ஈழமும் மறைக்கப்பட்ட கொடூர பத்திரிகை வலிகளும்

>> Saturday 14 March 2015

கொடூர இனவாதங்களும் இரத்தமும் சதையுமாக வெட்டி எறியப்பட்ட கருத்து சுதந்திரத்தையும் கொண்ட ஈழத்தில் பத்தொன்பதாவது வயதில் பத்திரிகை துறைக்குள் நுழைந்து எக்கச்சக்க வலிகள் கொண்ட ஈழப்போரில் இராணுவம், இந்திய அமைதிப்படை, ஏனைய போராளி குழுக்களின் கொடூர அட்டூளியங்கள் மத்தியில் யாழ்ப்பாணத்தில் உள்ள உதயன் பத்திரிகையில் பல அச்சுறுத்தல்கள் மத்தியில் ஆசிரியராக பணியாற்றியவர் வித்தியாதரன். பிரபல ஆங்கில பத்திரிகை ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்க கடத்தப்பட்டு படுகொலை செயப்யப்பட்ட சில காலத்தில் வெள்ளைவானில் பலர் முன்னிலையில் வித்தியாதரன் கடத்தப்பட்டு பின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்சவுக்கு கொடுக்கப்பட்ட வெளிநாடுகளின் அழுத்தத்தில் அவரின் கடத்தல் கைதாக மாற்றப்பட்டு இறுதியில் குற்றச்சாட்டுகள் ஏதும் நிருபிக்க முடியாமல் சித்திரவதைகளுடன் விடுதலை செய்பப்பட்டார். தான் வாழ்ந்த பத்திரிகை அனுபவத்தினை சுவாரசியமாக “என் எழுத்தாயிதம்” என்ற சுயசரிதை நூலின்னூடக பதிவுசெய்துள்ளார்.

ஒரு சிறுகுடா நாட்டில் போர்காலத்தில் பத்திரிகை ஆசிரியராக இயங்குவது எந்தளவு அபாயகரமானது என்பது நமக்கு தெரியும் ஆனால் அதன் உண்மை விளிம்புகளை வாசிக்க வாசிக்க புல்லரிக்கும் வகையில் புரிந்துகொள்ள முடிகின்றது. அடிக்கடி தனது பணிநிமிர்தம் விடுதலை புலிகளையும் இலங்கை இராணுவத்தையும் மாறிமாறி சந்திக்க வேண்டியுள்ளது, பலசமயம் மிக இரகசியமாக புலிகளை சந்திக்க வேண்டிய அழுத்தம். துண்டுசீட்டில் எழுதி பத்திரிகை காரியலத்துக்கு புலிகளால் அனுப்படும் மர்ம இடங்களுக்கு இராணுவத்துக்கு பாச்சா காடிட்விட்டு சென்று சந்திக வேண்டிய அபாய சுவாரசிய நிர்ப்பந்தங்கள். ஆணைகோட்டையில் புலிபோராளிகளை சந்திகச் சென்றபோது பாரிய படைநடவடிக்கைள் முன்னெடுக்க அதில் இருந்து நழுவியோடி சந்திப்பு நிகழ்த்த இடமான பேக்கரியின் உரிமையாளர் கைதுசெய்யப்பட தானும் இராணுவத்தால் கைதுசெய்யப்படுவேன் என்ற அச்சத்தில் கழித்த நாட்களையும் சுவாரசியமாக பதிவு செய்கின்றார்.

மிகநேர்மையாக பத்திரிகை சுதந்திரத்துக்கு ஏற்ப இயங்கிய வித்தியாதரன் தனது ஊடாட்டத்தை இராணுவ தளபதிகளுடனும் புலித்தலைவர்களுடனும் சமமாக பேணிக்கொண்டார். பிரபாகரன், தமிழ்செல்வன், அன்டன் பாலசிங்கம் ,பொட்டம்மான், நடேசன் போன்ற முக்கிய தலைவர்கள் நூலில் தென்படுகின்றார்கள். அவர்களின் மதினுட்பமான உரையாடல்கள், சிந்தனை தளங்கள் போன்றவற்றை நமக்கு காட்டுகின்றார். அதே சமயம் ஜெனரல் பலகல்ல, ஜெனரல் கருணாரத்த, பிரிகேடியர் சுஸந்த மெணடிஸ், ஜென்ரல் மாறம்ப போன்ற இராணுவ தலைவர்களையும் அவர்களின் மனித தன்மையையும் அருகில் பார்த்து எழுத்துகளில் வடித்துள்ளார். மிகப் பெரும் எண்ணிக்கையில் இளம்போராளிகள் செதுக்கிடப்பதைப் பார்த்து மனம் நொந்து இளம்வயதில் வாழவேண்டிய வயதில் இப்படி சாவது தேவையா? இவர்களின் அழிவை நிறுத்தக்கூடாதா? என் கவலைப்படும் கருணாரத்த, வித்தியாதரனின் மகளின் பிறந்த நாளின்போது சாதாரண மனிதராக கலந்துகொண்டு வந்த விருந்தினர்களை கவனிக்கும் சுஸந்த மெணடிஸ் போன்றவர்கிளின் இன்னுமொரு முகத்தை காட்டுகின்றார்.

தொடர்ந்தும் யாழ்மக்களின் அபிமான பத்திரிகையாக உதயனை இயக்கவும் கடும் யுத்தகாலத்தில் அச்சுபேப்பர் தட்டுப்பாடுகள் இடம்பெற அதை முறியடிக்க கையாண்ட உத்திகளை அட்டகாசமாக வியக்கவைக்கும் வகையில் குறிப்பிடுகின்றார். எப்போதும் நடுநிலையான பத்திரிகையாக செயல்பட்டாலும் பலரின் மனதில் உதயன் பத்திரிகை புலிச்சார்பு பத்திரிகையாகவே பார்க்கப்பட்டது. அது உண்மைக்கு புறம்பானது என்பதை சில சம்பவங்களோடு எழுதுகின்றார். புலிகளின் கட்டுபாட்டில் யாழ்குடாநாடு இருந்தபோது மாவீரர் தினத்தின்போது புலிக்கொடியை அணைத்து நிருவனங்களும் ஏற்றவேண்டும். உதயன் அலுவகத்திலும் புலிக்கொடியை பறக்கவிட நிர்பந்திக்கும்போது அதனை கடுமையாக மறுத்து பிராபகரன்வரை அந்த பிரச்னை சென்றதை குறிப்பிடுகின்றார். ஒரு கட்டத்தில் புலிகளினாலே உதயன் பத்திரிகை தடைசெய்யப்பட இருந்தபோது அதில் தெய்வாதீனமாக தப்பிய சம்பவங்களையும் சொல்கிறார்.
வித்தியாதரன்
புலிகளின் புலனாய்வுத் தலைவர் பொட்டம்மான் தொடர்பாக வரும் அத்தியாயங்கள் மிக சுவாரசியமானது, சிறுபிராயத்தில் இருந்தே தனிப்பட்ட முறையில் பொட்டம்மானை வித்தியாதரனுக்கு தெரிந்திருகின்றது. இயற்பெயராக சண்முகலிங்கம் சிவசங்கர் என்ற பெயரைக்கொண்ட பொட்டம்மானுக்கு இயக்கப்பெயரான பொட்டம்மான் என்ற பெயர் வந்தது தொர்டபான வரலாறுகளும் இடம்பிடிக்கின்றன. இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் குடிகொண்டு  ஈ.பி.ஆர்.எல்.எப் உடன் புலிப்போராளிகளை தேடிக்கொண்டிருக்க அப்போது யாழ் கட்டளை தளபதியாகவிருந்த பொட்டம்மானை முரசொலி பத்திரிகை ஆசிரியருடன் சந்திகவேண்டிய தேவை! வல்வெட்டித்துறைக்கு வரச்சொல்லி புலிகளால் உத்தரவு. குமிக்கப்பட்ட இந்திய இராணுவங்கள் வல்வெட்டித்துறையில் சல்லடையிட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கிடையில் பொட்டம்மானை சந்திக செல்கின்றார். சுத்திவர இராணுவம் இருந்தபோதும் மிக சாதாரமாக பதற்றமின்றி ஒரு வீட்டில் டசின்கணக்கான புலிப்போரளிகளுடன் பொட்டம்மான் இருக்கின்றார். அந்த அத்தியாயங்கள் தொடர்பான விபரிப்புகள் மிககச்சிதமாக பதிக்கப்படுள்ளது.

அன்டன் பாலசிங்கம் தொடர்பான அவரின் ஊடாட்டங்கள் நல்ல நட்பு அனைத்தையும் தயக்கம் இன்றி சொல்கின்றார். மாவீரர் தின உரையில் புலிகளின் தலைவர் பிராபகரன் உரையாற்றும் உரை அன்டன் பாலசிங்கத்தினால் இறுதியாக வடிவமைகபடுகின்றது என்பதையும் சொல்கின்றார். சில சமயம் அந்த உரையில் தன்னுடைய உள்ளீடுகளையும் வழங்கியதாக சொல்கின்றார், ஆனால் அது எப்படி சாத்தியம் ஆகிற்று என்பதை சொல்லப் போவதில்லை என்கின்றார். இறுதி காலப்பகுதியில் அன்டன் பாலசிங்கம் புலிகளின் இயக்கத்தில் இருந்து தள்ளிவைக்கப்பட்டபோது அவர் புறக்கணிக்கப்பட்ட விதங்களையும் மென்மையாக பதிவு செய்கின்றார். புற்றுநோயினால் இறக்கமுதல் மரணபடுக்கையில் லண்டனில் அன்டன் பாலசிங்கத்தை பார்வையிடச் சென்றபோது அவர் சில முக்கிய உலக அரசியல் விடயங்களை பகிர்ந்துகொண்டதாகவும் அவற்றை பொதுவெளியில் இப்பொது சொல்ல முடியாத நிர்ப்பந்தங்கள் என்றும் வரும்காலங்களில் சூழ்நிலை வந்தால், தான் உயிருடம் இருந்தால் அவற்றை சொல்வேன் என்கிறார். அவை இன்னும் எங்களை சிந்திக்கவும் அது என்னவாக இருக்கும் என்று பதற்றத்தையும் அடையவும் செய்கின்றார். 

திருகோணமலை கடற்கரையில் காந்திசிலையருகே பொறியியல்பீட மாணவர்கள் ஐவர் இராணுவத்தால் பலர் முன்னிலையில் நிலத்தில் படுக்கவைக்கப்பட்டு சுட்டுகொலப்பட்டனர். அவர்கள் அனைவரும் பயன்கிரவாதிகள், கொண்டுவந்த கிரனைட் வெடித்தே இறந்தார்கள் என்று அரசாங்கம் கதைவிட்டதாக பதிவு செய்கின்றார். ஆனால் தலையில் சுடப்பட்டு மூளை சிதறிய மாணவர்களின் புகைப்படங்களை பத்திரிகையில் வெளியிட்டு அரசாங்கத்தின் பொய்களை உடைத்தார். அதானால் ஏற்பட்ட விபரீதங்கள், புகைப்படம் எடுத்திருக்கலாம் என்ற ஊகத்தில் கொலப்பட திருகோணமலை உதயன் புகைப்பட பிடிப்பாளர்கள் அனைவரின் வலிகளையும் இயல்பாக பதிவு செய்கின்றார்.

இன்னும் நிறைய சுவாரசியமான விடயங்கள்,வலிகள், திடுக்கிடல்கள் எக்கச்சச்கமாக நூலில் கிடைகின்றன. அனைத்தையும் பதிவின் நீளம் காரணமாக கூறமுடியவில்லை. இயல்பான தமிழில் தமிழர்கள் கடந்து வந்த பாதைகளை ஒரு பத்திரிகையாளனாக பதிவுசெய்துள்ளார். கண்டிப்பாக தமிழர்கள் படிக்க வேண்டிய புஸ்தகம் என் எழுத்தாயிதம்.

அச்சுப்பதிப்பும் வெளியீடும் – சிவராம் பதிப்பகம் கல்லூரி வீதி,யாழ்ப்பாணம், தொலைபேசி என் – 012-221 9440




Comments

1 கருத்துக்கள்:

Kumaran 14 March 2015 at 15:14  

I too read this book and I'm waiting for his second book in which he promised to bring out some shocking revelations of what Bala told him in his death bed.

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP