தழும்பு

>> Saturday 14 February 2015


ஒருகாலத்தில் கதாநாயகர்களாக பார்க்கப்பட்ட இயக்க போராளிகள் மீதான பார்வை அவர்களின் போராட்ட வீழ்சிக்குப்பின் அந்த பார்வையின் விம்பதிலிருந்து உடைக்கப்பட்டு இன்று சாமான்னிய பார்வைகளை கூட சமூகத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது இலகுவில் கடந்துபோக முடியாத உண்மை. இதே சமூகம்தான் அன்று போராளிகளை கதாநாயகர்களாக மதிப்பாக நெஞ்சில் ஏற்றி வைத்துப் பார்த்தது. அதே சமூகம் இன்று அவர்களை புறம் தள்ளுவதற்கு நீர்ந்துபோன பல காரணங்களும் அச்சுறுத்தல்களும் சுயநலமும் கலந்து உள்ளது. புனர்வாழ்வு பெற்ற இயக்கபோராளிகள் தொடர்ந்தும் புலானய்வுத் துறையினால் கண்காணிக்கப்படுவதும் அவர்களுக்கு அடைக்கலம், உதவி புரிபவர்களையும் புலனாய்வு பிரிவினர் வெளிப்படையாகவே விசாரிப்பதும் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மீதான சமுகத்தின் பார்வையை தவிர்க்க ஏதுவான கொடிய காரணங்களாக அமைந்து விடுகின்றன.

ஷோபாஷக்தியின் ரூபம் சிறுகதை மிகச் செறிவான மேற்கூறிய விடயங்களை கொண்ட சிறுகதை. படிக்காதவர்கள் ஒருமுறை படித்து விடவும். கானகன் என்ற போராளிகளின் ஆரம்ப வாழ்வும் இறுதி வாழ்வும் எப்படி ஒரு சட்டத்தில் எழுச்சி வீழ்ச்சியாக மாறுபடுகின்றன என்பதை அட்டகாசமாக எழுதியிருப்பார். கதை முடிவில் வாசகனின் மனதில் ஒரு வலி எஞ்சும். அதுதான் அந்த படைப்பின் கருக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும். தழும்பு குறும்படத்தை பார்த்தபோது ஷோபாஷக்தியின் ரூபம் சிறுகதைதான் நினைவுக்கு வந்தது. இரண்டுக்கும் உள்ளடக்கம் ஒன்றுதான் போராளிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும். தழும்பு குறும்படத்தில் போராளிகளின் வீழ்ச்சியின் பின் சொந்த சமுகத்தில் சாதாரணமான பிரச்சினைகளுக்கு கூட போராளிகளின் அடையாளங்களை வைத்து அவமானப்படுத்தப்படும் வலிகளை சொல்லியிருப்பார் இயக்குனர். வெறும் ஐந்து நிமிடத்தை கால அவகாசமாக கொண்ட இந்த குறும்படம் சொல்ல வந்ததை சுற்றிவளைக்காமல் சொல்லிவிட்டு போகின்றது.

சரி முதல் உள்ளடக்கம் சார்ந்து விரிவாக பார்த்துவிடுவோம் போராளியாகவிருந்து யுத்தத்தில் ஒரு கை செயல் இழந்தும், இயல்பாக நடக்க முடியமால் சிறிது நொண்டிதனத்துடன் நடக்கும் இயக்க கட்டுப்பாடுகளுடன் நேர்மையாக வாழ்ந்த கதாபாத்திரம். அந்த பாத்திரம் தான் வாழ்ந்த சூழலுக்கும் இப்போது வாழும் சுழலுக்கும் இடையிலான வெற்றிடத்தை புரிந்துகொள்ள கடினப்படுகின்றது.


சிறிய கடையொன்றை சிரமப்பட்டு நடத்துகின்றான். பதின்ம வயது சிறுவன் ஒருவன் சிகிரட் கேட்கும்போது அவனால் அதை இலகுவாக எடுத்துகொள்ள முடியவில்லை, அவன் இயக்க கட்டுபாட்டில் வாழ்ந்த சூழல் அவனை தடுக்கின்றது. சிறுவனுக்கு சிகிரட் கொடுக்க மறுக்கின்றான். வாழ்வாதாரத்தை மேம்;படுத்த கடையை விஸ்தரிக்க வட்டிக்கு பணம் கேட்டும் அவனால் புரட்ட முடியவில்லை. முன்னால் போராளி என்ற காரணத்துக்காக அவன் கடன் முயற்சிகள் நிராகரிக்கப் படுகின்றன. நண்பர்களும் சாக்குபோக்கு சொல்கின்றார்கள். ஏமாற்றங்கள் பழகிய முகத்துடன் கடந்து போகின்றான். ஆனால் பதின்மவயது சிறுவர்களால் கிண்டலுக்கு ஆளாகும்போது அவனால் இலகுவில் கடந்து செல்ல முடியவில்லை வெடித்து எழுகின்றான். பதின்மவயது சிறுவனை அடித்து விழ்த்துகின்றான் கொன்று போட்டு ஜெயில்க்கு போவேன் என்று சொல்கின்றான். சுய கௌரவம் எள்ளலுக்கு உள்ளாகும்போது அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதே அந்த சம்பவத்தின் வெளிப்பாடு.
இந்த சம்பவத்துக்காக சிறுவனின் தந்தையிடம் இருந்து கடுமையாக சுடு சொற்களை வேண்டிக் கொள்கின்றான். அந்தசொற்கள் ரொம்பவே பாதிக்க தனிமையில் அழுகின்றான். அழும்போது செயலிழந்த தனது கையை தடவுவான், போராளியாக கம்பீரமாக போராடிய நினைவுகள் அவனின் மனதில் வளரும். மிகவும் உணர்வுகள் மிக்க உள்ளடக்கம் கொண்ட கதை. கச்சிதமான திரைக்கதை. வடிவம் சார்ந்து இந்த குறும்படத்தை பார்க்கபோனால் சில காட்சி படிமங்களை உருவாக்குவதில் சிக்கல்கள், அவற்றை வசனங்களாக ஆங்கே ஆங்கேபுகுத்தி இருப்பார்கள். இறுதியில் கையைத் தடவி அழும்போது ஒலிக்கும் பின்னி இசையில் போராளியாக கம்பீரமாக போராடிய நினைவுகள் அவனின் மனதில் வருவதை சொல்லாமல் சொல்லியிருப்பார்கள். ஒளிப்பதிவு கதைக்கு தேவையானது போல் ஆர்பாட்டம் இல்லாமல் மென்மையாக இயல்பாக இருக்கின்றது. எடிட்டிங் சொல்லத் தேவையில்லை மிக கச்சிதம். இசை நன்று, இறுதியில் ஒலிக்கும் சோக இசையை இன்னும் ஆழமாக்கி இருக்கலாமோ என்று தோன்றுகின்றது ஆனால் இசை குறை சொல்லும்படியில்லை. படத்தில் மிகப்பெரிய குறை வசனங்கள் சரியாக கேட்கவில்லை. சிலசமயங்களில் பின்னனி இசை வசனங்களையும் தாண்டி ஒலிக்கின்றது. தொடர்ந்தும் அகேனம் குழுவில் இந்த பிரச்சனை தொடர்வதை அவதானித்து இருக்கின்றேன். இனி வரும்படைப்பில் இவற்றை தவிப்பார்கள் என்று நினைக்கின்றேன். குறும்படம் பார்த்து முடிய ஒரு வலி நெஞ்சின் நாளங்களில் எஞ்சுகின்றன. இந்த படைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி அதுதான்.

இக் குறும்படத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்





Comments

0 கருத்துக்கள்:

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP