புழு குறும்படம் - விமர்சனம்

>> Sunday 19 July 2015

விமர்சனத்தை படிக்க முதல் இவ் நான்கு நிமிட குறும்படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள். பார்த்துவிட்டு படித்தால் விஷேமாக நன்கு புரியும்.


ஒடுக்கப்பட்ட சில அந்தரங்க உணர்ச்சிக் குவியலின் வெளிப்பாட்டைத் தொடரியாக சசிகரன் ஒரேயொரு கதாப்பாத்திரம் ஊடக புழு குறும்படம் மூலம் சொல்ல முயன்று இருக்கின்றார். ஏறக்குறைய நான்கு நிமிடத்தில் பயணிக்கும் குறும்படத்தில் சொல்லவந்ததைப் பார்வையாளனுக்குச் சொல்வதில் புதுன்மையைக் கையாள எத்தனித்து இருந்தாலும் புரிந்துகொள்ள வைப்பதில் சிக்கல்தன்மையைக் கொஞ்சம் தோற்றுவித்துள்ளது. 

மூன்று தளத்தில் திரைக்கதையின் கதைசொல்லும்போக்கு இயங்குகின்றது. ஒருவர் துயில் எழுகின்றார். அலுவகத்துக்குச் செல்லத் தயாராகின்றார். அவருக்குள் ஒளிந்திருக்கும் அரவணித்தன்மையின் உணர்ச்சிகளைப் பூட்டிய அறைக்குள் வெளிப்படுத்துகின்றார். முதலாவது தளத்தில் நகரும் கதையின் மன எண்ணவோட்டம் மற்றொருதளத்தில் கருப்புவெள்ளையில் குறியீடாகக் காட்சிப்படிமாகச் சொல்லப்படுகின்றது. அதே நேரத்தில் சமாந்திரமாக இன்னுமொரு தளத்தில் கதையின் உணர்வுகள் காட்சிப்படிமாமாகக் குறியீடுவடிவத்தில் சொல்லப்படுகின்றது. இக் குறீயீடுகளைப் பொருத்திப்பார்ப்பதில்தான் பார்வையாளர்கள் கடினத்தன்மையை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. மன எண்ணவோட்டம், உணர்ச்சிகளின் வெளிப்பாடு இவற்றைக் காட்சியாகப் படிமாக்கும்போது இரண்டையும் புரிந்துகொள்ளும்படி பார்வையாளனுக்கு எந்தவித உய்த்தறியும் சலுகைகளும் வழங்கப்படவில்லை. காட்சியமைப்பின் தொடர்ச்சியில் இவை இருந்திருக்கவேண்டும். 

தனது அரவாணி உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு வாழும்தன்மையையும் இரகசியமாக அழகுபடுத்திப் பார்க்கும் இயல்பையையும் கச்சிதமாகக் காதாப்பாத்திரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பொட்டுவைத்துத் தன்னை அழகுபடுத்திப் பார்ப்பதிலும் நெற்றியில் வைத்து மிஞ்சிய குங்குமத்தை முகம்பார்க்கும் கண்ணாடியில் பூசுவதும் அற்புதமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மிகை நடிப்பில்லாமல் பெண்களின் நெளிவுகளை உடல்மொழியின் ஊடக வெளிப்படுத்தி இயல்பான நடிகனாகச் சந்தனேஷ் நிறுவியுள்ளார். 

பூட்டிய அறையில் ரகசியமாக அழகுபடுத்திப் புழுக்கம் அடையும் மன எண்ணவோட்டம் கருப்புவெள்ளை காட்சிப்படிமத்தில் சொல்லப்படும் குறியீடுகூட அட்டகாசமான வெளிப்பாடுதான். அழுக்கடைந்த முகத்தினை நீரில் கழுவக்கழுவ மீண்டும் அழுக்கடைகின்றது. தன்னை மீண்டும் மீண்டும் தனியறையில் அழகுபடுத்தித் திருப்தியடைந்தாலும் பொதுவெளியில் அதனை அழித்துவிட்டுச் சமூகத்தில் கரையும் துன்பம் கலந்தபோக்கு குறீயீடாகப் பொருந்தும்வகையில் சிறந்த கற்பனைதன்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

மூன்றாவது தளத்தில் அப்பாத்திரந்தின் பயம்கலந்த உணர்வுகள் சொல்லப்படுகின்றது. இரகசிய வீட்டில் அவனை யாரோ கடத்திவைத்துள்ளர்கள். அதில் இருந்து நைச்சியமாகத் தப்பி வெளியே வருகின்றார். தப்பித்துவிட்டோம் என்று மகிழ மீண்டும் பிடிபடுகின்றார். பூட்டிய அறையில் மற்றைய குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியாமல் தன்னைப் பெண்ணாக அழகுபடுத்தும்போது மற்றவர்கள் கவனிக்காமல் இருக்கவேண்டும் என்பதினை அப்பாத்திரம் விரும்புகின்றது. அழகுபடுத்தி லயித்திருக்கும்போது அம்மாவின் குரல்கேட்கின்றது. அனைத்தையும் உதறவேண்டியுள்ளது. தன்னை அழகுபடுத்தி இன்பம்கண்டு மகிழ்ந்தாலும் உதறிவிடும்போது மனச்சோர்வும் துன்பமும் அடைகின்றான். இதன்போது கதாப்பாத்திரத்துக்கு ஏற்படும் உணர்வுகளே குறியீடாக மேற்குறிப்பிட்டதுபோல அவனைக் கடத்திவைத்திருப்பதாகவும் அழகுபடுத்துவதை அவன் தப்பிப்பதாகவும், அழகுபடுத்தி மகிழும்போது தப்பிவிட்டதாக மகிழ்வதாகவும், அம்மாவின் குரல்கேட்டுத் குழம்பும்போது மீண்டும் பிடிபட்டுவிட்டதாக உணர்வதாகவும் காட்சிப்படிமமாக்கப்பட்டுள்ளது. மிகச்சிறந்த நுணுக்கமான கற்பனையாற்றல்தான். 

மூன்று காட்சிப்படிமத்தையும் இவை இதுதான் என்று பார்வையாளன் புரிந்துகொள்வதில் கடினத்தன்மையை எதிர்கொள்வதால் இக்குறும்படம் தடுமாறியுள்ளது. தொழில்நுட்ப அவதானிப்புகளில் ஒளிப்பதிவு சிறிதுவிலகியிருகின்றது. கடந்தாகால சசிகரனின் ஒளிப்பதிவு உருவாக்கத்தில் இவ் ஒளிப்பதிவு முன்னேற்றமானது. எடிட்டிங் இன்னும் அவசரப்படாமல் கவனித்து இருக்கலாம். இவை தவிர்த்து இக்குறும்படம் நல்லதொரு முயற்சி.



Read more...

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP