எஸ்.ராமகிருஷ்ணனின் செகாவின் விருந்தாளி

>> Tuesday 16 June 2015

எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைத்தொகுப்பான நீரிலும் நடக்கலாம் தொகுப்பில் பதினைந்து சிறுகதைகள் உண்டு. அனைத்தும் பல்வேறு விசித்திரமான வாசிப்பனுபவங்களைப் பரவசமாகத் தரக்கூடியது. அதில் ஐந்தாவதான சிறுகதையாக இடம்பிடித்துள்ள சிறுகதை செகாவின் விருந்தாளி.

ருஷ்ய எழுத்தாளர்களே என்னை வழிநடத்துகின்றார்கள். அவர்களைக் குருவாகக் கொண்ட ஏகலைவனாகவே என்னை உணர்கின்றேன். இது எஸ்.ராமகிருஷ்ணன் அவரின் கைப்பட எழுதிய குறிப்பு. எஸ்.ராமகிருஷ்ணன் ருஷ்ய எழுத்தாளர்கள் மீது அதிகம் பிரியம் வைத்திருப்பவர். ருஷ்ய இலக்கியத்தில் மிகுந்த ஆழமான ஈடுபாடுகொண்டவர். தொடந்தும் தன் வலைத்தளத்தில் ருஷ்ய எழுத்தாளர்கள் தொடர்பாக எழுதிவருபவர். அவர்களின் பாதிப்பில் தன்னைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்பவர்.

ருஷ்ய எழுத்தாளர் செகாவினை தன்னுடைய முக்கியமான குருவாக முன்னிலைப் படுத்துபவர் எஸ்.ராமகிருஷ்ணன். செகாவின் வாழ்க்கை, அவரது சிறுகதைகள், அவர் குறித்த புத்தகங்கள், சினிமா எனச் செகாவைக் கொண்டாடும் விதமாகச் செகாவ் வாழ்கிறார் என்ற தொடரை உயிர்மை இதழில் எஸ்..ரா எழுதியதும் குறிப்பிடத்தக்கது. இலக்கிய உலகில் சிறுகதை வடிவத்துக்கு மிகச்சிறந்த கலைவடிவம் கொடுத்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் ஆன்டன் செகாவ் என்பதினை மறுதலிக்கமுடியாது. வெறும் தனிமனித வரலாற்று அனுபவங்களாக இருந்த நாவல் வடிவத்தை மனிதநேயமும் கருணையும் தத்துவ விவாதங்களும் கொண்ட பெரும் படைப்புக்களாக ஆக்கியதில் தாஸ்தாயவஸ்கி மற்றும் தால்ஸ்தாய் ஆற்றிய பங்கிற்குச் சமனான இடத்தினைச் செகாவிற்கும் கொடுக்கவேண்டும். செகாவ் தொழில் ரீதீயாக மருத்துவராக இருந்தார். "மருத்துவம் எனது சட்டபூர்வமான மனைவி, இலக்கியம் எனது வைப்பாட்டி" என அவர் பகிரங்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆன்டன் செகாவ்
செகாவின் விருந்தாளி சிறுகதையில் எஸ்.ரா தன் மானசீகமான குருவான செகாவினை பாத்திரமாக்கி உயிர்கொடுத்துக் காகிதங்களில் நடமாட விட்டுள்ளார். தமிழில் செகாவினை பாத்திராமாக்கி எழுதப்பட்ட முதலாவது படைப்பு இதுவாகவேயிருக்கும்.

மிகச்சிறந்த புனைவியல் நுட்பத்துடன் சிறுகதை குளிர்மையாக ரஷ்ய நிலப்பரப்பில் பயணிக்கின்றது. செகாவ் படிப்பதற்கும் எழுதுவதற்கும் மிகவும் சௌகரியப்படும் இயற்கைச்சூழல் நிரம்பிய மெலிகோவோ பிரதேசத்தில் பண்ணைவீடு ஒன்றை வேண்டிக் குடியேறியுள்ளார். அவர் தொழில்ரீதீயான மருத்துவராக இருப்பதினால் அவரைத்தேடி அதிகமான நோயாளிகள் மருத்துவத்திற்கு வந்துபோகின்றார்கள். அப்படியான சூழல்பொழுதில் செகாவினைத்தேடி இகோர் என்ற இளைஞன் வருகின்றான். அவனோடு உரையாடல் வடிவில் சிறுகதை நகர்கின்றது. அவன் கூறும் விடயத்தில் கவரப்பட்ட செகாவ் அவனோடு மருத்துவம் பார்க்கப் பயணிக்கின்றார்.

ருஷ்ய நிலப்பரப்பை எழுத்துகளால் வடிக்கும்போது மிகநுட்பமாக அவ் நாட்டுச் சூழலின் மண்வாசனைகளைக் கொண்டுவந்திருக்கின்றார் எஸ்.ரா. வீட்டுச்சூழலை வர்ணிப்பதிலிருந்து லேப்டா ஏரியை வர்ணிப்பது உற்பட அனைத்தும் ருஷ்ய வாடையுடன் துமிக்கின்றது. அவ் நாட்டுக் குடிமக்களின் மனவென்ன ஓட்டங்கள் இப்படிதான் நகரும் என்பதினைக்கூடத் தெளிவாகக் கதையடுக்குகளில் செருகப்பட்டு வரையப்பட்டுள்ளது.

செகாவின் பாத்திர கட்டமைப்புகள் அவரின் பார்வைகள், யோசிக்கும்திறன் உற்பட அணைத்து செயல்பாடுகளும் மிகப்பெரிய தேடலுடன் விரிந்திருக்கின்றது. எஸ்.ராவின் அபிமான எழுத்தாளனாகச் செகாவ் இருப்பதினால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறுகள், அவரின் இலக்கிய முன்னோடிகள் என்று பரந்து யதார்த்தமாக விரிகின்றது. அவரின் சகோதரி செடிகளை வெட்டி அழகாப்பதைக்கூட அவரின் கண்ணோட்டத்தில் எப்படிப் பார்க்கின்றார் என்பது ஆழமாப் பதியப்பட்டிருக்கின்றது.

இகோரின் வளர்ப்பு நாயன விக்கோவின் பிரச்சனையை இகோரின் பாத்திரத்தின் உரையாடல் மூலம் வெளிப்படுத்தும் எழுத்தின் நுட்பம் சிலிர்க்கவைக்கும். சிறுகதையின் மையமே அதனைச் சுற்றியே பிணைக்கப்பட்டுள்ளது. எளிமையான எஸ்.ராவின் நடையில்விரியும் இச் சிறுகதையின் புனைவு வாசிப்பவனின் மனதில் கட்டமைக்கும் காட்சிப்படிமம் தர்தரூப்பமாக நீங்காத இடைதைப் பிடித்துக் கொண்டுடிருக்கும்.

நிஜத்தையும் புனைவையும் எழுத்தில் வடிக்கும்போது தேர்ந்தவாசகன் எது நிஜம் எது புனைவு என்பதினை கண்டறிந்துவிடுவான் என்பதினை விளக்கும் இடங்களோடு கதையின் போக்கு திரும்பும் முக்கியவிடம் சுவாரசியமாகப் பரவசம் கொள்ளச் செய்யும். நீண்ட நேரம் பாதிப்பையும் புனைவின் திறனையும் வியக்கவைக்கும். எஸ்.ராவின் மிகமுக்கியமான சிறுகதைகளில் செகாவின் விருந்தாளி சிறுகதைக்குத் தனியிடன் உண்டு.



Comments

0 கருத்துக்கள்:

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP