அகமுகி - குறும்பட விமர்சனம்

>> Friday 6 February 2015




வாழ்வின் நிமிர்த்தம் சில தொழில்களை மேற்கொள்ளும்போது மனட்சாட்சிக்கு விரோதமாகப் பலசமயம் செயல்படவேண்டி இருக்கும், தொடர்ந்தும் செயற்பட மனச்சாட்சியே மெல்ல மெல்ல கொல்லத் தொடங்கும் இதிலிருந்து தப்ப மனச்சாட்சியை நாம் கொன்று புதைத்துவிட்டுச் சுதந்திரமாக இயங்குவது. ஸ்டீபன் சன்சிகன் எழுதி இயக்கிய குறும்படத்தின் பேசுபொருள் அதையே பிரதிபலிக்கின்றது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாகனம் வாங்குவதற்காகத் தவணையில் கடன்கொடுக்கும் நிறுவனங்கள் தவணையைச் சரியான காலத்தில் கட்டவில்லை எனும் கெடுபிடியில் இதுவரை கட்டிய பணத்தோடு வாகனங்களையும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்வதை நடைமுறையாக வைத்திருக்கிறார்கள். அவ்வாறு பறிமுதல் செய்ய நிறுவனத்தினால் வேலைக்கமர்த்தப்படும் கமல் எனும் பாத்திரத்தின் மனச்சாட்சியின் அலைச்சலையும் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள மனசாட்சியை மறுபடி மறுபடி கொலை செய்வதைக் கமல் பாத்திரம் முயல்வதினை நுட்பமாகப் படிமமாக்கியிருக்கின்றார்கள்.

கமலின் அலுவலக மேலதிகாரி பறிமுதல் கடமையை இவரிடம் ஒப்படைக்கிறார். இம்முறை இரண்டு கால்களும் செயலிழந்த ஒருவருக்கு வழங்கப்பட்ட வாகனத்தைப் பறிமுதல் செய்ய வேண்டிய நிர்பந்தம். அவர் இறுதித் தவணை மட்டுமே கட்ட வேண்டியிருக்கிறது. நிறுவனத்தின் நிர்வாகத்திலிருந்து சோதனைக்காக அதிகாரிகள் வருகிறார்கள். அவர்களுக்குக் கணக்குக் காண்பிக்கப் பறிமுதல் நடந்தே தீரவேண்டும். கமல் தன்னைச் சதா உறுத்தும் மனசாட்சியைக் களைகிறார்.

தொடர்ந்தும் மனச்சாட்சியைத் தவிர்க்க கமல் பாத்திரத்திம் முயன்று அவதிப்பட்டுத் துடிக்கும் துடிப்புகளை அந்தப் பாத்திரத்தில் நடித்த ஜனகன் தவிப்புக்களைச் சீராக உள்வாங்கி வெளிப்படுத்தியுள்ளார்.

ஏழு நிமிஷத்தில் இந்தக் கதையைச் சொல்வது சிக்கலானது மிக இலகுவான கட்டமைப்பு உள்ள கதைதான் அதைத் திரையில் சொல்ல எடுத்த திரைக்கதை அமைப்பு (நான்-லீனியர்) இந்தக் குறும்படத்தை வலிமையாகத் தாங்கி பிடிக்கின்றது.

தொலைபேசியில் பேசும்போது மனம் முரண்படப் பல் விளக்கிய பிரஷ்ஷை கமல் பாத்திரம் நோண்டும் உணர்வுகிளின் வெளிப்பாட்டைத் திரையில் கச்சிதமாகச் சொல்லப்பட்டுள்ளது. பின்னி இசை உணர்வுகளுக்கு ஏற்றால்போல் ஒலிக்கின்றது ரெண்டு கால் இல்லாத ரமணனா?” என்று கேட்கும்போது பின்னணி இசையில் துப்பாக்கி சத்தம் சின்னதாகக் கேட்கும், அது சொல்லும் விஷயம் ஏராளம், கமலின் மனது அந்த இடத்தில் தவிக்கத் தொடங்கும் மனச்சாட்சியை அந்த இடத்தில் மெல்ல மெல்ல கொல்ல ஆரம்பிப்பான் கமல், அதை அந்த இசை கச்சிதமாகச் சொல்லிவிட்டு போகும்.

சில இடங்ககில் பின்னணி இசை அதிகமாகி வசனங்களைக் கேட்டமுடியவில்லை. பின்கள வடிவமைப்பில் கவனத்தைச் செம்மை படுத்தியிருக்கலாம். படத்தின் எடிட்டிங் சீராகவிருக்கின்றது.குளியல் அறையில் பல்லுத்தீட்டும் காட்சி, மனசாட்சியைக் கொல்லும் காட்சியில் ஒளிப்பதிவி சறுக்கியிருக்கின்றது.

ஆழமான புரிதல் அமைப்பைச் சொல்லும் குறும்படம். மனசாட்சிக்கு உருவம் கொடுக்கப்பட்டுப் பாத்திரத்தினை அதனுடன் உரையாடும் விதமாகக் கட்டமைத்துள்ளார்கள். மனச்சாட்சி கமலில் உருவமைப்பில் இல்லாமல் இருப்பதற்கு ஆளுமையின் வேறுபாடுகளைக் காட்டுவதற்காக இருக்கலாம்,ஆனால் பார்வையாளனின் புரிதலை கடினப்படுத்துகின்றது.

பாத்திரங்கள்,சூழல்சார்ந்த உள்ளடக்கம் நுணுக்கமா கட்டமைக்கப்பட்டுள்ளது. குவின்டின் டரான்டினோவின் வால்போஸ்டர் வீட்டுச்சட்டத்தில் மாட்டப்பட்டிருந்த குறியீடுகள் சார்ந்த கலையமைப்பின் நுட்பங்கள் அதற்குச்சான்று

இக் குறும்படத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்..



Comments

0 கருத்துக்கள்:

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP