கடவுச்சீட்டு நாவல் - சிறுகுறிப்பு

>> Saturday 27 June 2015

துப்பாக்கி சந்தங்கள் ஒலிக்கும் ஈழத்து மக்களின் வாழ்வியலைப் பதிவுசெய்யும் இலக்கியங்கள் மத்தியில் இன்னும் ஆழமாகக் கவனிக்கப்படாமல் விட்டப்பட்ட முக்கியமான பக்கம் புலம்பெயர்வு. புலம்பெயர்வின் வலிகளையும், புலம்பெயர்ந்தவர்களின் சங்கதிகளின் எதிர்காலப்போக்கையும், மாற்றுக் கலாச்சாரத்துடன் இணைந்து சிக்கித்தவிக்கும் நம்மவர்களின் காலச்சார மாற்றங்களையும், நுட்பமான விளைவுகளையும் சொல்லும் நாவல் வி.ஜீவகுமாரனின் கடவுச்சீட்டு.

கடவுச்சீட்டு ஒரு நாட்டின் அடையாளமாக இருக்கின்றபோதும் புலம்பெயர் மக்களின் அந்தரங்க குறியீடாக இருக்கும் காரணத்தினால் நாவலின் தலைப்பு கடவுச்சீட்டாக இருக்கின்றது.

யாழ்ப்பாணச் சமூகமட்டத்தில் ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்துக் காதலித்துத் திருமணம் செய்த தமிழ்,சுபா என்ற இளம் தம்பதியினரின் புலம்பெயர்வு வாழ்கையையின் நகர்தலை நவால் பேசுகின்றது. ஏஜென்றின் துணையுடன் விமானத்தில் அகதி அந்தஸ்தைப் பெற ஜெர்மனியை நோக்கிப் பயணமாகின்றார்கள். ஜெர்மனியில் இருந்து களாவாக டென்மார்க்கு பயணமாகின்றார்கள், அவர்களைப்போலப் புலம்பெயர வந்துள்ள ஏனைய தமிழர்கள் ஊடக கதை நகர்த்தப்படுகின்றது.

மூன்று முக்கியப் பாகமாக நாவல் நகர்ந்கின்றது. முதலாவது பாகத்தில் புலம்பெயரும் பயண அனுபவங்களைப் பேசுகின்றது. விமானத்தில் பறப்பதும் விமானக் கழிவறையில் கடவுச்சீட்டை கிழிப்பதுமாக ஆரம்பிக்கின்றது. ஜெர்மனிசென்று அவர்களின் அகதிமுகாமில் தங்கவைக்கப்படுகின்றார்கள். வேறு தமிழர்களும் அறிமுகமாகின்றார்கள். டென்மார்க்கில் அகதிகளுக்கான உதவித்தொகை அதிகம் என்பதுக்கு இணங்க பெரும்பாழானவர்கள் டென்மார்க் செல்ல விருப்பம் காட்டுகின்றார்கள். பெற்றோல் பவுசர்களிலும், பன்றிகளின் ஏற்றிச்செல்லும் பாரிய வாகனங்களிலும் நெறிப்பட்டு மூச்சுமுட்ட அவர்களின் பயணங்கள் அபாயகரமாகத் தொடர்கின்றன. எள்ளலான நகைச்சுவை பேச்சோடும் மனைவியையும் ஐந்து மகள்மாரையும் டென்மார்க் வரவழைத்து வாழவிரும்பிய செல்லத்துரையண்ணனின் பெரும்கனவுகள் பெற்றோல்வண்டியில் கருகிய அவரின் உடலோடு முடிகின்றது. அவர்களுடன் பயணித்த லெபனான் குழந்தைகள்,மனிதர்கள் உற்படப் பலர் தீயில் வெந்து உருக்குலைந்து சிதைகின்றார்கள். எதிர்கால வாழ்க்கையின் உயிர்மேலான ஆசை வாழத்துடிக்கும் தவிப்புகளுக்காகப் போராட்டத்தில் புலம்பெயரும்போது ஆசைகளும் கனவுகள் யாருக்கும் தெரியாமல் பயணங்களிலே கருகி உடல்களோடு சிதைகின்றது. அவர்களின் உடல்கள் காட்டுப்பாதையில் யாருக்கும்தெரியாமல் எரியூட்டப்படலாம் என்பதினை வாசிக்கும்போது ஆழமாகத் தாகத்தைப் பெரும்மூச்சோடு இயல்பாகத்தருகின்றது.

டென்மார்க் நிலப்பரப்பில் அகதி அந்தஸ்து கிடைக்கப்பெற்று அவர்களின் மொழியைக் கற்றுக்கொள்வதில் சிரமங்களைத் தமிழர்கள் எதிர்நோக்கும் விடயங்களும் அவர்களின் கல்விநடவடிக்கைகளுடன் பேசப்படுகின்றன.

இரண்டாவது பகுதியில் அகதி அந்தஸ்து கிடைக்கப்பெற்று நிரந்தரமாக வாழத்தொடங்கிய மக்களின் நுண்ணியப் பிரச்சனைகளைப் பேசத்தொடங்குகின்றது. புலம்பெயர்ந்தாலும் தமிழர்கள் அனைவரும் ஒரே ஊரில் ஒன்றாகத் தங்கி குட்டியாழ்ப்பாணமாக இயங்குகின்றார்கள். புலம்பெயர்ந்தாலும் சாதீய கட்டமைப்பை விட்டுகொடுக்காமல் பேணும்தன்மையைக் கௌரி அன்ரி, மணியண்ணைப் பாதிரங்களுன் ஊடக அழகியல்தன்மையுடன் யதார்த்தமாகப் பதியப்படுகின்றது. சிவாஜினி,செந்தில் காதல் பதியப்பட்ட இடங்களுடன் முரண்பாடுகளுடன் சொல்லப்படுகின்றன. சொல்லமுடியா துன்பங்கள் மத்தியிலும் புலம்பெயர்ந்து வேறுதேசம் சென்றபோதிலும் தமிழர்கள் தொடர்ந்தும் சாதீயத்திணை முன்னிறுத்தும் மடத்தனங்களைப் பார்க்க வேதனையாகவும் இருக்கின்றது.

தமிழ்,சுபா இருவரின் பிள்ளைகளின் வளர்ச்சியின் போக்கையும் டென்மார் காலச்சாரத்தில் தங்களுது பிள்ளைகள் தொலைக்கப்போவதை எண்ணி வருந்தம் அடையும் பெற்றோர்களின் மனப்போக்குடன் நாவல் வேகமாக நகர்கின்றது. அதே நேரம் இயக்க நடவடிக்கைகளுக்கு நிதிசேர்க்கப்படும் திரைமறைஅரசியல்களும் பதியப்படுகின்றன.

மூன்றாவது அத்தியாயம் மிகவும் உக்கிரமான அத்தியாயம். தமிழ்,சுபா தம்பதியினரின் பிள்ளைகளின் காலச்சாரப் போக்குகள் பெற்றோர்களைச் சிதைகின்றது. டென்மார்க் கலாச்சாரங்களை இயல்பாக எதிர்கொள்ளும் பிள்ளைகளும் அதன் மாறுதல்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் பெற்றோர்களின் உளவியல் போக்குகள் ஆழமாகப் பதிவாகின்றது.

கடவுச்சீட்டில் அகதிகளாக வரும் தமிழ்,சுபா தம்பதியினர் தம் வயதுக்கு வந்த இரு பெண் பிள்ளைகளை டென்மார்க்கின் ஒவ்வாத கலாச்சாரச் சூழலுக்குத் தொலைத்து உளவியல் நெருக்கடியில் சிதைந்து புலப்பெயர்ச் சூழலை அடியோடு வெறுத்து சொந்த நாட்டுக் கடவுச்சீட்டை அந்திய நாட்டுக் கழிவறையில் கிழித்துப் போட்டு புலப்பெயர் வாழ்வைத் தொடங்கிய அவர்களே சொந்த நாட்டின் கழிப்பறை ஒன்றில் தம்மையும் தம் எளிய குடும்பத்தைச் சிதைத்து அழித்துநொறுக்கிய புலப்பெயர்ந்த நாட்டின் கடவுச்சீட்டை கிழித்துப் போடுவதுடன் தம் புலம்பெயர் வாழ்வை நிராகரித்து மீண்டும் சொந்த நாட்டில் அமைதியாகச் சிறிய குடும்பமாகப் பிள்ளைகளின் துணையின்றி வாழ எத்தனிக்கின்றார்கள்.

ஆர்ப்பாட்டமான வர்ணனைகள் இன்றி இயல்பாக எளிமையான நடையுடன் நாவல் சீறிப்பாய்கின்றது. கூறிய கத்திமுனையினால் சதைகளைக் கீறிச்செல்வதுபோல் நாவிலின் சொல்லாடல்களும் கதையின்போக்கும் நீட்சியாக அமைந்திருக்கின்றது. ஒரே பிடியில் நாவலை முழுமூச்சாக வாசிக்கமுடிகின்றது.

புலம்பெயர்வாழ்கையின் அவலங்களை நுட்பமாகப் பதிவுசெய்திருக்கின்றது. இரண்டு தலைமுறைகளின் இடைவெளிகளைக் கச்சிதமாக ஜீவகுமாரன் பதிவுசெய்திருக்கின்றார். ஐரோப்பிய நாட்டின் இனத்துவேசங்களையும், மத ஒடுக்குமுறைகளைம் குறிப்பிடத்தவறவில்லை. அதே நேரம் இலங்கைத் தமிழானால் ஏமாற்றப்பட்ட கரீனாவின் பாத்திரம் உற்பட, அகதிகள் கௌரவமாக அதிகாரிகளினால் நடத்தியது உற்பட வெகுவியல்பாகப் பதிவாகியுள்ளது.

நாவல் படித்துமுடிய சுபா,தமிழின் காதல்கள்,சுமிதா,லக்ஷனாவின் கலாச்சார மாறுதல்கள், வண்டிக்குள் எரிந்த செல்லத்துரயண்ணையின் குடும்பங்களின் நிறயாசைகள், ஏமாற்றப்பட்ட கரீனா, பென்ரா ரீச்சர், கௌரி அன்ரி,சிவாஜினி,காதல் விரத்தியில் தற்கொலை செய்த செந்தில், நகரசபை அழைத்துச்சென்ற சிவமதியின் பிள்ளைகளின் எதிர்காலங்கள் என்று பலவிடயங்கள்  எம்மிடம் சிக்கலாகப் பேசும்.

ப.சிங்காரம் விருதுபெற்ற இவ்நாவல் புலம்பெயர் இலக்கியங்களில் எப்போதும் தனித்துவ இடத்தில் இருக்கும்.




Comments

5 கருத்துக்கள்:

ஜேகே 28 June 2015 at 04:24  

ஜீவகுமாரனைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். வாசித்ததில்லை. அறிமுகத்துக்கு நன்றி.

இவ்வகை நாவல்கள் நிறையவே வந்திருக்கின்றன. சந்தைப்படுத்தல் சிக்கல்களால் அந்த நாவல்கள் அந்தந்த நாடுகளுக்குள்ளேயே தேங்கிவிட்டன. உங்களுக்கு புத்தகம் எப்படி கிடைத்தது.

Annogen 28 June 2015 at 09:01  

நிறையவே வந்திற்குகின்றனதான் நீங்கள் சொன்னதுபோல் நம் கைக்கு கிடைப்பது இல்லை. அ.முத்துலிங்கத்தின் "கடவுள் தொடங்கிய இடம்" நாவல் இந்தவகையில் சேர்ந்ததாகவும் அற்புதமான படைப்பாகவும் சொல்லப்படுகின்றது. இன்னும் வாசிக்கவில்லை. கடவுச்சீட்டு நாவல் கொழுப்பு பூபாலசிங்கத்தில் கிடைத்தது. ஜீவகுமாரன் அங்கு விற்பனைக்கு அனுப்புவைத்ததாக தன் வலைதளத்தில் குறிபிட்டு இருந்தார்.

Kumaran Kugathasan 28 June 2015 at 11:33  

Your review excites me to read this book soon. This book definitely will be in my this year's reading list. Thanks to you for the review:) Keep introducing us new books :)

திண்டுக்கல் தனபாலன் 14 July 2015 at 12:38  

Visit : http://blogintamil.blogspot.in/2015/07/blog-post_14.html

Annogen 19 July 2015 at 12:46  

நன்றி திண்டுக்கல் தனபாலன். மகிழ்ந்தேன்!

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP