ஜீ உமாஜி - ஈழத்து சுவாரஸ்ய பதிவகர்

>> Thursday 19 February 2015



ஜீ உமாஜி.. இந்தப் பெயரைச் சொன்னாலே என் தலையில் உள்ள முடிகள் எல்லாம் நட்டுக்கொண்டு நிற்கும். அந்தளவுக்கு என்னை போட்டுத் தாக்கிய பெயர். ப்ளாக் படிபவர்களுக்கு உமாஜியின் வானம் தாண்டிய சிறகுகள் ப்ளாக் ரொம்பவே பரிச்சியமானதாக இருக்கும். எனக்கு எப்படி பரிச்சியமானர் என்று சொல்லப்போனால் கொஞ்சம் என் சொந்த வரலாறும் சொல்லவேண்டியிருக்கும் எனவே கொஞ்சம் பொறுத்தாள்க.

இணைய பக்கம் வரமுன் புத்தகங்கள் மட்டுமே என்னை கொடூரமாக இன்ப வலிகளுடன் ஆக்கிரமித்தது. சிறுவயதில் ராணிகாமிஸ் மாயாவி, ப்ளாஷ்கார்டின் என்று சுத்தித்திரிந்தாலும் பதின்ம வயதுகளில் ராஜேஸ்குமாரின் லைட் ரீடிங் கிரைம் நாவல்களுடன் அடுத்த சகாப்தம் ஆரம்பமாகியது. அது ஒரு தற்செயல்தான், பொழுதுபோகாமல் வீட்டிலிருந்து கத்திக்கொண்டிருக்கின்றேன் என்று அம்மாதான் சனசமூகநிலைய நூலகத்திலிருந்து எடுத்த ராஜேஸ்குமாரின் நாவலை வாசிக்கும்படிதர அப்படியே எழுத்துலகம் என்னை வசீகரித்தது. எக்கச்சக்கமான ராஜேஷ்குமாரின் நாவல்களை வாசித்து தள்ளினேன். ஒரு கட்டத்தில் ராஜேஸ்குமாரின் நாவல்கள் தீர்ந்துபோக சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று போனேன் அவர்களும் என் தாகங்களை ஓரளவுதீர்க்க சுஜாதா அறிமுகமாகினார். சுஜாதாவின் கற்பனைதிறன், எழுத்துநடை, சுவாரசியமான கொலைகள் எல்லாம் இன்னுமொரு கோணத்துக்கு என்னை கடத்திச் சென்றது. அதிலிருந்து மீளவே முடியவில்லை. எக்கச்சகமான நாவல்கள் வாசித்து சுஜாதாவின் கற்பனை இன்பக் கடலில் சுவாரசியமாக நீச்சல் அடித்தேன். சனசமூகநிலைய நூலகத்திலிருந்த சுஜாதாவின் புத்தகங்கள் தீர்ந்துபோக தவிப்புகள் அதிகமாகியது.பாலகுமாரன், இந்திரா சௌந்தரராஜன், அகிலன், சாண்டிலியன், கல்கி என்று வாசித்தாலும் சுஜாதாவின் வசீகரம் திரும்பத் திரும்ப தீண்டியது.சுஜாதாவின் புத்தகங்கள் இல்லாமல் கைநடுக்கமும்வர ஹீம்.. இது சரிவரா..பொறுக்க முடியாமல் யாழ் நூலகக்தில் அங்கத்துவனானேன்.

அங்கே சுஜாதாவின் அனைத்து புத்தகங்களும் ஏறக்குறைய இருந்தன. ஒரு கிமைக்கு இரண்டு புத்தகங்கள் என்று கணக்குப்போட்டு ஜிலுஜிலுப்பாக கொஞ்சக் காலத்திலே அனைத்து சுஜாதாவின் புத்தகங்களையும் வாசித்துமுடித்தேன். யாழ் நூலகம்தான் மிகப்பெரிய வெளிச்சத்தை காட்டியது ஜெயமோகன்,ஜெயகாந்தன், சாரு, ஈழ எழுத்தாளர்கள் என்று பலரை அறிமுகப்படுத்தித் தந்தது. எக்கச்சக்கமாக வாசிக்க முடிந்தது. வரலாறு, கம்யூனிஸம், உலகசினிமா என்று பிரபஞ்ச நாக்கைபோல் நீண்டு கொண்டேயிருந்தது. என்னதான் ஈழம் சொந்த மண்ணாகயிருந்தாலும் ஈழத்து எழுத்தாளர்கள் பெரிதாக கவரவில்லை (ஷோபா ஷக்தியை தவிர்த்து) ஈழபத்திரிகைகளில் வெளியாகும் சிறுகதைகளை வாசிக்க செல்லும்போது நடுங்கிக்கிட்டே செல்லவேண்டியிருந்தது. நமது மண்ணிலிருந்து யாரும் அட்டகாசமாக எழுதமாட்டார்களா என்று இரத்த கண்ணீர் சிந்த வழிமேல் விழிவைத்து காத்திருந்தேன்.

அப்போது ஈழப்போர் உச்சகட்டத்தில் இருந்தகாலம். யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவ தளபாடங்கள் கண்டிவீதி வழியாக செல்லும். அடிக்கடி இராணுவ வண்டிகளை இலக்கு வைத்து கிளைமோர், கிரனைட் சர்வசாதரணமாக வெடிக்கும். நிலைமை மோசமாக இராணுவ வண்டிகள் பலாலியிலிருந்து ஆனையிறவு செல்லும் வரை கண்டிவீதி,பலாலி வீதியை மூடிவிடுவார்கள், அதாவது இராணுவம் மட்டுமே வீதியில் பயணிக்கும்.சொல்லி வைத்தால்போல் எனது வீடும் கண்டிவீதியிலிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் வீட்டைவிட்டு வெளியேவராமல் அவுக்கன புத்தர்போல் இருக்க வேண்டியதுதான். வெளியே சென்றவர்கள் மாட்டினால் ஒழுங்கைகளில் முடங்க வேண்டியதுதான்.  சுதந்திரமாக செல்ல முடியாது. இந்த நேரத்தில் அடிக்கடி நூலகம்சென்று வரும்போது முடங்கவேண்டியிருந்தது. 

உயர்தரம் நெருங்க ஏகப்பட்ட டென்ஷனில் இலக்கியங்களுக்கு தற்காலிகமாக டாட்டா சொல்ல வேண்டியேற்பட்டது. உயர்தரம் முடிந்து கொஞ்சம் லேட்டாகவே இணையப்பக்கம் கரையொதுங்கினேன். நிறைய வலைப்பூக்கள் (ப்ளாக்) வாசிக்க ஆரம்பித்தது அப்போதுதான் டாம்.. டூம்...டுமில் அண்ணன் உமாஜி அறிமுகமாகினார். அவரின் எழுத்துகள் உச்சம்தலையில் ஐஸ்கட்டியை தூவியதுபோல் கிளுகிளுப்பாக்கியது, வாசிப்பு இன்பத்தின் சுவாரசிய உன்னத தருணங்களை உமாஜியின் எழுத்துகளில் காணமுடிந்தது. அவரின் ப்ளாக்கை சந்தம் சந்தடியில்லாமல் அமைதியாகப் படித்துகொண்டிருந்தேன். ஆரம்பத்தில் எந்த பின்னூட்டம்களையும் வழங்கவில்லை. வாசிக்க வாசிக்க என்வென்று சொல்வது ஆகா..ஓகோ...இதுவல்லவா வாசிப்பின் ஆகர்சம் என்ற நிலைமைக்கு செல்ல முடிந்தது. இதுவரை உமாஜி பொதுவான சில விஷயங்களையும் உலகசினிமா விமர்சனங்களையும் ப்ளாக்கில் எழுதிவந்தார். அவரின் எழுத்துநடையில் தெறிக்கும் நகைச்சுவை கட்டிப்போட்டது. சுஜதாவின் தீவிர பாதிப்பு அவரிடமும் இருந்திருக்க வேண்டும். சொந்த பல வலிகளை சொல்லும்போது அதை நகைசுவையுடன் சொல்லும் திறனை முதலில் சுஜாதாவிடம் பார்தேன். அதன்பின் பலரிடம் சுயஎள்ளல் கூடிய எழுத்துகளை படித்திருந்தாலும் உமாஜியின் எழுத்துநடையே அதிகம் சுவாரசிக்க வைத்தது.

4தமிழ்மீடியாவில் உமாஜியின் பதிவுகள் வரத்தொடங்கியது, அட்டகாசமாக ஒவ்வொரு அத்தியாயங்களும் அவரின் சொந்த அனுபவக் கதைகளை கொண்டிருந்தது. தொண்ணூறுகளில் சிறுவனாக வாழ்ந்து ஈழத்து போர்வலிகளை உன்னதமாக உணர்ந்து அதையே நகைச்சுவையுடன் பதிவிடுவார். வாசிப்பின் முடிவில் ஒரு சிறுவலி எஞ்சும். 80 களுக்குப் பின்னதான ஈழத் தலைமுறையின் அனுபவ ஆவணமாகும் இவரது எழுத்துக்கள் என்று 4தமிழ்மீடியாவில் குறிப்பிடப்பட்டு வெளிவரும். 80களுக்கு பின்வாழ்ந்த ஈழத் தலைமுறையின் வலிகளை உணர்வுகளை வரலாறுகளை சுயஎள்ளல்களுடன் பதிவிடும் தனித்தன்மை இவரது எழுத்துகளிலே வினோதமின்றி இயற்கையாக ஜொலிக்கும். இந்த சீரிஸ் எப்போது தொகுப்பாக புத்தகமாக அச்சில் வருமென்று காத்துக்கிடக்கின்றேன். முதலாவது விற்பனை பிரதியை அடித்துப்பிடித்து வேண்டிவிடவேண்டும். இந்த சீரிஸிலிருக்கும் அனுபவகட்டுரைகள் சிறுகதைக்குரிய பண்பில் ஈழத்துமண்வாசனையில் அட்டகாசமாகவிருக்கும்.

உமாஜியை தன்னுடைய புகைப்படங்ளை அதிகம் பேஸ்புக்கில் பதிவிடுவதில்லை. அப்படியும் மீறித்தென்படும் புகைபடங்களில் சாந்தமாக அமைதியா சத்தம் சத்தடியின்றி காட்சித்தருவார். வெள்ளவத்தையில் நடபெற்ற நீர் மாசுபடுதலை தடுக்க வலியுருத்தும் விழிப்புணர்வின்போது உமாஜியை சந்திக்க முடியும் என்ற நம்பிகையுடன் சென்றேன். பனர்களுக்கு நடுவே சாட்சாத் உமாஜி அமைதியாக மென்மையாக பவ்வியமாக நிண்ருகொண்டிருதார். போய் சந்தித்தேன் “நீங்கதானே உமாஜி எண்டுறது” என்று சொல்லவே கைகுலுக்கி “நீங்கதானே அனோஜன்” என்று ஜெர் கொடுத்தார். அவருக்கு என்னை தெரிந்திருக்க ஒரு ப்ளாஷ்பாக் இருந்தது, அது அவரின் பதிவுகளில் “எப்ப இவற்றை புஸ்தமாக போடப்போகின்றீர்கள்..சீக்கிரம் போடுங்க” என்று பின்னூட்டத்தில் அடம் பிடித்துகொண்டிருந்தது.விழிப்புணர்வு போராட்டத்தின்போது உமாஜியுடன் அதிகம் பேசமுடியவில்லை. போராட்டம் முடிந்தபின் கிளம்பும்போது அவராகவே என்கையை குலுக்கி திரும்பவும் கதைத்தார், நண்பர்களுடன் பஸ்பிடித்து செல்லும் அவசரத்தில் இருந்ததால் சரிவர கதைக்க முடியவில்லை. பிடித்த பதிவகர், எழுத்தாளர் என்றமுறையில் நிறைய கதைக்கவிருந்தது. அவரின் தோளில் மாங்கு மாங்கு என்றுதட்டிவிட்டு அவசர அவசரமாக விடைபெற்றேன். ஏன் இப்படி தோள்மூட்டில் வலிப்பதுபோல் குத்திவிட்டு போகின்றான் என்று ஜோசித்திருக்கக் கூடும், ஹிஹி அன்பை வெளிபடுத்தும் முறையில் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். அடுத்தமுறை சந்திக்கும்போது நிறைய கதைக்கவிருக்கின்றது. அடுத்த சந்திப்பு சீக்கிரம் உருவாக்கட்டும்.

ஈழத்து பளாக் பதிவர்களுக்கு உமாஜி மிகப்பெரும் இன்ஸ்பெர்ஷனாக சந்தேகமில்லாமல் இருப்பார். அவரது எழுத்துகள் அச்சிதழ்களிலும் அதிகம் வரவேண்டும். இன்னும் அதிகம் ப்ளாக்கில் தொடர்ந்தும் எழுதவேண்டும். முதலில் அவரின் முதல் புஸ்தகம் தாமதிக்காமல் வரட்டும்... காத்திருப்போம்.


Comments

1 கருத்துக்கள்:

Kumaran 19 February 2015 at 19:58  

ஈழத்தில் உள்ள எழுத்தாளுமைகள் கவனிக்க படாமலே போய் விடுகின்றன. உமாஜீ போன்றவர்களை போல் மென்மேலும் ஈழத்து எழுத்தாளுமைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவாருங்கள்

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP