Taare Zameen Par - 2007 (ஹிந்தி)

>> Wednesday, 30 September 2015

இந்தப் பதிவு காந்தி செத்திட்டாரா என்ற கணக்கில் சிலருக்கு இருக்கும். ஆனால் 2007-இல் வெளிவந்த Taare Zameen Par திரைப்படத்தை சமீபத்தில்தான் நான் பார்த்தேன் என்பதினை மிகுந்த தன்னடக்கத்துடன் சொல்லிக் கொள்கின்றேன். பொதுவாக பாலிவூட் திரைப்படங்கள் மீது பெரிதாக ஈடுபாடுகள் வந்ததில்லை. மலைச்சரிவுகளில் குட்டைப்பாவடை அணிந்து இடுப்பை வளைத்து பின்புறங்களை ஆட்டி நாயகிகள் ஆட, வெறிகொண்ட நாயகர்கள் பனிக்கரடியை பின்னால் முகர்ந்து புணர்வதுபோல நெருங்கி ஆட அவர்களுக்கு பின்னால் இன்னும் நாற்பதுபேர் ஆட, படம்பார்கும் எனக்கு மண்டைக்குள் ஆயிரம் அட்டைகள் புகுந்ததுபோல் இருக்கும். இந்த அரியண்டங்களைத் தாங்க முடியாமல் பாலிவூட் சினிமாக்களை தவிர்த்துவிடுவது உண்டு. தமிழ் சினிமாவில் மட்டும் அப்ப என்னதான் வாழுதாம் என்று உங்களுக்கு கேள்வி எழலாம் அதில் பிழையே இல்லை. அதே நிலைமைதான்.

விதிவிலக்காக நல்ல திரைப்படங்கள் ஹிந்தியில் வருவதுண்டு. அப்படி வருவதில் சிலது மட்டுமே அதிஷ்டவசமாக பார்கக்கிடைக்கும். அப்படிப் பார்த்தில் சிலாகிக்கக் கூடிய திரைப்படம்தான் Taare Zameen Par. அமீர்கான் மீது தனிப்பட்ட நம்பிக்கை எனக்கு அவரது சமூக செயல்பாடுகளை ஓட்டி இருகின்றது. இந்த டிவிடி கைக்குவரும்போது எந்த நம்பிக்கையும் இன்றி முன் எடுகோள்கள் எதுவும் இன்றி பார்க்கத்தொடங்கினேன்.

வசதியான பொருளாதார நிலையினைக்கொண்ட குடும்பத்தில் அப்பா,அம்மா,அண்ணாவோடு சேர்ந்து கடைசி பிள்ளையாக இஷான். இஷான் எப்போதும் கற்பனை உலகில் சஞ்சரிப்பவன். அவனது விசேஷ கற்பனையில் தினமும் வாழ்கின்றான். இரண்டாம் ஆண்டில் பெயிலாகி மீண்டும் இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டிருக்கின்றான். படிப்பில்தான் அவனுக்குப் பிரச்னை. எழுத்துக்களை வேறு பிரித்தறியவோ, நினைவில் தக்கவைத்துக் கொள்ளவோ,வாசிக்கவோ முடிவதில்லை. விளையாட்டில் ஒரு பந்தைக்கூட சீராக இலக்குவைத்து எறிய முடிவதில்லை. எழுத்துக்கள் எல்லாம் இடம் மாறி அவனது கற்பனையில் புகுந்து பரவசப்படுத்துகின்றன. சராசரி பொடியன்கள்போல் அவனால் வயதிற்கு தகுந்தால்போல் எழுதமுடியவில்லை. பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் மிக மட்டமான மதிப்பெண்கள். மற்ற எல்லா விஷயங்களிலும் அவன் ஒரு இயல்பான, துடிப்பு மிக்க, குறும்புத்தனமான துடிப்புடன்கூடிய பொடியன். அவனால் மிகுந்த கற்பனை ஆற்றலுடன் ஓவியம் வரைய முடிகின்றது.

படிப்பில் நிலைமை மேலும் சிக்கலாக பள்ளி நிர்வாகம் அவனைத் தொடர்ந்து அடுத்த வருடம் படிக்க அனுமதிக்க முடியாது எனக் கூறுகிறார்கள். எல்லை மீறிய செல்லத்தாலும் விளையாட்டுத்தனத்தாலும் அவன் இப்படியாகி விட்டதாகக் கருதும் தந்தை அவனைத் தனியாக வேறொரு ஊரிலிருக்கும் பள்ளியில் சேர்க்க முடிவு செய்கிறார். அங்கேயே ஆசிரியர்களின் கண்காணிப்பில் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டும் இது அவனது நிலைய மாற்றும் படிப்பில் குவிந்த கவனம் வரும் என்று நம்புகின்றார்.

இஷான் போக மறுக்கின்றான். அப்பா,அம்மாவின் ஸ்பரிசத்தில் இருந்து விலகிச்செல்வதினை கொடுமையாக மறுகின்றான். அழுது அடம் பிடிகின்றான். பெற்றோர்களுக்கு உள்ளே வலிகள் இருந்தாலும் அவனின் நன்மை கருதி புதிய பாடசாலையில் சேர்த்துவிடுகின்றார்கள். புதிய சூழல் அவனை பயப்படுத்துகின்றது. ஒருவித தனிமையில் தன்னை ஒப்படைக்கின்றான். அப்பா,அம்மாமீது தாங்க முடியாத கோவத்தில் இருக்கின்றான். தனிமையில் அவனது சோகங்கள் கரைகின்றது.

வகுப்பறையில் அவனது இயலாமை புரிந்து கொள்ளப்படமால் போகின்றது, ஆசிரியர்களால் தண்டிக்கப் படுகிறான். கிண்டலடிக்கபடுகிறான், சக மாணவனான கால் ஊனமுற்ற ஒருவன் மட்டும் அவனுக்கு ஆறுதலாக இருக்கிறான். இஷானும் அவனுடன் நெருக்கமான நண்பன் ஆகின்றான். இருவருக்கும் இடையிலான நட்பு ஆழமாக சில காட்சிகளில் சொல்லப்படுகின்றன.

இந்நிலை சென்றுக்கொண்டிருக்க பள்ளிக்கு புதிய தற்காலிக ஓவிய ஆசிரியராக வருகிறார் நிகும்ப். (அமீர்கான்). கற்பித்தலில் புதிய அணுகுமுறைகொண்ட இளைஞராக அவர் இருக்கின்றார். முதல் நாளே தனது விசேஷ திறமையினால் எல்லாச் சிறார்களையும் கவர்ந்து விடுகிறார். இஷான் மட்டும் அவருடன் ஒன்ற மறுக்கிறான். ஓவியமும் வரையாமல் ஒதுங்கிச் செல்லும் அவனுக்குள் ஏதோ பிரச்சினை இருக்கிறது எனப் புரிந்து கொள்ளும் அவர், அவனுடைய புத்தகங்களை பார்க்கிறார்.

அவன் விடும் பிழைகளின் ஒழுங்கு முறைகளை வைத்து அவனுக்கு கற்றல் குறைபாடு (Dyslexia) இருப்பதினை புரிந்துகொள்கின்றார். அவனுக்கு இருக்கும் வேறு திறமைகளை கண்டுபிடித்து அந்த வழியில் அவனை ஊக்குவித்து அவனுக்கு இருக்கும் பிரச்சனைகளைக் களையவேண்டும் என்பதினை உணர்கின்றார், அவனுடைய வீட்டுக்குச் சென்று பெற்றோரைச் சந்திக்கிறார். அங்கு அவன் வரைந்த படங்களைப் பார்த்து, அவனிடம் இருக்கும் ஓவியம் வரையும் அசாத்திய திறனைக் கண்டு கொள்கிறார். ஓவியத்தினை தூண்டுதலாக வைத்து அவனது மையப் பிரச்னையை அதிலிருந்து அவனை மீட்க முயல்கின்றார்.
ஒரு நாள் வகுப்பறையில் Dyslexia குறைபாட்டுக்கான அறிகுறிகளான தோற்றப்பாடுகளை விவரித்துச் செல்கின்றார் ஏனைய மாணவர்கள் அதனை நகைச்சுவையாக எண்ணி சிரிக்க, இஷான் மட்டும் அதிர்ச்சியடைகிறான். இறுதியில் இப்படியெல்லாம் ஒருவனுக்குத் தோன்றியிருக்கு அவன் யார்? என்று கேட்க, அவன் தன்னைத்தான் கூறுகிறார் என்றெண்ணி திகைக்கிறான். அவர் உடனே ஐன்ஸ்டைனின் படத்தைக் காண்பிக்கிறார். ஆச்சரியத்துடன் அவனிருக்க, வரிசையாக டாவின்சி, எடிசன், அபிஷேக் பச்சன் போன்ற பிரபலங்களின் படங்களைக் காட்டுகிறார். அவனது தாழ்வு மனப்பான்மையை நீக்க அவர்கையாளும் உத்திகள் நீக்கமர அற்புதமாக காட்சிப்படிமமாக ஒளிப்படம் ஆகின்றது.

இறுதியாக இஷானிடம் தனியாக 'இந்த பாதிப்புக்குள்ளான இன்னொருவனைப் பற்றி மட்டும் நான் சொல்லவில்லை' என, மீண்டும் இஷான் திகைக்க 'அது நான்தான்' என்கிறார் நிகும்ப்.

அதன் பின் இஷான் நிகும்ப் உடன் நட்பாகி விடுகிறான். இஷானுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றாக சுடர்விடுகிறது. தாழ்வுமனப்பான்மை மெல்ல மெல்ல போகின்றது. நிகும்ப் தலைமை ஆசிரியர் அனுமதிபெற்று, எல்லாப் பாடங்களையும் அவனுக்கு தனியே பிரத்தியேகமாக கற்பிக்கிறார். அவனால் இப்பொழுது வாசிக்க, எழுத ஓரளவு முடிகின்றது. ஒருகட்டத்தில் முழுவதுமாக முன்னேறிவிடுகின்றான்.

பாடசாலையில் திறந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளும் ஓவியப் போட்டி ஒன்றை நடாத்துகிறார் நிகும்ப். அதில் இஷானுக்கு முதலிடம் கிடைக்கிறது. பாடசாலையின் ஆண்டு இதழில் முகப்பு அட்டையில் அவன் வரைந்த படம். விடுமுறைக்காக அவனைத் தம்முடன் அழைத்துச் செல்ல வந்த அவனின் பெற்றோர் அவனைப் பற்றி ஆசிரியர்கள் பெருமையாகப் பேச மிகுந்த ஆச்சரியப்படுகிறார்கள். மீண்டும் இஷானை அழைத்துச் செல்ல முற்பட, அவனோ மறுத்து திரும்பி நிகும்பிடம் ஓடிவர, அவர் அவனித் தூக்கிக் கொள்ள படம் நெகிழ்ச்சியாக முடிவைகின்றது.

இஷான் பாத்திரத்தில் நடித்த சிறுவனின் நடிப்பு பிரமிக்கவைக்கும். ஒவ்வொரு முகபாவனைகள், தத்தளிக்கும் உணர்சிகள் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.
வர்த்தக ரீதியான படங்களில், மிக வித்தியாசமான முயற்சிகளை தொடரந்தும் செய்து வருபவர் அமீர்கான். அவரது இயக்கத்தில் வெளியான முதலாவது படம் இது. அவருக்குள் உறங்கிக்கொண்டிருந்த இன்னொரு புதிய ஆளுமையைக் கண்டு பிரமிக்க வைக்கிறது. புதிய கதைக்களம், சலிப்புத் தட்டாத தொய்வில்லாத நெகிழ்ச்சியான திரைக்கதை. முதல் முயற்சியிலேயே மிகச் சிறந்த திரைபடம் ஒன்றினை தந்துள்ளார். தான் இயக்கிய படத்தில் தனக்கு மிகச்சாதாரமான பாத்திரத்தினை ஒதுக்கி ஒரு சிறுவனுக்கு முக்கிய பாத்திரம் கொடுத்து அசத்தியுள்ளார். நம்ம தமிழ் சினிமாவில் இதுவெல்லாம் நடக்குற கதையா?

இந்தப் படத்தை பார்க்கவைத்த சன்சிகனுக்கு கோடானுகோடி நன்றிகள்.


Read more...

A Gun & A Ring - ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்

>> Tuesday, 22 September 2015

யாழ் சர்வதேச திரைப்படவிழாவில் இறுதியாகக் காட்சிப்படுத்தப்பட்ட திரைப்படம் A Gun & A Ring (ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்). இத்திரைப்படத்தை வெண்திரையில் பார்வையிட யாழ் திரைப்பட ரசிகர்கள் ஒருவித எதிர்பார்ப்புடன் வந்திருந்தனர். நானும் பரவசத்துடன் அத்திரைப்படத்தைப் பார்வையிட அரங்கில் மெல்லிய குளிர்காற்றில் ஒப்புவித்துக் காத்திருந்தேன். 

இத் திரைப்படத்தின் நிகழும் களம் கனடாவாக இருக்கின்றது. கனடாவிற்குப் புலம்பெயர்ந்த ஈழத்து அகதிகள், ஒரு சூடான் நாட்டு அகதி, இரு கனடிய காவற்துறைப் புலனாய்வாளர்கள் ஆகியோர் கதைமாந்தர்கள். நாயகன், நாயகி எனப் பிரதானப்படுத்தும் பாத்திரங்கள் எவரும் இல்லை. மிக வித்தியாசத் தன்மைகளைக்கொண்ட ஆனால் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து செல்லும் ஆறு தனிக்கதைகளைக் கொண்டிருக்கின்றது. ஆறு தனித்தனி கதைகளின் மையக்கோர்ப்புத் திரைக்கதையில் நிகழ்கின்றன. அதன் மையம் போரின்பின் எஞ்சிய உளவியல் நெருக்கடிகளின் உற்கூறுகளின் பிரதிபலிப்பின் வடுவாக இருக்கின்றன. ஒருமோதிரம் இவற்றை இணைகின்றது. இராண்டாயிரத்துக் பிற்பாடு உள்ள அகதிகளின் வாழ்வியல்போக்கின் மாறுதல்களை, நெருக்கடிகளைக் கதையின் மையம் தொகுத்துக் கொண்டிருக்கின்றது

1980களின் நடுப்பகுதியில் தமிழகத்தில் விடுதலை இயக்கங்களின் பயிற்சி முகாம்கள் பரவலாக இயங்கிக்கொண்டிருந்தன. அந்த முகாம்களின் மனித உரிமை மீறல்கள் பெருவாரியக இடம்பெற்றுக்கொண்டிருந்தன. கொடூரமான படுகொலைகள் சித்திரவதைகள் ரகசியமாக நிகழ்த்தப்பட்டிருந்தன. தாயக விடுதலைக்காகப் பெரும் கனவுகளோடு சென்ற பல இளைஞர்கள் வெறும் சந்தேகங்களின் பேரிலே அடித்துத் துடிக்கக் துடிக்கக் கொல்லப்பட்டார்கள். அந்தச் சந்தர்ப்பத்தின் மைய இழையில் இருந்தே “ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்” படத்தின் கதை ஆரம்பமாகிறது. 

அச்சித்திரவதைகளை நிகழ்த்தும் இயக்கம் என்ன இயக்கம் என்று ஊகிப்பதினை பார்வையாளர்கள் ஊகித்துப்புரிந்துகொள்ளும் வகையில் விடப்பெற்றிருக்கின்றன. முக்கியமாக விடுதலைப்புலிகளை அந்த இயக்கமாகத் தாம் காட்சிப்படுத்தவில்லை என்பதினை இயக்குனர் சில வசன இடைச்செருகல் மூலம் தெளிவுபடுத்துகின்றார். அந்த இயக்கத்திலிருந்து தப்பியோட திட்டமிட்ட போராளிகள் விசாரணை செய்யப்படும்போது விசாரணைக்கு உள்ளாகும் போராளி, அங்கிருந்து தப்பிப் புலிகள் இயக்கத்தின் முகாமிற்கு ஓடத் திட்டமிட்டிருந்ததாகச் சொல்கின்றான். இந்த வசனம் படத்தில் சேர்க்கப்பட்டிருக்காவிட்டால் மிகப் பெரிய எதிர்ப்புகளைப் புலம்பெயர் தமிழர்களிடன் சந்தித்திருக்கலாம். சித்திரவதைக்குப் பொறுப்பானவனுக்குப் படத்தில் கொடுக்கப்படும் “இரும்பன்” என்ற பெயர் புனைப்பெயர் புளொட்டில் ஒருகாலத்தில் நடுங்கவைத்த பெயரும் “டம்மிங்” கந்தசாமியின் செல்லப்பெயருமான “சங்கிலி” என்ற பெயரோடு பொருந்திப்போகின்றது. புளொட்டை அவ்சித்திரவதைகளை நிகழ்த்தும் இயக்கமாகப் பார்வையாளன் எடுத்துக்கொள்வதற்கான வெளி திரைப்படத்தில் கொடுக்கப்படிருகின்றது


கதையின் உட்கட்டுமான படிமத்தில் இதுவரை தமிழ்ச் சினிமாவில் பிரதிபலிக்கமுடியாத இரு பேசாவிடயங்கள் இந்தப் படத்தில் பேசப்படுவதைக் கவனத்தில்கொள்ள முடியும். ஓரினசேர்க்கையை விரும்பும் ஒருபாலுறவாளர்களான இரு தமிழ் இளைஞர்களின் காதல், யதார்த்த நிலைமையில் கலைக்கப்படுவதையும் அதன் துயரங்கள் மனவழுத்தங்கள் படம் முழுவதும் நிறைந்திருக்கின்றன. ஆறு கதைகளில் இது ஒரு கதையாக இருந்தாலும் படம் முழுவதும் அந்தத் துயரை தொட்டுக்கொண்டே இருக்கின்றதது. 

ஓர் ஆபிரிக்க அகதிக்கும் ஈழத் தமிழ்ப் பெண்ணுக்குமான காதல் அரும்பும் மகத்துவமான தனித்துவங்கள் மிகச் சில காட்சிகளிற்குள்ளேயே நுட்பமாகத் திகட்டாத உணர்வுப்பூர்வத்துடன் ஒளிச்சட்டங்களில் உருவகிக்கின்றது. ஒருவகையில் ஆழமாகத், தமக்கிடையே ஒத்த துன்பங்களைத் தமது உரையாடல்கள் மூலம் ஒருவரையொருவர மீட்டுக்கொள்வதும் ஆறுதலாக இருப்பதும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுகின்றது. இருவரது இணைவுடனேயே படம் முடிவுக்குவருகின்றது

தமிழகத் திரைப்ட உருவாக்கப்பாணியில் இருந்து முற்றிலும் விடுபட்டு யதார்தவதமாகவும் உற்புற அகப்புற திரைப்ட கட்டுமான உருவாக்கத்தில் பரிமாணித்து இருப்பது மிகப்பெரிய ஆறுதல். இலங்கையில் உருவாகப்படும் தமிழ் குறும்படங்கள், முழுநீளதிரைப்படங்கள், பாடல்கள் பிரதானமாகத் தமிழகத் திரைப்படங்களைப் பிரதிசெய்ய முயன்று தமது அழகியலை அழித்துச்செல்கின்றன. வசனங்களை மாற்றுவதிலோ போர்சார்ந்த வலிகளைப் பேசவதனாலோ இலங்கை தமிழ்சினிமாவாக அடையாளப்படுத்தும் என்று நினைகின்றார்கள். ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் உரையாடல், காட்சிக்கட்டுமானங்கள், உடல்மொழி என்பவற்றில் தன்னைத் தனித்துவமாக நிறுவி இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை முறையின் சுழற்சிகளை அப்பட்டமாக ஒப்பேற்றுகின்றது

படத்தில் ஒலிக்கும் வசனங்கள் இலங்கைதமிழ் வட்டாரவழக்கை மிகக்கூர்மையாகப் பிரதிபளிகின்றது. மதன் பாஸ்கியின் உரையாடல்கள் பிளாக்-கொமடியின் தன்மையைக் கொண்டிருக்கின்றன. பார்வையாளர்கள் விழுந்துவிழுந்து சிரித்ததை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. 

நான்லீனியர் திரைக்கதையமைப்பில் கதை நகர்வதும் பார்வையாளர்கள் பின்னால் துண்டு துண்டாகக் காட்சிப்படுத்தப்படும் காட்சிகளைப் பார்த்துப் புரிந்துகொண்டு தமக்கிடையே சிலாகிப்பதினை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. 
இயக்குனர் லெனின்
ஒளி, ஒலி, படத் தொகுப்பு மற்றும் இதர தொழில்நுட்ப ரீதியில் படம் அறியப்பட்ட தமிழர் தரத்தை ஓரளவுக்கு மீறியிருக்கிறது. தொண்ணூறாயிரம் கனடிய டொலர்கள் செலவில் இப்படத்தை லெனின் தயாரித்திருக்கிறார் என்றால் நம்புவது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். இரண்டே வாரத்துக்குள் படத்தைத் தயாரித்திருக்கிறார். பின்னணியில் பல சிரமங்களை எதிர் கொண்டிருக்கலாம். முதன்மையான பத்துத் திரைப்படங்ளைப் பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் “ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்” திரைப்படத்துக்குத் தனியிடமுண்டு. காலம் அந்த மரியாதையை இத்திரைப்படத்திற்குக் கண்டிப்பாக வழங்கும். சமரசத்தில் தன்னை உற்படுதாமல் தொடர்ந்தும் லெனின் இயங்குவாரானால் சர்வதேசத் திரைப்படச் சந்தையில் லெனினும் தனற்கான தனியிடத்தை ஏற்படுத்துவார்.


Read more...

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP