சமூகப் போராட்டங்களும் மக்கள் மனநிலையும்

>> Monday 24 August 2015

வடபகுதி தீவகமான புங்குடுதீவில் பதினெட்டு வயது பள்ளி மாணவியான வித்தியா சிவலோகநாதன் கொடூரமான கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் விளைவாகப் பரவலான வெறுப்புணர்வு மற்றும் கண்டனங்களோடு வன்முறையும் எழுந்தன. குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்கிற கோஷம் அந்த மக்களுக்குள் ஏற்கெனவே இருந்த கூட்டுக் கோபத்தைப் பீறிட்டு வெளிப்படுத்தியது. அதுதான் மக்கள் இவ்வளவு ஆக்ரோஷமாக ஒருங்கிணைவதற்கான காரணமாகவும் அமைந்ததுக்கு அடிப்படையான காரணமாக இருந்தது எனலாம். தமிழ் மக்களின் ஒட்டுமொத்தக் கோபம் என்பது அரசியல் அதிகார போராட்டத்தின் தோல்வி நிலை, அடக்குமுறையின் தொடர் வலி, உரிமை மீறல்கள் மீதான கசப்பான நீட்சிகொள்ளச்செய்யும் ஆத்திரம் என்று பல விடயங்களிலிருந்து உருவாகுவது. அது ஆட்சி மாற்றத்துக்குப் பின் கிடைத்திருக்கின்ற சிறு ஜனநாயக இடைவெளியை எழுச்சியுடன் கையாள வைத்திருக்கின்றது.

நீண்ட அடக்குமுறைக்கும், அழுத்தத்துக்கும் மத்தியில் இருந்த மக்கள் ஒருகட்டத்தில் அதனை உடைத்துக்கொண்டு வெளியேவர இச்சம்பவத்தினைக் கையாண்டுள்ளனர். அவர்களின் ஆத்திரங்களும் கோபதாபங்களும் மிக உக்கிரமாக வெளிப்படுத்தப்பட்டது. கடந்த மே பத்தொன்பதாம் திகதி யாழ்நகரில் நுழைந்த இளைஞர் குழாம் வித்தியாவின் வன்புணர்வு கொலையைக் கண்டிக்கும் முகமாக முழுமையான கடையடைப்புக்கு அழைப்புவிடுத்தனர். முச்சக்கர வண்டியில் ஒலிபெருக்கி மூலம் அவ்வழைப்புத் தொடர்ந்தவண்ணம் இருந்தன. தீடீர் அறிவித்தலால் பல வர்த்தக நிலையங்கள் சிறிய உணவுரகக் கடைகள் மூடுவதில் மந்தப்போக்கை கடைப்பிடித்தன. ஆனால் பதற்றமான சூழ்நிலை மாற்றத்தினால் பெரும்பாலான கடைகள் உடனடியாகச் சாத்தப்பட்டன. அறிவிப்பையும்மீறிச் சாத்தப்படாமல் இருந்த வர்த்தக நிலையங்களின் கண்ணாடிகள் உட்பட்ட  பொருட்கள் சேதமாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மறுநாளும் மிகப்பெரிய கடையடைப்புக்கு அழைப்புவிடுவிக்கப்பட்டது. குற்றவாளிகளாகக் குற்றம்சுமத்தப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படும் நாளும் அதுவே.

மிகப்பாரிய அளவிலான மக்கள் குழாம் யாழ்நகரப் பகுதியைச்சுற்றி குழுமியிருந்தனர். ஆரம்பத்தில் விழிப்புணர்வு கண்டனப்பேரணியாக இருந்தபோதும் கூடியிருந்தவர்களின் மனவெழுச்சியில் வன்முறைசார்ந்த நிகழ்வாக மாறத்தொடங்கியது. முக்கியமான வீதிநெடுகிலும் டயர்கள் கொளுத்தப்பட்டது. சிறிய நேரப்பகுதியில் காபட் வீதிகளில் டயர்கள் உக்கிரமமாகச் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தன. பதற்றம்கூடிய சூழ்நிலையாக யாழ்நகரம் மாறிக்கொண்டிருந்து. பொலிசார் நீதிமன்ற கட்டிடத்தொகுதியைச்சுற்றி குவிக்கப்பட்டனர். இந்த நேரத்தில் பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்நிலை தோன்றியது. மிதமிஞ்சிய மக்களின் எழுச்சி நீதிமன்றத்தை நோக்கி நகர்த்தியது. நீதிமன்றம் சில இளைஞர்களால் கல்லெறிந்து தாக்கப்பட்டது.

எதிர்பாராத மக்கள் எழுச்சியனைவரையும் திகைப்படையவைத்தது. தொடர் இழப்புகளுக்கும் அலைக்கழிப்புகளுக்கும் சிக்கித்தவித்த மக்கள் இன்னும் இழந்துகொள்வதற்கு எதுவும் இருக்கவில்லை. இந்த நிலையில் அமைதியாக இருப்பதினால் எதையும் சாதித்துவிடப்போவதில்லை. இப்பொது வெளிவிடப்பட்ட கோபம் மிக அவசியமானது என்பதினை மறுதலிக்கமுடியாது. இதற்குமுன் இடம்பெற்ற பல்வேறு பாலியல் வன்புணர்வுக் கொலைகள் இடம்பெற்றபோதும் கிளர்ந்தெழுதா மக்கள் இச்சம்பவத்தில் கிளர்ந்தெழுந்தற்கு அதன் கடந்தகாலக் கசப்பான சம்பவங்களின் தொகுப்பையே முக்கியக்காரணமாகக் கொள்ளமுடியும். ஒவ்வொரு பாலியல் பலாத்கார சம்பவங்களுக்குக் குற்றவாளிகளாகக் கருதப்படுபவர்களுக்குச் சார்பாக ஆஜராகும் வக்கீல்களும் நிறையவேயுண்டு. நிஜக்குற்றவாளிகளும் வக்கில்களின் துணையுடன் சட்டத்திலுள்ள நுண்ணிய ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பிக்கும் சம்பவங்களும் அதிகமாக நடந்ததொன்று. ஆதாரங்கள் இருந்தும் கைதுசெய்யப்படாமல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிடும் பொலிசாரைக்கண்டு விசனமடைந்த மக்கள் அதிகம். இவை சட்டத்தின்மீதுள்ள நம்பிக்கையை வெகுவாகக் நீர்ந்துபோகவைத்துள்ளது. வித்தியாவின் வன்புணர்வு சம்பவத்தில் மக்களால் பிடிக்கப்பட்டுக் குற்றவாளியாகக் கருதப்பட்டுக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட முக்கியக் குற்றவாளியொருவரை காவல்துறை தப்பிக்கவிட முயற்சித்தது பெரும் கூட்டுக்கோவத்தினை மக்களிடம் ஏற்படுத்தியது. இதனால் நம்பிக்கையிழந்த மக்களின் கூட்டுக்கோபத்தின் சீற்றமாக இவ்வன்முறைச்சம்பவம் பாரியளவில் அமைந்துள்ளது.

வித்தியாவின் வன்புணர்வுக்கொலைக்கு நீதிகோருவது மக்களின் கடமையாக இருக்கின்றபோதும் சட்டங்களைப் புறந்தள்ளவிட்டு பெற்றுக்கொள்ளமுடியாது. நாம் அடிப்படையில் இலங்கை சோசலிசநாட்டின் குடிமக்களாகவே இன்னும் இருக்கின்றோம் என்பதினை நியாபகப்படுத்திக் கொள்ளவும் வேண்டும். ஜனநாயக நீதியில் தண்டனையைப் பெற்றுக்கொள்ளவதற்கு நீதிமன்றத்தினை தாக்கும் அளவுக்குச் செல்ல முடியாது. ஆனால் இவ்வாறான வன்முறை சம்பவத்தினால் நாடுமுழுவதும் கவனிக்கத்தக்க விடயமாக மாறிக்கொண்டது. மிகப்பெரும் அனுதாப அலைகள் வித்யாவுக்கு ஆதரவாக நியாயமான முறையில் கிடைத்தது. வக்கீல்கள் ஒட்டுமொத்தமாகக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதட வரப் போவதில்லை என்ற அறிக்கையைவிட்டனர். கடந்தகால வெவ்வேறு பாலியல் பலாத்கார சம்பவங்களின்போது குற்றவாளிகளுக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆஜராகியபோதும் இச்சம்பவத்திற்கு யாரும் குற்றவாளிகளுக்குச் சார்பாக ஆஜராகப்போவதில்லை என்ற கூற்று உண்மையில் வித்தியாவின் வன்புணர்வுக் கொலையின் மீதுள்ள அனுதாபத்தில் வந்ததா அல்லது அனைத்துத் தரப்பினால் கவனிக்கப்படும் விடயமாக மாறியதினால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடச் செல்லவதினால் பலரின் கவனிப்புக்கு உள்ளாவதனால் தமக்கு அபகீர்த்தியேற்படும் என்ற நல்லெண்ணத்தில் வாதட மறுப்புச்சொன்னார்களா என்று யோசிக்கவேண்டிய தேவையும் ஏற்படுகின்றது. வித்தியாவின் வன்புணர்வுக் கொலையின் அனுதாபத்தில்தான் வாதட மறுப்புச்சொன்னோம் என்று வக்கீல்கள் சொல்ல முன்வந்தால் முன்னர் இடம்பெற்ற ஊடகக் கவனிப்புகள் அதிகம் கிடைக்காத வேறு வன்புணர்வுச் சம்பவங்களுக்குக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடச்சென்றது ஏன் என்ற கேள்வியை முன்வைக்கலாம். அதற்கு வக்கீல்களிடம் பெரும்பாலும் பதில் இருக்காது.

இவ் வன்முறை சம்பவத்தினால் னைத்துதரப்பு  ஊடக கவனிப்புக்களும் இவ் விடயத்தில் கிடைத்தன என்பது உண்மை. ஒவ்வொரு அசைவும் கவனிக்கும் வகையில் மாற்றம்பெற்றது. மக்கள் கிளர்ந்தெழுந்திருக்காமல் போயிருந்தால் போதிய ஊடககவனிப்பு கிடைக்காமல்போய் இருக்கலாம். வக்கீல்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடச்சென்று இருக்கலாம். குற்றவாளிகள் நிரபராதிகளாக வெளியே வந்தும் இருக்கலாம். மக்களின் இக்கிளர்ச்சி அவ்வாறன சூழ்நிலையில் இருந்து காத்துள்ளது. இருந்தபோதும் வேறுவகையான சிக்கல்களைத் தென்னிலங்கை பகுதியில் அரங்கேற்றப்படிகின்றது. அது இனவாதம்.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டங்கள் பொலிஸ் நிலையங்களைத் தாக்கியதோடுதான் ஆரம்பித்தன. இப்போது, நீதிமன்றம் தாக்கப்படும் விதமும் அதனையே ஒத்திருக்கின்றது. மீண்டும் பயங்கரவாதிகள் உருவாகின்றனர் என்ற கோஷம் தென்னிலங்களை அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்பட்டது. தமிழர் பகுதியில் உள்ள இராணுவத்தினை மீளப்பெற்றுக்கொள்ளக்கூடாது, இராணுவம் வெளியேறினால் மீண்டும் ஆயுதப்போராட்டம் ஆரம்பமாகும் என்ற கருத்துகள் தூவப்பட்டன. எனவே இராணுவத்திடம் அதிகாரங்களைக் கையளிக்க வேண்டும் என்கின்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.
சிங்கள நாட்டில் சிங்களவர்கள் நீதிமன்றத்துக்குக் கல்லெறிந்தது கிடையாது. ஆனால், வடக்கில் மாத்திரம் ஏன் அவ்வாறு நடக்கின்றது. நாட்டில் நல்லாட்சி நடைபெறுகின்றது என்கிறீர்கள்?' என்று ஊடகவியலாளர் ஒருவர் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் கேள்வியெழுப்பினார்.

இதனால் கோவமடைந்த நீதியமைச்சர் குறித்த ஊடகவியலாளரை நோக்கி, உங்களுடைய  கேள்வியிலேயே இனவாதம் இருக்கின்றது. பொறுப்பற்ற முறையில் இனவாதமான கேள்விகளை எழுப்ப வேண்டாம். இது சிங்களவருடைய நாடு என்று எங்கு  குறிப்பிடப்பட்டுள்ளது? இது இலங்கை. இங்கு, பௌத்தர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் எனப் பல இனத்தவர்கள் சமத்துவத்துடன் வாழ்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ போன்று இனவாதத்தை ஏற்படுத்தும் சொற்களைப் பாவிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். என்றார்.
இவ்வாறான விடயங்களைக் கூர்ந்துபார்த்தல் நீதிமன்றம்தாக்கப்பட்டது உண்மையில் வடக்கில் உள்ள மக்களால் நிகழ்த்தப்பட்டதா அல்லது நுண்ணிய அரசியல் பின்னால் கச்சிதமாக இயக்கப்பட்டதா என்ற சந்தேகத்தையும் விதைக்கின்றது. மக்கள் கிளர்ந்தெழுந்தபோது அவர்களின் செயல்பாடுகள் அவர்களுக்குள் குழுமியிருந்தவர்கள் சிலரால் திசைமாறப்பட்டதா என்று யோசிக்கவும் வைகின்றது. ஒரு பிரதேசத்திலுள்ள இளைஞர்களால் பாவனையற்றுள்ள டயர்களைச் சேமித்து வீதியில் எரிப்பது வேறுவிடயம், ஆனால் எக்கச்சக்க டயர்களுடன் சிறியரக வாகனத்தில் சென்ற குறிப்பிட்ட சிலரால் யாழ்குடாநாடு முழுவதும் முக்கியவீதிகளில் டயர்கள் இடப்பட்டு எரிக்கப்பட்டது யோசிக்கவைக்கக்கூடியது.

வடக்குமக்களின் உணர்வெழுச்சிகள் தென்னிலங்கை இனவாத அரசியலுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. முறையாக ஒன்றிணைக்கப்படாத எழுச்சிகளில் அவர்களின் திசைதிருப்பல்களும் இணைத்துவிடுகின்றன. நீதிமன்றம் தாக்கப்பட்டதுக்கான பின்னணியிலும் அவர்களின் திட்டமிடலே வெளிப்பட்டது. மக்களும் மிதமிஞ்சிய எழுச்சியில் உண்மைத்தன்மை, யதார்த்தப்போக்குத் தெரியாமல் அவர்களுன் செயல்ப்பட்டிருகின்றார்கள். இச் செயற்பாடு வித்தியாவின் அநீதிக்கு நீதிகோரிய போராட்ட வடிவத்திலிருந்து விலத்தி இன்னுமோர் அபாயகரமான தளத்துக்கு நகர்தியிருகின்றது என்பது கசப்பான உண்மை.

யுத்தம் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் தமிழர்களின் தாயகப்பிரதேசம் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளே உற்பட்டிருகின்றது. சிவில் நிர்வாகம் ஓரளவுக்குப் பரவலாக்கப்பட்டாலும் இன்னும் முழுமையாகவில்லை. இராணுவம் நிலைகொள்வதற்கான காரணங்கள் இல்லாமல் போனபோதும் இராணுவத்தினை வெளியேற்றுவதினை அரசாங்கம் ஒருபோதும் விரும்பப்போவதில்லை. தமிழ் மக்களின் போராட்ட உணர்வினை ஒருபோதும் நீர்ந்துபோகச்செய்ய முடியாது என்பதினை தெளிவாக உணர்ந்த ஆட்சியாளர்கள் இராணுவ அடக்குமுறை மூலம் மக்களின் உணர்வுக்களை கட்டுக்குள் வைக்க நினைக்கின்றனர். இந்தச் சமயத்தில் மக்களின் வன்முறை போராட்ங்களை காரணம் காட்டி இராணுவத்தினைத் தொடர்ந்தும் நிலைகொள்ள வைப்பதற்கான சூழலை வன்முறைசார்ந்த இப்போராட்டம் உருவாக்கியிருக்கின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் போராட்டங்களை வன்முறையிலிருந்து தவிர்த்து புறக்காரணிகள் செல்வாக்குச் செலுத்தாதவண்ணம் கொண்டு செல்லவேண்டும். மக்களின் மிதமிஞ்சிய உணர்வெழுச்சிகள் எல்லைகள் அற்றுச் செல்வது மிகுந்த ஆபத்தானது.
நீதிமன்றத்தை தாக்கியவர்களாகக் கருதப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாகவும் தாம் வாதடபோவதில்லை என்று வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.  இதே நேரத்தில் தென்னிலங்கையில் நீதிமன்றத்தைத் தாக்கியவர்கள் முன்னால் விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்ற பிரச்சாரமும் முன்னேடுக்கப்படுகின்றது.

வித்தியாவின் படுகொலைக்கு நீதிகோரி வெடித்துப்பறந்த போராட்டம் இனவாத அரசியல் சதிவலைக்குள் நுட்பமாக வீழ்த்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்குள் இருக்கும் மாற்றுத்தரப்பினர் இவ்வாறான நிகழ்வுக்குப் பங்களித் துள்ளனவோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றன.

ஒருபக்கம் இவ்வாறான இனவாத பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்டபோதும் தென்னிலங்கைப் பகுதியில் சிங்களமொழிபேசும் சகோதர மக்களும் வித்தியாவுக்கு ஆதராவான போராட்டத்தில் அமைதியான வகையில் தம்மை இணைத்துக் கொண்டனர். வவுனியாவில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது எக்கச்சக்கமான சிங்களவர்களும் பாதைகளுடன்  நிஜ உணர்வுகளுடனும் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். மலையக மக்கள், முஸ்லிம் சகோதரர்கள் ஒட்டுமொத்தமாகக் குரல்கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

வழமையாக இடம்பெறும் வன்புணர்வு சம்பவங்களுக்கு எதிராகப் பெண்ணிய அமைப்புக்களால் முன்னேடுக்கப்படும் போராட்டங்கள் சொற்பமானவர்களாலும் அமைதியான முறையிலும் இடம்பெரும். ஆனால் இச்சம்பவத்துக்கு அணைத்து தரப்பினரும் அணிதிரண்டது எதிரிர்பார்க்காதவொன்றுதான், இருந்தபோதிலும் திரண்டவர்களின் உளவியல்போக்கு நிஜத்தில் எப்படியிருந்தது? மே பத்தொன்பதாம் திகதி கடையடைப்புப் பதற்றமாக  நடந்தபோது  யாழ்நீதிமன்றத்தில்  சமீபத்தில் அரியாலை முள்ளிப் பகுதியில் ஓர் பெண்ணுக்கு இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு சம்பவத்தின் விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருந்தது. குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்டவர்  ழுமியிருந்த கலகக்காரர்கள் மத்தியில் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கேயிருந்த கலகக்காரர்களுக்கு அதைப்பற்றித் தெரிந்திருக்கவில்லை. வன்புணர்வுக்கு எதிராகக் குரல்கொடுப்பவர்கள் கண் முன்னால் அதுசார்ந்த குற்றவாளி சென்றபோதும் மௌனமாக நின்றனர். அங்கே அச்சமயத்தில் குழுமியிருந்த எத்தனைபேருக்கு அரியாலை முள்ளிப் பகுதியில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வைப்பற்றித் தெரிந்திருந்தது? உண்மையில் வன்புணர்வுக்கு எதிராகக் குரல்கொடுப்பவர்கள் கடந்தகாலச் சம்பவங்களையும் அதுதொடர்பான சிறு அவதானிப்புகளையும் கொண்டிருப்பார்கள்.

மே இருவதாம் திகதி இடம்பெற்ற வன்முறையின்போது கலகத்தில் தம்மை இணைத்துக்கொண்டவர்கள் எதற்கும் அஞ்சாத போராட்டக்காரர்களாகத் தம்மைச் சித்தரித்தனர். பொலிசார் கைதுசெய்தபோது பொலிசாரின் காலில்விழுந்து அழுதசம்பவங்களும் நடந்தேறியது. உண்மையான போராட்ட குணத்தைக்கொண்டவர்கள் வெளிப்படுத்தும் அம்சங்கள் அவர்களிடம் இல்லாமல் இருந்தது. போராட்டங்களின் கல்லெறிகள் மத்தியில் செல்பி எடுத்துக்கொண்ட வீரதீரர்களையும் நாம் இந்தநேரத்தில் மறக்கக்கூடாது. நீதிமன்றத்துக்குக் கல்லெறிந்த சம்பவத்தைத்தான் போராட்டமாகவும் அபகீர்த்தியாகவும் பாக்கின்றார்கள், ஆனால் மௌனமாக நடைபயணமாகக்  கச்சேரி வரை ஊர்வலம்சென்று மகஜர் கையளிக்கப்பட்டவர்களின் அறமான போராட்டங்கள் கவனிப்பார் அற்றுக்கிடக்கின்றன.

நீதிமன்ற வன்முறை கலகமும், மௌனமாக இடம்பெற்ற போராட்டங்களும் வித்தியாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நாடுமுழுவதும் எடுத்துச்சென்றதில் வெற்றிதான்.  கடந்தகாலத்தில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவு சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வக்கீல்கள் தடயங்களை களைத்து நூதனமாக குற்றம்சாடப்பட்டவர்களை தப்பிக்கவிட்டனர். இங்கே குற்றம் சாடப்பட்டவர்கள் நிஜமான குற்றவாளிகளாக இருக்கும்பச்சத்தில் வக்கீல்கள் எவரும் குற்றவாளிகளுக்காக வாதாடாமல் முடங்கியது  இக் கலகத்தின் மிகப்பெரிய வெற்றியாகக் கொள்ளமுடியும். மக்களுக்கு எழும் ஆவேசத்தைவிட அவர்களுக்குள் எழும் மறதி இன்னும் வேகமானது. காலப்போக்கில் மக்கள் மறக்கத்தொடங்க குற்றவாளிகளுக்கு ஆதரவாகத் திறமையான வக்கீல்கள் ஆஜராகக்கூடும். வித்யாவுக்கு நீதிகிடைக்கும் வரை மக்கள் இதே உணர்வுடன் வற்றாத கோபத்துடன்  இருந்து எதிர்ப்புகளை வெளிக்காட்டினாலே நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Special thanks to Ragany Chandrasegaram

ஆக்காட்டி இதழுக்காக அனோஜன் பாலகிருஷ்ணன்.




Read more...

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP