யாதுமாகி நின்றான்

>> Wednesday 21 January 2015


குறும்பட விமர்சனம்

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான எளிமையான உணர்வுகளை ஆர்பாட்டம் இல்லாமல் சொல்லும் உன்னதமான குறும்படம் யாதுமாகி நின்றான். சமீபத்தில் பார்த்த ஈழத்து தமிழ் குறும்படங்களில் சிலிர்க்க வைத்த சராசரியான படைப்பு.

தாயில்லாத மகன், மகனை வளர்க்கும் பத்திரிகை துறைசார்ந்த எழுத்தாளர் அப்பா. லேப்டாப் ஒன்றை வேண்டித் தரும்படி தட்ட முடியாத சில காரணங்களுடன் மகன் தந்தையிடம் கேக்கின்றான். ஆரம்பத்தில் அதற்கான சாதக சமிச்சைகளை தந்தை காட்டாவிட்டாலும் லேப்டாபை வேண்டிக் கொடுகின்றார், மகன் இரவிரவாக எப்போதும் லேப்டாபுடன் இருக்கின்றான். தந்தை நோட்டம் விட்டாலும் அதையும் தாண்டி லேப்டாபுடன் எப்போதும் இருக்கின்றான். காலையில் தந்தை கவனிக்கும்போது லேப்டாபில் மகன் ஃபேஸ்புக்கோடு இருப்பது புரிகின்றது. அதற்கு பிற்பாடு முக்கிய சஸ்பென்ஸ்,கிளைமாக்சோடு விறுவிறுப்பாக யாதார்த்தமாக படம் முடிகின்றது.

குறும்படம் ஆரம்பிக்கும்போது முதல் காட்சியே கவனிக்க வைகின்றது, மகன் பூக்கண்டுக்கு தண்ணீர் வார்கின்றான், தந்தை வீரகேசரியோடு கலாதியாக இருக்கின்றார் மதிலில் தேத்தனி கோப்பை, மெல்ல மெல்ல உரையாடல் இருவருக்கும் இடையில் யதார்த்தமாக செயற்கையின்றி விரிகின்றது, அசைமன்ட் செய்ய லேப்டாப் வேணும் நண்பர்கள் லேப்டாபில் இலகுவாக செய்ய தான்மட்டும் கையால் கீறி கடிணப்பட வேண்டும் என்று தன்பக்க காரணத்தை சொல்லும்போது ஒரு தந்தையின் பாத்திரம் இயல்பாக என்ன உணர்சிகளை வெளிக்காட்டி தனது கருத்துக்களை சொல்லுமோ அதேபோல் ஆச்சுபிசகாமல் அந்த தந்தை பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில படத்தின் ஆளுமையை புரிந்துகொள்ள முடிந்தது.

படம் முழுக்க வரும் உரையாடல்கள் எழுதப்பட்ட விதமும், காட்சி படிமங்களில் சொல்லப்பட்ட விதமும் சுவாரசியமாக உள்ளது, எந்த செயற்கைதனமும் இல்லை.

தந்தையாக நடித்த சத்குருவின் நடிப்பு ஆர்பாட்டம் இல்லாத அட்டகாசம், மிக கச்சிதமான பாத்திர தேர்வு, மகனோடு கதைக்கும்போது ஏற்படும் முகபாவனைகள், ஓவ்வொரு கைத்தொலைபேசி அழைப்புக்கும் கண்ணாடியை பொருத்தி கதைப்பது, இறுதியில் நண்பரோடு கைத்தொலை பேசியில் உரையாடும் போது உணர்ச்சி விளிம்புகளில் தடுமாறுதல் என்று கனகச்சிதமாக சிம்பிளாக நடித்து அசத்தியுள்ளார். மகன் ஃபேஸ்புக்கோடு இருப்பதை கண்டுவிட்டு மகனை கண்டிக்கும்போது வரும் வசங்கள் மட்டுமே கொஞ்சம் செயற்கைபோல் தோன்றுகின்றது, சத்குரு அந்த இடத்தில மட்டும் கொஞ்சம் நாடகத்தன்மையான நடிப்பை பிரதிபலித்திருந்தார், அந்த இடத்தில எழுதப்பட்ட வசனம் இன்னும் கொஞ்சம் யாதர்த்தமாக இருந்தால் சத்குருவின் நடிப்பும் யாதர்த்தமாக இருந்து இருக்கும்.

மகனாக நடித்த சர்மாவின் நடிப்பும் சத்குருவுக்கு சளைத்ததில்லை, யதார்த்தமான நடிப்பு, ஓவ்வரு வசன உச்சரிப்புகள், ஏக்கங்களை அதனுடாக வெளிப்படுதல் என்று நன்றாக நடித்துள்ளார். இடக்கை பழக்கம் ஆகட்டும் இடக்கையை உபயோகித்து எல்லா காட்சியிலும் நடிப்பதாகட்டும் ஒன்றிலும் முரணில்லை.

தந்தை லேப்டாப்பை வேண்டிக் கொடுக்கும்போது முகத்தில் காட்டும் பரவச உணர்சிகள், வேக வேகமாக லேப்டாப்பை தட்டிக்கொண்டு தந்தைக்கு பதிலளித்தல் என்று அட்டகாசமாக ஸ்கோர் செய்துள்ளார். அதிகம் லேப்டாபுடன் நேரத்தை செலவிடும்போது தந்தை படுக்க சொல்லும்போது ஒருநிமிஷம் ஒருநிமிஷம் என்று தந்தைக்கு பதில்சொல்லுதல் அனைத்தும் யதார்த்தம், இயக்குனரின் பன்முகத்தன்மை அபாரம்.

மிகவும் நுணுக்காமான இயக்கம். இயக்குனரின் உளவியல் புரிதல்கள் படத்தில் மிகப்பெரிய பிளஸ்பாயிண்டை தருகின்றது. கதாபத்திரங்களின் இயல்பை சரியாக ஸ்கிரிப்ட்டில் பின்னியுள்ளார், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான தலைமுறை இடைவெளிகளை சாரியாக கையாண்டுள்ளார். டயரி எழுதும்போது அம்மா இருந்தால்தான் கெஞ்சலாம் என்று குறிப்பிடும் இடம் புரிதல் உள்ள இடம்.

சரியான உணர்சிகளை சரியான முறையில் சரியாக தந்துள்ளார் இயக்குனர், உணர்சிகளை பதிவுசெய்த ஒளிபதிவு, இசை ஸ்பரிசமான ஒத்தாசை, கச்சிதமான உறுத்தாத எடிட்டிங். மொத்தத்தில் படம் பிடித்து இருக்கிறது, வாழ்த்துக்கள்... சியர்ஸ்

குறும்படத்தைபார்க்க இங்கே சொடுக்கவும்...


Comments

0 கருத்துக்கள்:

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP