பெற்றோர்களின் மனப்போக்குடன் நாவல் வேகமாக நகர்கின்றது. அதே நேரம் இயக்க நடவடிக்கைகளுக்கு நிதிசேர்க்கப்படும் திரைமறைஅரசியல்களும் பதியப்படுகின்றன.

மூன்றாவது அத்தியாயம் மிகவும் உக்கிரமான அத்தியாயம். தமிழ்,சுபா தம்பதியினரின் பிள்ளைகளின் காலச்சாரப் போக்குகள் பெற்றோர்களைச் சிதைகின்றது. டென்மார்க் கலாச்சாரங்களை இயல்பாக எதிர்கொள்ளும் பிள்ளைகளும் அதன் மாறுதல்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் பெற்றோர்களின் உளவியல் போக்குகள் ஆழமாகப் பதிவாகின்றது.

கடவுச்சீட்டில் அகதிகளாக வரும் தமிழ்,சுபா தம்பதியினர் தம் வயதுக்கு வந்த இரு பெண் பிள்ளைகளை டென்மார்க்கின் ஒவ்வாத கலாச்சாரச் சூழலுக்குத் தொலைத்து உளவியல் நெருக்கடியில் சிதைந்து புலப்பெயர்ச் சூழலை அடியோடு வெறுத்து சொந்த நாட்டுக் கடவுச்சீட்டை அந்திய நாட்டுக் கழிவறையில் கிழித்துப் போட்டு புலப்பெயர் வாழ்வைத் தொடங்கிய அவர்களே சொந்த நாட்டின் கழிப்பறை ஒன்றில் தம்மையும் தம் எளிய குடும்பத்தைச் சிதைத்து அழித்துநொறுக்கிய புலப்பெயர்ந்த நாட்டின் கடவுச்சீட்டை கிழித்துப் போடுவதுடன் தம் புலம்பெயர் வாழ்வை நிராகரித்து மீண்டும் சொந்த நாட்டில் அமைதியாகச் சிறிய குடும்பமாகப் பிள்ளைகளின் துணையின்றி வாழ எத்தனிக்கின்றார்கள்.

ஆர்ப்பாட்டமான வர்ணனைகள் இன்றி இயல்பாக எளிமையான நடையுடன் நாவல் சீறிப்பாய்கின்றது. கூறிய கத்திமுனையினால் சதைகளைக் கீறிச்செல்வதுபோல் நாவிலின் சொல்லாடல்களும் கதையின்போக்கும் நீட்சியாக அமைந்திருக்கின்றது. ஒரே பிடியில் நாவலை முழுமூச்சாக வாசிக்கமுடிகின்றது.

புலம்பெயர்வாழ்கையின் அவலங்களை நுட்பமாகப் பதிவுசெய்திருக்கின்றது. இரண்டு தலைமுறைகளின் இடைவெளிகளைக் கச்சிதமாக ஜீவகுமாரன் பதிவுசெய்திருக்கின்றார். ஐரோப்பிய நாட்டின் இனத்துவேசங்களையும், மத ஒடுக்குமுறைகளைம் குறிப்பிடத்தவறவில்லை. அதே நேரம் இலங்கைத் தமிழானால் ஏமாற்றப்பட்ட கரீனாவின் பாத்திரம் உற்பட, அகதிகள் கௌரவமாக அதிகாரிகளினால் நடத்தியது உற்பட வெகுவியல்பாகப் பதிவாகியுள்ளது.

நாவல் படித்துமுடிய சுபா,தமிழின் காதல்கள்,சுமிதா,லக்ஷனாவின் கலாச்சார மாறுதல்கள், வண்டிக்குள் எரிந்த செல்லத்துரயண்ணையின் குடும்பங்களின் நிறயாசைகள், ஏமாற்றப்பட்ட கரீனா, பென்ரா ரீச்சர், கௌரி அன்ரி,சிவாஜினி,காதல் விரத்தியில் தற்கொலை செய்த செந்தில், நகரசபை அழைத்துச்சென்ற சிவமதியின் பிள்ளைகளின் எதிர்காலங்கள் என்று பலவிடயங்கள்  எம்மிடம் சிக்கலாகப் பேசும்.

ப.சிங்காரம் விருதுபெற்ற இவ்நாவல் புலம்பெயர் இலக்கியங்களில் எப்போதும் தனித்துவ இடத்தில் இருக்கும்.



Read more...

எஸ்.ராமகிருஷ்ணனின் செகாவின் விருந்தாளி

>> Tuesday 16 June 2015

எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைத்தொகுப்பான நீரிலும் நடக்கலாம் தொகுப்பில் பதினைந்து சிறுகதைகள் உண்டு. அனைத்தும் பல்வேறு விசித்திரமான வாசிப்பனுபவங்களைப் பரவசமாகத் தரக்கூடியது. அதில் ஐந்தாவதான சிறுகதையாக இடம்பிடித்துள்ள சிறுகதை செகாவின் விருந்தாளி.

ருஷ்ய எழுத்தாளர்களே என்னை வழிநடத்துகின்றார்கள். அவர்களைக் குருவாகக் கொண்ட ஏகலைவனாகவே என்னை உணர்கின்றேன். இது எஸ்.ராமகிருஷ்ணன் அவரின் கைப்பட எழுதிய குறிப்பு. எஸ்.ராமகிருஷ்ணன் ருஷ்ய எழுத்தாளர்கள் மீது அதிகம் பிரியம் வைத்திருப்பவர். ருஷ்ய இலக்கியத்தில் மிகுந்த ஆழமான ஈடுபாடுகொண்டவர். தொடந்தும் தன் வலைத்தளத்தில் ருஷ்ய எழுத்தாளர்கள் தொடர்பாக எழுதிவருபவர். அவர்களின் பாதிப்பில் தன்னைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்பவர்.

ருஷ்ய எழுத்தாளர் செகாவினை தன்னுடைய முக்கியமான குருவாக முன்னிலைப் படுத்துபவர் எஸ்.ராமகிருஷ்ணன். செகாவின் வாழ்க்கை, அவரது சிறுகதைகள், அவர் குறித்த புத்தகங்கள், சினிமா எனச் செகாவைக் கொண்டாடும் விதமாகச் செகாவ் வாழ்கிறார் என்ற தொடரை உயிர்மை இதழில் எஸ்..ரா எழுதியதும் குறிப்பிடத்தக்கது. இலக்கிய உலகில் சிறுகதை வடிவத்துக்கு மிகச்சிறந்த கலைவடிவம் கொடுத்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் ஆன்டன் செகாவ் என்பதினை மறுதலிக்கமுடியாது. வெறும் தனிமனித வரலாற்று அனுபவங்களாக இருந்த நாவல் வடிவத்தை மனிதநேயமும் கருணையும் தத்துவ விவாதங்களும் கொண்ட பெரும் படைப்புக்களாக ஆக்கியதில் தாஸ்தாயவஸ்கி மற்றும் தால்ஸ்தாய் ஆற்றிய பங்கிற்குச் சமனான இடத்தினைச் செகாவிற்கும் கொடுக்கவேண்டும். செகாவ் தொழில் ரீதீயாக மருத்துவராக இருந்தார். "மருத்துவம் எனது சட்டபூர்வமான மனைவி, இலக்கியம் எனது வைப்பாட்டி" என அவர் பகிரங்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆன்டன் செகாவ்
செகாவின் விருந்தாளி சிறுகதையில் எஸ்.ரா தன் மானசீகமான குருவான செகாவினை பாத்திரமாக்கி உயிர்கொடுத்துக் காகிதங்களில் நடமாட விட்டுள்ளார். தமிழில் செகாவினை பாத்திராமாக்கி எழுதப்பட்ட முதலாவது படைப்பு இதுவாகவேயிருக்கும்.

மிகச்சிறந்த புனைவியல் நுட்பத்துடன் சிறுகதை குளிர்மையாக ரஷ்ய நிலப்பரப்பில் பயணிக்கின்றது. செகாவ் படிப்பதற்கும் எழுதுவதற்கும் மிகவும் சௌகரியப்படும் இயற்கைச்சூழல் நிரம்பிய மெலிகோவோ பிரதேசத்தில் பண்ணைவீடு ஒன்றை வேண்டிக் குடியேறியுள்ளார். அவர் தொழில்ரீதீயான மருத்துவராக இருப்பதினால் அவரைத்தேடி அதிகமான நோயாளிகள் மருத்துவத்திற்கு வந்துபோகின்றார்கள். அப்படியான சூழல்பொழுதில் செகாவினைத்தேடி இகோர் என்ற இளைஞன் வருகின்றான். அவனோடு உரையாடல் வடிவில் சிறுகதை நகர்கின்றது. அவன் கூறும் விடயத்தில் கவரப்பட்ட செகாவ் அவனோடு மருத்துவம் பார்க்கப் பயணிக்கின்றார்.

ருஷ்ய நிலப்பரப்பை எழுத்துகளால் வடிக்கும்போது மிகநுட்பமாக அவ் நாட்டுச் சூழலின் மண்வாசனைகளைக் கொண்டுவந்திருக்கின்றார் எஸ்.ரா. வீட்டுச்சூழலை வர்ணிப்பதிலிருந்து லேப்டா ஏரியை வர்ணிப்பது உற்பட அனைத்தும் ருஷ்ய வாடையுடன் துமிக்கின்றது. அவ் நாட்டுக் குடிமக்களின் மனவென்ன ஓட்டங்கள் இப்படிதான் நகரும் என்பதினைக்கூடத் தெளிவாகக் கதையடுக்குகளில் செருகப்பட்டு வரையப்பட்டுள்ளது.

செகாவின் பாத்திர கட்டமைப்புகள் அவரின் பார்வைகள், யோசிக்கும்திறன் உற்பட அணைத்து செயல்பாடுகளும் மிகப்பெரிய தேடலுடன் விரிந்திருக்கின்றது. எஸ்.ராவின் அபிமான எழுத்தாளனாகச் செகாவ் இருப்பதினால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறுகள், அவரின் இலக்கிய முன்னோடிகள் என்று பரந்து யதார்த்தமாக விரிகின்றது. அவரின் சகோதரி செடிகளை வெட்டி அழகாப்பதைக்கூட அவரின் கண்ணோட்டத்தில் எப்படிப் பார்க்கின்றார் என்பது ஆழமாப் பதியப்பட்டிருக்கின்றது.

இகோரின் வளர்ப்பு நாயன விக்கோவின் பிரச்சனையை இகோரின் பாத்திரத்தின் உரையாடல் மூலம் வெளிப்படுத்தும் எழுத்தின் நுட்பம் சிலிர்க்கவைக்கும். சிறுகதையின் மையமே அதனைச் சுற்றியே பிணைக்கப்பட்டுள்ளது. எளிமையான எஸ்.ராவின் நடையில்விரியும் இச் சிறுகதையின் புனைவு வாசிப்பவனின் மனதில் கட்டமைக்கும் காட்சிப்படிமம் தர்தரூப்பமாக நீங்காத இடைதைப் பிடித்துக் கொண்டுடிருக்கும்.

நிஜத்தையும் புனைவையும் எழுத்தில் வடிக்கும்போது தேர்ந்தவாசகன் எது நிஜம் எது புனைவு என்பதினை கண்டறிந்துவிடுவான் என்பதினை விளக்கும் இடங்களோடு கதையின் போக்கு திரும்பும் முக்கியவிடம் சுவாரசியமாகப் பரவசம் கொள்ளச் செய்யும். நீண்ட நேரம் பாதிப்பையும் புனைவின் திறனையும் வியக்கவைக்கும். எஸ்.ராவின் மிகமுக்கியமான சிறுகதைகளில் செகாவின் விருந்தாளி சிறுகதைக்குத் தனியிடன் உண்டு.


Read more...

தவறிப் பிறந்த தரளம் - குறும்பட விமர்சனம்

>> Sunday 7 June 2015


போர்ச்சூழல் முடிவடைந்தபின்னும் சிறுவர்களுக்குள் புகுந்திருக்கும் உளவியல் நெருக்கடிகளை நெருடிப்பார்க்கும் குறும்படம் தவறிப் பிறந்த தரளம். போர்காலப் பகுதியில் வாழ்ந்த சிறுவனின் மன என்னவோடங்களையும் அவனின் வாழ்வியல் மாறுதல்களையும் பதிவுசெய்ய எத்தனித்துள்ளார் இயக்குனர் வதீஸ் வருணன்.

நுட்பமாகச் சிறுவனின் உளவியல் பின்னணிகள் காட்சிப் படிமத்தில் சொல்லப்படுகின்றன. சிறுவனுக்கும் தந்தைக்குமான உறவின் விரிசல்கள், தாய்க்கும் சிறுவனுக்கும் இடைலான உறவின் ஸ்பரிசங்கள் சரியான பரிமாணத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. தன் தந்தையைப்பற்றிக் குறிப்பில் எழுதும்போது தந்தைக்கும் தனக்கும் உள்ள உறவின் சிக்கல்தன்மையை வசனங்களாக எழுத்துவடிவில் குறிப்பிடப்படும் படிமமாக்கல் சிறுவனின் மன விம்பத்தினை அட்டகாசமாக முன்வைக்கின்றது. படம் ஆரம்பிக்கும்போது கச்சிதமாகச் சிறுவனின் கதாப்பாத்திர ஸ்திரத்தை சரியான கட்டுமானங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தன்மை திரைக்கதைக்கு வலுவைத்தருகின்றன.

தனது சொந்த கிராமத்திற்கு மீளக்குடியேறிய பின்னர் சந்திக்கும் நுட்பமான உளவியல், பொருளாதார, ஒழுக்க நெருக்கடிகளை மையப்படுத்தியும் அதிலிருந்து அவன் எவ்வாறு மீள முயற்சி செய்கின்றான் என்பதையும் விளக்க இயக்குனர் பல்வேறு தளங்களுடன் திரைக்கதை நுட்பத்தினைச் செலுத்தியுள்ளார்.

தந்தையின் கதாப்பாத்திர பின்னல்களையும், பொருளாதாரப் பின்னணியையும் சித்தரிக்கும்போது காட்சிரீதியான சித்தரிப்புக்களைப் படிமமாக்கிச் சில ஒளிச் சட்டங்களிலே வெளிப்படுதியதன்மை மகத்துவமான பதிவுசெய்யப்பட்டுள்ளது. தந்தையின் பாத்திரக்கட்டுமானங்களை உருவாக்கியதுபோலத் தாயின் பாத்திரக்கட்டுமானங்கள் போதியவளவு நுட்பமாக உருவாக்கப்படவில்லை. தாய் ஒழுக்கத்தைத் தவறும் செயல்பாட்டுக்குத் தர்கரீதியான காரணங்கள் சிறுவனின் பார்வையிலோ அல்லது பொதுப்படையான பார்வையிலோ காட்சிப்படுத்தப்படவில்லை. சிறுவன் பாடசாலை செல்லும்போது இளைஞர் குழாம் அவனின் தாயாரின் ஒழுக்கத்தைப் பற்றி நகையாடுகின்ற காட்சியின்போது பார்வையாளர்களுக்குத் தாயும் ஒழுக்கமற்றவள் என்ற செய்தி தெரிவிக்கப்படுகின்றது. அது திரைக்கதையின் முக்கியத்திருப்பமாக இருந்தபோதும் அதனை உள்வேண்டிக் கொள்வதில் திகைப்புள்ள சிக்கல் தன்மை உடனடியாக உருவாகின்றன. தாயின் ஒழுக்கம் தவறும்தன்மைக்குக் காரணமாகக் கணவனின் திருப்தியற்ற சச்சரவான வாழ்க்கை முறையினைப் பார்வையாளன் பொதுப்படையாகத் தொடர்புபடுத்தி உய்த்தறிந்துகொள்ள முடியும். இருந்தபோதிலும் அதற்கான வலிமைப்படுதல் சிறிதளவு தவறியிருக்கின்றது.

ஒளிப்பதிவு சீராகக் காட்சிகளைப் பறந்துவிரிந்து நுட்பமாகப் படம்பிடித்துள்ளது. சமந்த தசநாயக்கவின் ஒவ்வொரு ஒளிப்பதிவுச்சட்டமும் மகத்துவமாக அமைந்திருக்கின்றது. நீட்சியான படிமமாக்கல் படக்கோர்ப்பின்போது இன்னும் வேகப்படுத்தப்பட்டு இருக்கலாம். மெலிதான இழுபட்ட தன்மையை அதீதமான தொடர்ச்சியான காட்சிகள் உருவாக்க எத்தனித்துள்ளன.

படத்தின் ஒவ்வொரு காட்சிப்படிமமும் அழுத்தம் நிறைந்ததாகவிருப்பதினால் பின்னணி இசைக்கான தேவை அற்றுப்போகின்றது. இதனைச் சரியாகக் கணித்துப் பின்னணி இசையயை நுட்பமாக இயக்குனர் தவிர்த்துள்ளவிதம் இயக்குனரின் கற்பனை புனைவியல் தன்மையை மிளிரலடையச் செய்திருக்கின்றது.

முடிந்தளவுக்கு இயல்பான நடிப்பினை தர்மலிங்கம், பிரியா, பிரகாஷ் ஒப்பேற்றியுள்ளனர். பிங்கள வடிவமைப்புகள் செயற்கைத்தனமின்றி இயல்பாக அமைந்திருகின்றன. உள்ளடக்கம் நேர்த்தியான வடிவத்துடன் அமையப்பெற்றிருக்கின்றது. திரைக்கதையில் இன்னும் நேர்த்தியைக் கொண்டுவந்திருக்க முடியும். மிகநுட்பவியல் தவறுகளைத் தவிர்த்து இப்படம் கவனிக்கத்தக்க குறும்படம்.

போரினால் பாதிக்கப்பட்ட எமது சமுதாயத்தை இயல்பான நிலைக்குக் கொண்டுவர பொருளாதாரம்,கல்வியோடு நின்றுவிடாமல் சமூகக் கட்மைப்பையும் சீர்திருத்த வேண்டியிருகின்றது. அதனை உணர்த்த இக்குறும்படம் முயன்றிருக்கின்றது. இக் குறும்படம் முதலாவது கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவிலும் ஜப்பானின் இரண்டாவது ப்லிம்ஏசியா திரைப்பட விழாவிலும்  தெரிவாகி திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் பார்வையிட இங்கே சொடுக்கவும்.


Read more...

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP