அமேசன் காடுகள் மிக ஆபத்தானவை - Man Vs Wild

>> Friday 3 April 2015

Man Vs Wild நிகழ்ச்சியை  டிஸ்கவரி சேனலில் நீங்கள் பாத்திருக்கக் கூடும். அமேசன் காடுகள் மிக ஆபத்தானவை என்ற டயலாக்கை அடிக்கடி நீங்கள் கடந்திருக்கக் கூடும். அதற்கு சொந்தக்காரர் பியர் கிறில்ஸ், இவர் செய்யும் அட்டகாசமே நிகழ்ச்சியின் சுவாரசியம். விபத்து, இயற்கை சீற்றங்கள் காரணமாக மிகஆபத்தான நிலையில் உலகின் சில சிக்கலான பகுதிகளில் தன்னந்தனியாக சிக்குப்பட்டுக்கொண்டால் என்னவெல்லாம் செய்து தப்பிக்கலாம்?  அல்லது  உதவி வரும்வரை எவ்வாறு உயிர்வாழலாம்? என்பதை படம் பிடித்துக் காட்டி பிரம்மிக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சியே Man Vs Wild.

பியர் கிறில்ஸ் தன்னந்தனியாக பல அதிரடி சாகசங்களை செய்துகாட்டுவார். ஓவ்வரு எபிசோடிலும் விதம்விதமான உலகின் பல்வேறு மனித நடமாட்டம் இல்லாத மூலைகளுக்குச் சென்று தனியாக எப்படி அந்த பிரதேசத்தில் சமாளித்து உதவி கிடைக்கும்வரை வாழ்வது என்பதை பரபரப்பாக உயிரோட்டமாகச் செய்து காட்டுவார். அவரை படம்பிடிக்க ஒரு குழு இயங்கும். ஆனால் அந்தக் குழுவுடன் தனது செயல்பாடுகள் தங்கியிருக்காமல் தன்னந்தனியாக செயல்படுவார். அவருக்கு பாதுகாப்பு நிஜமாக வழங்க அந்தக்குழு தயாராக எப்பொழுதும் இருக்கும். ஆனால் திரையில் அவை காட்சிப்படுத்தப்பட மாட்டாது. ஒரு சில காட்சிகள் அட்டகாசமாக மிரள வைக்கும் சில காட்சிகள் பயமுறுத்தி பிரமிக்க வைக்கும், ஒரு சில காட்சிகள் முகம்சுளிக்க வைக்கும் அருவருப்பை உண்டாக்கும். ஏனென்றால் இவர் கையில் சிக்கும், பாம்பு, பல்லி, தவளை, பூச்சி, புழு என்று எல்லாவற்றையும் பாரபச்சம் காட்டாமல் தின்று விடுவார். நெருப்பும் தணலும் கிடைக்கும் நேரங்களில் வேகவைத்து இல்லாவிடில் பச்சையாக சப்பித்தின்பார். அப்படிச் சாப்பிடும்போது அந்த உணவில் என்ன என்ன சத்துகள் உண்டு அவை எப்படி உடலை பலப்படுத்தும் என்பதையும் சொல்வார்.


என்ன மனிஷன்யா இவர் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. அவரைப் பற்றி தேடியதில் இணையத்தில் எக்கச்சக்கமான விடயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. இவர் சிறு வயதிலேயே கராத்தே, ஸ்கை டைவிங்  யோகா என்று நிறைய விஷயங்களை கரைத்துக் குடித்துவிட்ட சகலகலாவல்லவர். சின்ன வயதில் எவரெஸ்ட் சிகரத்தின் மீது தீராக்காதலைக் கொண்டவர். எப்படியும் அதில் ஏறியே தீருவேன் என்று விடாப்பிடியாக இருந்தார். தூங்கும்போதும் விழித்திருக்கும்போதும் இடைவிடாது இதைப்பற்றியே கனவுகண்டார். இப்படி சிறுவயது பிராயம் கடந்துகொண்டு இருக்க தனது பத்தொன்பதாவது வயதில் பிரிட்டிஷ் இராணுவத்தில் இணைந்துகொண்டார். தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் இராணுவத்தில் வேலைபார்த்தார்.

1996 ஆம் ஆண்டு ஸ்கை டைவிங் செய்யும்போது பரசூட் கட்டிக்கொண்டு குதிக்கும்போது அது சரியாக விரியாமல் சங்கு ஊதிவிடவே 14,000 அடியில் இருந்து கீழே விழுந்து விட்டார். முதுகெலும்பு சல்லியாக நொறுங்கிவிட்டது. இவருக்கு மருத்துவம் அளித்த டாக்டர், "இவர் மயிரிழையில் தப்பி விட்டார் மெடிகல் மிராக்கில்” என்றார்.. மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவுடன் செய்த முதல் வேலை, எவரெஸ்ட் மீது ஏறும் வேலைகளை தொடங்கியதுதான். ஒரே ஆண்டில் அதை நிகழ்த்தியும் காட்டினார். தனது 23ஆவது வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, மிக இளம் வயதில் எவரெஸ்ட் மீது ஏறிய பிரிட்டிஷ்காரர் என்ற பெருமையை பெற்றார். முதல் முதலாக எவரெஸ்டில் ஏறியபோது அவர் அடைந்த உணர்சிகளுக்கு அளவேயில்லை. போதிய ஒக்சிஜன் இல்லாதபோதும் பரவசத்தில் அழுதார்(அழும்போது நிறைய ஒக்சிஜன் தேவைப்படும்). சூரியன் உதிப்பதை பார்த்து மெய்சிலிர்த்ததையும் குறிப்பிடுகின்றார்.

இதன் பிற்பாடு நிறைய தனிமனித சாகசங்களை இடைவிடாது செய்யத் தொடங்கினார். 25,000 அடி உயரத்தில், கேஸ் பலூனில் தொங்கும் டேபிளில் உணவருந்தினார்,  வட அமெரிக்காவில் இருந்து  ஐரோப்பா வரை உறைந்த கடல் நீரில் மிகச்சிறிய படகில் பயணம் செய்து வட அட்லாண்டிக் கடலை கடந்தார் (இந்த ரூட்டில்தான் டைட்டானிக் கப்பல் சென்றதாம்). இவரின் புகழ் கொஞ்சம் கொஞ்சமாக பரவ மீடியா வெளிச்சம் இவரின்மீது விழுந்தது. இவரின் சாகாசங்களை ஆக்கபுர்வமாக பயன்படுத்தும் நோக்கில் Man Vs Wild என்ற நிகழ்ச்சியை டிஸ்கவர் சேனலில் ஒளிபரபினர். இந்த நிகழ்ச்சி மிகப் பிரபல்யம் ஆனது.

உணவின்றி சாவின் விளிம்பில் தத்தளிக்கும்போது என்ன சாப்பிடலாம் என்று இவர் கொடுக்கும் டிப்ஸ் மிகமுக்கியமானவை. அதிலும் உச்சகட்டமாக ஒரு சாரைப்பாம்பை கொன்று இறைச்சியை சாப்பிடபின்  அதன் தோலை உரித்து, அதில் தன்னுடைய சிறுநீரை சேகரித்து வைத்து, பாலைவனத்தில் தண்ணீரே கிடைக்காத நேரத்தில் பருகினார். அது மட்டுமல்லாமல் இறந்து கிடக்கும் ஆடு, எருமை, பன்றி, என்று எதையும் விட்டு வைக்காமல் தின்று விடுவார்.  அழுகிய உடல்களில், மரங்களில் இருக்கும் புழுக்களையும் விடமாட்டார் அப்படியே எடுத்து சாப்பிடுவர். சில நேரங்களில் தண்ணீருக்காக வேண்டி, யானையின் சாணியை பிழிந்து நீர் அருந்தியும் ஒரு கரடியின் சாணத்தில் இருக்கும் செரிக்காத விதைகளை எடுத்து  உண்டும் நம்மை இரண்டுநாள் சாப்பிடாமல் இருக்கவைத்தார். இதுபோக கண்ணில் தட்டுப்படும் வண்டுகள்,பூச்சிகள் அட்டைகள் போன்ற உயிரினங்களையும் விடமாட்டார், உடம்புக்கு நல்ல புரோட்டின் என்று சாப்பிடுவார். சாப்பிடும்போது நாக்கில் என்ன சுவையை உணர்கின்றேன் என்பதையும் மறக்காமல் குறிப்பிடுவார்.


அடர்த்தியான காடுகளில் வெளிச்சம்கூட கிடைக்காத பிரதேசங்களில் எல்லாம் நுழைவார். பல இடங்கள் இதுவரை உலகில் ஒளிப்பதிவு செய்யப்படாத இடம். முதல்முதாலாக கமராவை நுழைத்த பெருமை அவர்களையே சாரும். அடித்துச்செல்லும் பயங்கரமான வெள்ளத்தை கடப்பது, செங்குத்தான அபாயகரமான மலைகளை கடப்பது என்று பல வீரதீர விளையாட்டுகளை நிகழ்த்துவார். காட்டில் உள்ளமரங்கள், செடி கொடிகள், பாசிகள் அவற்றின் பண்புகள், விஷமுள்ளவை, விஷமில்லாதவை என்று எல்லாவற்றை பற்றியும் கூறிக்கொண்டே செல்வார். பலசமயம் எப்படி இப்படி புட்டுபுட்டு வைக்கின்றார் என்று ஆச்சரியமாகவே இருக்கும்.

2012 மார்ச் மாதத்தோடு டிஸ்கவரி சேனாலோடு தனது ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டார் கிறில்ஸ். இருந்தாலும் தனது சாகசங்களை நிருத்தவில்லை தொடர்ந்து கொண்டே இருக்கிறார். அதில் வரும் பணத்தை பெரும்பாலும் சேவை அமைப்புகளுக்கு கொடுத்து விடுகிறார். இவர் நிறைய புத்தகங்களும் எழுதி இருக்கிறார். இவர் எழுதிய The Kid Who Climbed Everest என்ற புத்தகம் எக்கச்சக்கமாக விற்றுத்தீர்ந்து.


இவரின் அட்டகசமான சாகசங்கள் திரும்பவும் தமிழ் டிஸ்கவரியில் அவ்வப்போது காணமுடிகின்றது. தவிர்க்க முடியா நிகழ்ச்சியில் மிக முக்கிய நிகழ்ச்சி இது. இவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் சாகாச வீடியோ கிளிப்களையும் பார்வையிடவும் இங்கே கிளிக் செய்க.



Comments

2 கருத்துக்கள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) 4 April 2015 at 04:54  

இவர் சாகசங்களைப் பார்த்துள்ளேன்.
நாம் செய்யாததை அடுத்தவர் செய்தால் அது சாதனை, சாகசம்.
இவர் எந்தக் காட்டுக்குள்ளும் தனியே செல்லவில்லை.ஒரு குழுவுடன் செல்கிறார்.மற்றும்படி உலகப் பந்தில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு மனித குழுவின் உணவை இவரும் சுவை பார்க்கிறார். மொராஜி தேசாய் முன்னாள் இந்தியப் பிரதமர் தன் சலத்தை அருந்தியவர்.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் பயிற்சியில் முதல் உண்ணக் கொடுத்தது. தவளை, நத்தை, பாம்பு பச்சையாக காரணம் மறைந்து வாழ நெருப்பு மூட்டிச் சமைப்பது காட்டிக் கொடுத்து விடுமென்பதே!
பிரான்சில் நத்தை, தவளை சாப்பிடுவார்கள்.
எனக்கு இவரை விட 127 hours திரைப்படத்தின் உண்மை நாயகன் சாகசமும் துணிவும் மிக்கவராகத் தெரிகிறார். இவரை நான் குறைத்து மதிப்பிடவில்லை.
இவர் எல்லாவற்றையும் ஏற்கனவே கற்றுத் தேறிச் சகல பாதுகாப்புடனும்
திட்டமிட்டே செல்கிறார். எதையும் எதிர்பாராமல் இவர் சந்திக்கவில்லை.
அப்படி எந்த அசம்பாவிதம் நடந்தாலும் இவருக்குப் பாதிப்பில்லை.

Annogen 4 April 2015 at 08:31  

"யோகன் பாரிஸ்" - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வலிந்து திணித்த பல செயற்கை ஆபத்துகளை உருவாக்கி அதில் இருந்து தப்புவதுபோல் படமாகியும் உள்ளார்கள்,அதை அவர்களும் ஒத்துக்கொண்டு உள்ளார்கள். இவரை விட சாகாசக்காரர்கள் எக்கச்சக்கமாக உள்ளனர்தான், அவர்களின்மீது ஊடக வெளிச்சம் இல்லைதான். கம்னிஸ்ட்போராளிகள், மக்கள் விடுதலை இயக்கங்கள் நிஜத்தில் செய்யத சாதனைகள்,சாகசங்களுடன் இவரை ஒப்பிடமுடியாதுதான்.

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP