ஜெயமோகனின் "தம்பி" – படித்துத் தீராத சுவாரசியத்தாகம்

>> Wednesday 3 June 2015

ஜெயமோகனின் பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதை தம்பி. பிளவாளுமை உளவியல்நோயினால் பீடிக்கப்பட்டு துன்பப்படும் ஒருவனின் மன எண்ண  ட்டத்தினை மையப்படுத்தி மருத்துவரின் பார்வையில் எழுதப்பட்ட கதையிது. திரும்பத்திரும்ப வாசித்தாலும் எத்தனை நுட்பமான ஆழ்ந்த மனித மனத்தின் இருண்ட அடியாழத்தை ஊடுருவிச்செல்லும் எழுத்தென்று வியக்கவைகின்றது. மனதின் தவிப்புக்களை, உள்ளே பொதிந்துள்ள ஆழ்ந்த இரசியங்களை தொடர்வுபடுத்தி எழுதப்பட்ட இந்த சிக்கலான கதையினை வாசிக்கும்போது கிடைக்கும் ரசவம் அதிக உத்வேகம் தரக்கூடியது. 

சரவணகுமார் என்பவனுக்கு சிறுவயதில் இறந்த தன்னுடைய அண்ணனான செந்திலின் தொடுதல்கள் உணர்வுகள் திடீரென்று பயமுறுத்தும் வகையில் திரும்பக் கிடைகின்றன. செந்தில் மூளைவளராத மங்கலாய்டு பிறவி. மண்டை ஒருபக்கமாக சப்பி ஒரு கண் வெளியே பிதுங்கி இருக்கும். தடித்த உதடுகளில் இருந்து எப்போதும் எச்சில் வழியும். கண்களில் பீளை. வாயில் பெரிய மஞ்சள்நிறப்பற்கள். அதைவிட அவனிடம் ஒரு நாற்றம் உண்டு. மோசமான நாற்றம். அழுகிய புண்போல. செத்தமிருகத்தின் ஊன்போலஒரு குமட்டும் நாற்றம். சரவணனின்  அம்மா எப்போதும் செந்திலோடு பரிவுடன் எப்போதும் அவனுடன் இயங்குகின்றார். சரவணனுக்கு  செந்திலை கண்டாலே பிடிப்பதில்லை உக்கிரமாக வெறுக்கின்றான். தன்னைப் போலவே உடலியல் அமைப்பை கொண்ட அவனது குரூபத்தோற்றத்துக்குள்ளே தன்னுடைய முகமும் உடலும் ஒளிந்திருப்பதை ஆழமாக அடியோடு வெறுக்கின்றான். அவன் பேசும்போது நடக்கும்போதும் தன்னை ஏளனம் செய்வதுபோல இருப்பதாகக் கருதுகின்றான். அவன் மூலம் யாரோ தன்னை தொடர்ந்தும் அவமதிப்பதாகக் கருதுகின்றான். அம்மா எப்போதும் செந்திலுடன் அதீத அன்புடன் இயங்குவது இன்னும் செந்தில்மேல் சரவனுக்கு  வெறுப்பை வரவைக்கின்றது.

ஆனால் செந்திலுக்கு சரவணனை ரொம்பவே பிடிக்கும். எப்பவும் அவனுடன் சுற்றித்திரிய விரும்புகின்றான். “ம்ம்ம்பி” என்று தம்பியை அழைத்தவாறு எப்போதும் சரவணன் பின் வருவான். செந்திலுக்கு எதுகிடைத்தாலும் சரவணனுக்கு கொடுப்பான். அவன் தொட்டதை சரவணன் தின்ன மாட்டான். ஆனாலும் நேராக சரவணிடம் கொண்டு வந்துவிடுவான் செந்தில். அவனைப் போட்டு சரவணன் அடிப்பான், மண்ணைவாரி வீசுவான், தள்ளிவிடுவான். என்ன செய்தாலும் செந்திலிடம் இருந்து ஒரு சிரிப்பு, “ம்ம்ம்பி” என்று ஒரு குரல். செந்திலுக்கு சிலசமயங்களில் வெறி ஏறும். பிடித்துவைத்துக் கொண்டு குமார் ஓடிவா என்று சரவணனைக் கூப்பிடுவார்கள். சரவணன் போக மாட்டான். இழுத்துப் போவார்கள்.சரவணன் போய் “டேய் செந்தில் நிப்பாட்டுடா” என்றால் அப்படியே சாதாரணமாகிவிடுவான். சிரித்தபடி ”ம்ம்ம்பி” என்பான். அந்த அளவுக்கு சரவணை செந்திலுக்கு பிடிக்கும்.

சரவணனுக்கு எட்டுவயதாகும்போது செந்திலுக்கு பன்னிரண்டு வயது. இந்தசமயத்தில் செந்தில் இறந்துவிடுகின்றான். அவன் இறந்து மறுமாதமே அம்மாவும் சோகத்துடன் இறந்துவிடுகின்றார். இவையெல்லாம் கடந்து பலவருடம் ஆனபின் செந்திலின் தொடுதல்கள் அவனின் இருப்பின் ஸ்பரிசம் திரும்பவும் சரவணனுக்கு அனுமாஷ்யமாக வாய்கின்றது. நெருக்கமாக செந்திலின் இருப்பை பலசமயம் சில சம்பவங்கள் மூலம் தன்னிடம்தானே உறுதிப்படுத்திக்கொள்கின்றான் சரவணன். எத்தனை முறை முயன்றும் தவிர்த்தும் அதன் உணர்வுகளில் இருந்து விடுபடமுடியவில்லை.குளிர்ந்த விரல்களால் செந்தில் தொடும் உணர்வுகளை சரவணன் நெருக்கமாக உணருகின்றான். செந்தில் மூச்சுவிடும்போது அவன் சுவாசக்காற்று படுவதைக்கூட சரவணன் பீதியுடன் உணர்கின்றான். அவனின் குரல்கள் சரவணுக்கு கேட்கத் தொடங்குகிறன, சில சமயம் அந்தக் குரல்களையும் அவனுடன் இன்னுமொருவர் இருப்பது போன்ற உணர்வுகளையும் அவனின் அருகில் இருப்பவர்களும் உணர்கின்றனர்.

ஒருகட்டத்தில் இதிலிருந்துவிடுபட உளவியல் மருத்துவரை அணுகின்றான் சரவணன். பல உளவியல் மருத்துவர்களைகடந்து முன்னேற்றம் அடையாமல் இறுதியில் ஓர் உளவியல் மருத்துவரை அடைகின்றான். அவர் பார்வையில் கதை ஆழமாக விரிந்துசெல்கின்றது. 

சிறுகதையின் இறுதிவரி வாசகனை முற்றிலுமாக புரட்டிப்போடும். உளவியல் அணுகள்களோடு பயணிக்கும்கதை இறுதியிலேடுக்கும் பரிமாணம் விசித்திரமான உவகையை அளிக்கக்கூடியது. தம்பிக்கும் அண்ணனுக்கும் இடையிலான வெறுப்பு,அன்பை விபரிக்கும் எழுத்தின் பரிமாணங்கள் மிக நுட்பம் கலந்த ஆழமாக அமையப்பெற்றிருக்கின்றது. உணர்ச்சிக் குவியலான கதையாக இருந்தாலும் வாசகனின் அனுபவத்திற்கேற்ப சரவணனின் உளவியல் நெருக்கடிகள் பல்வேறு அனுபவங்களை வழங்கும். நுட்பமாக உளவியல் உணர்ச்சிப்பிளம்புகளை எழுத்துகளால் நுட்பமாக வடிக்கப்பெற்றிருகின்றன.

சரவணன் செந்திலை உணரும்தருவாய்களில் சொல்லப்பட்ட புனைவுகள் மிக யதார்த்தமாக  நுண்ணிய கட்டமைப்புக்களுடன் உருவகிக்கப்பட்டுள்ளது. ஜெயமோகனின் சொல்நடையும் எழுத்தின் ஆழமும் வாசிக்கும்போது திகட்டாத இன்பப்பரவசத்தில் நீந்தச்செய்கின்றது. உரையாடல் வடிவத்தில் நகரும் சிறுகதையென்பதினால் ஆரம்பகட்ட இலக்கியவாசகர்கள் இலகுவாக இக்கதையினுள்  நுழையமுடியும். அட்டகாசமான தொடர்ந்தும் வியப்படையவும் யோசிக்கவும் வைக்கும் சிறுகதை இது.



Comments

2 கருத்துக்கள்:

ஊமைக்கனவுகள் 3 June 2015 at 21:46  

நீங்கள் கதையை விமர்சிக்கும் விதம் அருமை நண்பரே!

தொடர்கிறேன்.

Annogen 4 June 2015 at 08:05  

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP