கூத்தாடி – குறும்பட விமர்சனம்

>> Tuesday 5 January 2016

 
கூத்தாடி குறும்படம் பாரம்பரிய கலைஞர்களான அண்ணவியாரின் வாழ்வியலின் ஒருபக்கத்தைப் பேச விளைகின்றது. இந்தக் குறுந்திரைப்படத்தை தபின் எழுதி இயக்கியுள்ளார். தர்சனின் ஒளிப்பதிவிலும், ஸ்ரீ நிர்மலனின் இசையிலும், ஸ்ரீ துஷிகரனின் படத்தொகுப்பிலும் குறும்படம் உருவாகி வெளிவந்துள்ளது.

பாரம்பரியமாக கூத்துக்கலையைச் செய்துவரும் பரம்பரையில் வந்த இளைஞன் ஒருவனின் பார்வையில் குறும்படம் நகர்கின்றது. தந்தை கூத்துக்கலையில் பெயர்பெற்ற அண்ணாவியார். தந்தையின் தொழில் ரீதியான பெயர் அவனை திணறச்செய்கின்றது. செல்லும் இடங்களில் கூத்தாடியின் மகன் என்ற பெயர் தொடர்ந்தும் பின்னால் துரத்தி வருவதினை வெறுக்க ஆரம்பிக்கின்றான். ஒருகட்டத்தில் நாட்டைவிட்டு வெளியேறுகின்றான். புலம்பெயர் தேசத்தில் வேலைதேடிச் செல்லும்போது அவனுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றது. 

கூத்தாடி கலையின் எழுச்சி வீழ்ச்சியினை பேசாமல், நிகழகாலத்தில் எதிர்நோக்கும் கூத்துக் கலையின் இடர்பாடுகளை பேசமால், அருகிவரும் கூத்துக்கலையின் மையப்பிரச்சனையை பேசாமல் வெறுமே கூத்துக் கலைஞர்களின் அடுத்த தமைமுறையினரின் கூத்தின் மீதான ஆர்வத்தை மட்டுமே குறும்படம் பேச விளைந்திருக்கின்றது. ஏன் கூத்துக் கலையினை நிகழ்த்துபவர்களை இன்றைய தலைமுறையினர் ரசிக்கவில்லை நக்கல் செய்கின்றார்கள் என்பதற்கு குறும்படத்தில் நுணுக்கமாக காட்சிப்படுத்த தவறியிருக்கின்றார்கள். தொலைக்காட்சி,திரைப்ட ஊடுருவல்கள் கூத்துக்கலையின் செல்வாக்கை குறைத்து அதன் புனிதத்தன்மையையும் செறிவையும் நீர்ந்துபோகவைத்துக் கொண்டிருப்பதினை குறும்படம் பேசவில்லை.


குறும்படத்தில் சித்தரிக்கும் இளைஞனின் கண்களில் எப்போதும் கூத்துக்கலையின் மேல் வெறுப்பு அணலாகக் கசிகின்றது. தந்தை காலையில் ஒத்திகை பார்க்கும்போது அல்லது பயிற்சிசெய்து பார்க்கும்போது படுக்கையில் உள்ள இளைஞனுக்கு கட்டுப்படுத்த முடியாத வெறுப்பு வருகின்றது. இந்த வெறுப்புக்கு காரணம் நிகழ்காலத்தில் அவன் எதிர்நோக்கும் துன்பவியல் சம்பவங்கள் காரணமாகச் சொல்லப்படுகின்றது. அந்தக் காரணத்துக்கு துன்பவியல் காரணத்தை நிகழ்த்துபவர்களின் மனநிலை ஏன் அப்படி உள்ளது என்பதற்கு குறும்படத்தில் விடையில்லை, நாங்களாக எமக்கு தெரிந்த காரணங்களை ஊகித்து படைப்பை நியாயம் செய்யும் வகையில் நிரப்பிப் பார்க்கவேண்டியுள்ளது. இந்த நியாயம் செய்தல் எமது நிலத்தின் பண்பாடும் பாரம்பரியமும் தெரியாதவர்களிடம் இருந்து உருவாகது. எனவே முழுமைத்தன்மையை எட்டிப்பிடிக்காத குறும்படமாகவே கூத்தாடி குறும்படம் இருக்கின்றது.

ஒளிப்பதிவு இன்னும் கவனிக்கப்பட்டிருக்கலாம் ஒளிச்செறிவுகளில் இன்னும்போதிய கவனம் எடுத்து மேன்படுத்தப்பட்டு இருக்கலாம். தனுராஜின் நடிப்பு பல இடங்களில் செயற்கைத்தனமாக இருகின்றது. தந்தையுடன் உரையாடும் காட்சிகளில் நுண்மையற்ற நடிப்பு வெளிப்படுவதினை கண்டுகொள்ள முடிகின்றது. புலம்பெயர் தேசத்தில் நிகழும் காட்சிகளை உள்ளரங்கு படப்பிடிப்பு மூலம் ஓரளவுக்கு நம்பகத்தன்மையாக உருவாக்கி இருகின்றார்கள். நேர்காணலில் அணிந்திருக்கும் உடைகள் பிரான்ஸ் தேசத்து புகலிட தமிழர்களை நினைவுபடுத்துகின்றது, கட்சிதமான உடையமைப்பு.

பின்னணி ஒலிப்பதிவு வாய் அசைவுகளுடன் பொருந்தாமல் பிசகியிருகின்றது. இவற்றில் இன்னும் தொழில்நுட்பப் சார்ந்த இறுக்கமான அவதானங்கள் தேவை. பாரம்பரிய கலைஞர்களின் வாழ்வியலை ஒதுக்கப்பட்ட குறுகிய பார்வையில் இக்குறும்படம் பேசியிருக்கின்றது. செறிவான கூத்துக் கலைஞர்களின் வாழ்வைவியல் பிரச்னைகளை பேசத்தவறியிருகின்றது.




Read more...

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP