தவறிப் பிறந்த தரளம் - குறும்பட விமர்சனம்
>> Sunday, 7 June 2015
போர்ச்சூழல் முடிவடைந்தபின்னும் சிறுவர்களுக்குள்
புகுந்திருக்கும் உளவியல் நெருக்கடிகளை நெருடிப்பார்க்கும் குறும்படம் தவறிப்
பிறந்த தரளம். போர்காலப் பகுதியில் வாழ்ந்த சிறுவனின் மன என்னவோடங்களையும் அவனின் வாழ்வியல்
மாறுதல்களையும் பதிவுசெய்ய எத்தனித்துள்ளார் இயக்குனர் வதீஸ் வருணன்.
நுட்பமாகச் சிறுவனின் உளவியல் பின்னணிகள் காட்சிப்
படிமத்தில் சொல்லப்படுகின்றன. சிறுவனுக்கும் தந்தைக்குமான உறவின் விரிசல்கள், தாய்க்கும்
சிறுவனுக்கும் இடைலான உறவின் ஸ்பரிசங்கள் சரியான பரிமாணத்தில் காட்சிப்
படுத்தப்பட்டுள்ளன. தன் தந்தையைப்பற்றிக் குறிப்பில் எழுதும்போது தந்தைக்கும்
தனக்கும் உள்ள உறவின் சிக்கல்தன்மையை வசனங்களாக எழுத்துவடிவில் குறிப்பிடப்படும்
படிமமாக்கல் சிறுவனின் மன விம்பத்தினை அட்டகாசமாக முன்வைக்கின்றது. படம்
ஆரம்பிக்கும்போது கச்சிதமாகச் சிறுவனின் கதாப்பாத்திர ஸ்திரத்தை சரியான
கட்டுமானங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தன்மை திரைக்கதைக்கு வலுவைத்தருகின்றன.
தனது சொந்த கிராமத்திற்கு மீளக்குடியேறிய பின்னர்
சந்திக்கும் நுட்பமான உளவியல், பொருளாதார, ஒழுக்க நெருக்கடிகளை மையப்படுத்தியும்
அதிலிருந்து அவன் எவ்வாறு மீள முயற்சி செய்கின்றான் என்பதையும் விளக்க இயக்குனர்
பல்வேறு தளங்களுடன் திரைக்கதை நுட்பத்தினைச் செலுத்தியுள்ளார்.
தந்தையின் கதாப்பாத்திர பின்னல்களையும், பொருளாதாரப்
பின்னணியையும் சித்தரிக்கும்போது காட்சிரீதியான சித்தரிப்புக்களைப் படிமமாக்கிச்
சில ஒளிச் சட்டங்களிலே வெளிப்படுதியதன்மை மகத்துவமான பதிவுசெய்யப்பட்டுள்ளது. தந்தையின்
பாத்திரக்கட்டுமானங்களை உருவாக்கியதுபோலத் தாயின் பாத்திரக்கட்டுமானங்கள்
போதியவளவு நுட்பமாக உருவாக்கப்படவில்லை. தாய் ஒழுக்கத்தைத் தவறும்
செயல்பாட்டுக்குத் தர்கரீதியான காரணங்கள் சிறுவனின் பார்வையிலோ அல்லது
பொதுப்படையான பார்வையிலோ காட்சிப்படுத்தப்படவில்லை. சிறுவன் பாடசாலை செல்லும்போது
இளைஞர் குழாம் அவனின் தாயாரின் ஒழுக்கத்தைப் பற்றி நகையாடுகின்ற காட்சியின்போது
பார்வையாளர்களுக்குத் தாயும் ஒழுக்கமற்றவள் என்ற செய்தி தெரிவிக்கப்படுகின்றது.
அது திரைக்கதையின் முக்கியத்திருப்பமாக இருந்தபோதும் அதனை உள்வேண்டிக் கொள்வதில்
திகைப்புள்ள சிக்கல் தன்மை உடனடியாக உருவாகின்றன. தாயின் ஒழுக்கம்
தவறும்தன்மைக்குக் காரணமாகக் கணவனின் திருப்தியற்ற சச்சரவான வாழ்க்கை முறையினைப்
பார்வையாளன் பொதுப்படையாகத் தொடர்புபடுத்தி உய்த்தறிந்துகொள்ள முடியும்.
இருந்தபோதிலும் அதற்கான வலிமைப்படுதல் சிறிதளவு தவறியிருக்கின்றது.
ஒளிப்பதிவு சீராகக் காட்சிகளைப் பறந்துவிரிந்து நுட்பமாகப்
படம்பிடித்துள்ளது. சமந்த தசநாயக்கவின் ஒவ்வொரு ஒளிப்பதிவுச்சட்டமும் மகத்துவமாக அமைந்திருக்கின்றது.
நீட்சியான படிமமாக்கல் படக்கோர்ப்பின்போது இன்னும் வேகப்படுத்தப்பட்டு இருக்கலாம்.
மெலிதான இழுபட்ட தன்மையை அதீதமான தொடர்ச்சியான காட்சிகள் உருவாக்க எத்தனித்துள்ளன.
படத்தின் ஒவ்வொரு காட்சிப்படிமமும் அழுத்தம்
நிறைந்ததாகவிருப்பதினால் பின்னணி இசைக்கான தேவை அற்றுப்போகின்றது. இதனைச் சரியாகக்
கணித்துப் பின்னணி இசையயை நுட்பமாக இயக்குனர் தவிர்த்துள்ளவிதம் இயக்குனரின்
கற்பனை புனைவியல் தன்மையை மிளிரலடையச் செய்திருக்கின்றது.
முடிந்தளவுக்கு இயல்பான நடிப்பினை தர்மலிங்கம், பிரியா, பிரகாஷ்
ஒப்பேற்றியுள்ளனர். பிங்கள வடிவமைப்புகள் செயற்கைத்தனமின்றி இயல்பாக
அமைந்திருகின்றன. உள்ளடக்கம் நேர்த்தியான வடிவத்துடன் அமையப்பெற்றிருக்கின்றது.
திரைக்கதையில் இன்னும் நேர்த்தியைக் கொண்டுவந்திருக்க முடியும். மிகநுட்பவியல்
தவறுகளைத் தவிர்த்து இப்படம் கவனிக்கத்தக்க குறும்படம்.
போரினால் பாதிக்கப்பட்ட எமது சமுதாயத்தை இயல்பான
நிலைக்குக் கொண்டுவர பொருளாதாரம்,கல்வியோடு நின்றுவிடாமல் சமூகக் கட்மைப்பையும்
சீர்திருத்த வேண்டியிருகின்றது. அதனை உணர்த்த இக்குறும்படம் முயன்றிருக்கின்றது. இக்
குறும்படம் முதலாவது கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவிலும் ஜப்பானின் இரண்டாவது ப்லிம்ஏசியா
திரைப்பட விழாவிலும் தெரிவாகி
திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் பார்வையிட இங்கே சொடுக்கவும்.
0 கருத்துக்கள்:
Post a Comment