இடா - 2013 (போலீஷ்) - உலகசினிமா

>> Tuesday 24 February 2015

மிகவும் இளம்வயது பெண் கன்னியாஸ்திரி உடையில் ஜேசுவினுடைய சிலை ஒன்றுக்கு வர்ணம் தீட்டிக்கொண்டிருக்கிறாள். அதுவொரு கன்னியர் மடம். 1950-60 களில் நடைபெறும் காலம். கடும் ஸ்நோ வெளியில் துவிக்கின்றது. கன்னியர் மடத்தில் பயிலும் அந்தப்பெண் உட்பட மூன்று பெண்கள் ஜேசுவினுடைய சிலையை சுமந்துகொண்டு வெளியில் நிறுத்துகின்றார்கள் ஜெபிக்கின்றார்கள்.

கன்னியாஸ்திரியாவதற்கு தங்களை அர்பணிக்கும் இறுதி சந்தர்பத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். மெல்ல மெல்ல ஆன்மிகத்துக்கு முழுவதுமாக தங்களை அர்பணித்த அந்த பெண்களின் குடும்பத்தினர்களுடன் அர்ப்பணிப்பு நிகழ்வுக்கு முன் சென்று தங்கிவர அனுமதிக்கப் படுகின்றனர். அன்னா என்ற பெண்ணை பார்க்க அவளின் குடும்பத்தினர் எவரும் இல்லை, இருப்பது ஒரேயொரு அத்தை. அத்தைக்கு பலமுறை லெட்டர் அனுப்பியும் பதில் இல்லை, இறுதியாக தன்னால் வந்து கூட்டிச் செல்ல முடியாது என்று பதில் போடுகின்றாள். அன்னாவை அத்தையுடன் தங்கி இருந்துவிட்டுவர அனுப்பிவைக்கப்படுகின்றாள். கட்யாயம் போயாகிவிட வேண்டுமா என்ற கேள்வியுடன் பயணிக்கின்றாள்.

அழகான போலாந்து தேசந்தின் நகரப்பகுதியை சிறுமிக்குறிய ஆச்சரியம் கலந்த மாறும் முகபாவைகளுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டு வருகின்றாள். கையில் சிகரட்டுடன் அத்தை அறிமுகமாகின்றாள். அன்னா தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கின்றாள். உரையாடல் விரிகின்றது. “உன்னை என்னுடன் அழைத்து வைத்திருந்தால் நீ மகிழ்ச்சியாயிருக்க மாட்டாய்” என்கின்றாள். அன்னாக்கு அந்த மாறுதல் புரிகின்றது ஒரு ஆடவன் அத்தையின் படுகையரயிலிருந்து செல்கின்றான். அன்னாவை பற்றிய உண்மைகளை அத்தை பாசாங்கு இல்லாமல் சொல்லத் தொடங்குகின்றாள்.

“நீ ஒரு யூதர் இனத்தை சேர்ந்தவள் உன் நிஜப்பெயர் இடா லேபிஸ்டியன்..” முதல் முறையாக தன்னுடைய மறைக்கப்பட்ட உண்மைகளை கேட்டு அன்னாவின் முகம் மெலிதாக சலமற்று மாறுகின்றது.இடாவின் பெற்றோர்களின் புகைப்படங்களை அவளின் குழந்தைப்பருவ புகைப்படங்களை காட்டி அவர்களின் குடும்ப வரலாறுளை சொல்கின்றாள். இடா தன் பெற்றோர்களின் கல்லறையை பார்க்க செல்லவதாக கூறுகின்றாள். யூதர்கள் இரண்டாம் உலகயுத்தத்தின்போது கொத்துக் கொத்தாக தேடித்தேடி சிதைத்து கொல்லப்பட்டார்கள், அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன, அவர்களுக்கு கல்லறை என்று துவும் இல்லை. கால்வாய்களிலும் வீதியோரங்களிலும் புதைப்படார்கள் இடாவின் பெற்றோர்களுக்கு என்னவாயிற்று என்பது தெரியவில்லை. இடா தனது பெற்றேர் புதைபட்ட இடத்தை விசாரித்து கண்டுபிடிக்கப்போவதாக கூறுகின்றாள். அத்தையும் கூடவே வருவதாக சொல்கின்றாள்.தேடல் விரிகின்றது, இருவரும் காரில் பயனிகின்றார்கள் பிஸாகிக்கு.

இடாவின் அத்தை பயம் அற்ற துணிச்சலும் செயல்திறனும் மிகவர், ஜாட்ஜ்சாக வேலைபார்ப்பவர், இடாவை தத்து எடுத்து வளத்தவர். இடா அதிக கட்டுக்கோப்புகளுடன் சிறுவயதிலிருந்து கன்னியர் மடத்தில் பயின்று உணர்சிககளை கட்டுபடுத்தும்,தடுமாறா இயல்பை கொண்டவர். “நீ அழகாய் இருகின்றாய் யாரையும் காதலித்து இல்லையா?” என்கிற கேள்வியை இடா அத்தையிடமிருந்து எதிர்கொள்ளும்போது வெட்கம் கலந்த புன்னகையுடன் மறுக்கின்றாள். அர்ப்பணிப்பு நிகழ்வுக்கு முன் அப்படி ஏதுவும் அனுபவத்தை பெறாமல் உன்னை தியாகியாற்பது எப்படி தியாகமாகும் என்கின்றாள் அத்தை. இடாவின் பெற்றோர்கள் தங்கியிருந்த பழைய வீட்டிக்கு சென்று விசாரிக்கின்றார்கள். அந்த வீட்டில் இப்போது வேறுயாரோ இருகின்றார்கள். பரிதவிப்போடு வீட்டை சுற்றி பார்க்கின்றாள் இடா.

அலைக்கழிப்பு தொடர்கின்றது. அத்தையின் வாழ்க்கை முறை இடாவுக்கு எரிச்சலையும் சிலசமயம் கிளப்புகின்றது இறுதியில் அது அவளை கவரவும் செய்கின்றது. அதிகம் சிகிரட், அடிக்கடி கிளப்பில் மது அருந்துவது, தனிமை என்று நீள்கின்றது அத்தையின் வாழ்க்கை.தேடலின் நடுவே இசைக்குழுவில் ஒகஸ்ரா வாசிக்கும் இளைஞன் ஒருவன் அறிமுகமாகின்றான், முதல் பார்வையிலே இடாவுக்கு அவனை பிடித்துவிடுகின்றது. மெலிதான காதலும் போகப்போக அரும்புகின்றது. அந்த காதல் சொல்லப்படும் காட்சிக்கோர்புகள் உன்தமாக அழகியலாக படிமமாகப்பட்டுள்ளது. இடாவின் பெற்றோர்கள் உயிர்தப்பி ஒடி பிஸாகி கிராமத்தில் ஒளிந்துகொண்டிருந்தார்கள், பின்பு அங்கே காட்டிக் கொடுக்கபட்டு கொல்லப்பட்டார்கள். எப்படி யாரால் கொல்;லப்பட்டார்கள் என்பதை கண்டறிகின்றார்கள். அந்த உளைச்சல் இடாவைவிட அத்தையே அதிகம் பாதிக்கின்றது. இடா அதிர்சிகளனைத்தையும் இயல்பாக தாங்கிக்கொள்கின்றாள். இடாவின் பெற்றோர்கள் புதைக்கப்பட்ட இடத்தை இறுதியில் கண்டறிந்து எஞ்சிய மண்டையோட்டை எடுக்கிறார்கள். அத்தையின் குடும்ப சவக்காலையுள்ள லுபிளினில் புதைகின்றார்கள். இடா அமைதியாக கன்னியர் மடத்திற்கு விடைபெறுகின்றாள்.

இடாவுக்கு அத்தையின் வாழ்க்கை முறை மனதளவில் பிடிக்க ஆரம்பிக்கின்றது. தான் இன்னும் கனியாஸ்திரியாவதற்காக தயாராகவில்லை மன்னிக்கும்படி ஆரம்பத்தில் நிறுத்திய ஜேசுவினுடைய சிலையின் முன் தனிமையில் அமைதியாக கூறுகின்றாள். அத்தையின் மனஉளைச்சல் அதிகமாகின்றது இடாவை பற்றிய சிந்தனைகள் அதிகம் தூண்டுகின்றது. அந்த படுகொலைகள் அடைக்கலம் கொடுத்தவர்களாலே கொல்லப்பட்டது அதிகம் திரும்ப திரும்ப பாதிக்கின்றது. இடாவின் பெற்றோகளின் புகைப்படங்களை திரும்ப திரும்ப வலிகளுடன் பார்க்கின்றாள், தினமும் குடிக்கின்றாள் மெல்ல மெல்ல தன்னிலையிழந்து மாடிப்படியிலிருந்து குதித்து தற்கொலை செய்கின்றாள்.

அத்தையின் இறுதிச்சடங்குக்கு இடா மறுபடியும் வருகின்றாள். கன்னியாஸ்திரி உடைகளை களைகின்றாள் அத்தையின் உடைகளை அணிகின்றாள், தலையைக் கலைத்து அழகாக விடுகின்றாள். அத்தையையே போலவே உடல்மொழியை மாத்துகின்றாள் சிகிரட் புகைத்து பார்க்கின்றாள். மது அருந்துகின்றாள் அத்தையாகவே தன்னை சுவாரஸ்யமாக மாத்துகின்றாள். இறுதிச்சடங்கில் அந்த இளைஞனை திரும்பவும் சந்திக்கின்றாள். அவளிடமிருந்து தொலைக்கப்பட்ட புன்னகையொன்று அரும்புகின்றது. அவனுடன் ஹோட்டலில் நடனம் ஆடுகின்றாள், உடலுறவு கொள்கின்றாள். அதற்குபின் வரும் வசனங்கள் முக்கியமானவை.

“என்ன யோசிக்கின்றாய்..?” இளைஞன்
“ஒன்றும் இல்லை..” இடா
“நாங்கள் இசை நிகழ்ச்சி செய்ய கடாஸ்சிகிக்கு போகின்றோம்.. நீயும் வாவேன்..”
“......................” இடா
“நீ எப்பவாவது கடற்கரைக்கு போய்யிருக்கின்றாயா?”
“நான் வெளியில் எங்கும் போனதில்லை”
“அப்படியானால் வா போவோம்..”
“..............”
“நாங்கள் வாசிக்கும் இசையை நீ கேட்க முடியும்... நாங்கள் கடற்கரையில் சேர்ந்து நடக்கலாம்..”
“அதற்கு அப்புறம்?”
“நாய் ஒன்று வேண்டுவோம்.....திருமணம் முடித்து குழந்தைகள் பெற்று சொந்த வீட்டுடன் அழகாக வாழ்வோம்”
“அதற்கு அப்புறம்?”
“அதே வழமையான வாழ்க்கை..”

காலையில் அவன் துயிலெழும்முன் கன்னியாஸ்திரி உடைகளை அணிந்துகொண்டு அவனுக்கு சொல்லிக்கொள்ளாமல் கன்னியர் மடத்திற்க்கு திரும்புகின்றாள்.

உளவியல் ரீதியாக அணுகும் சிறந்த படம் நிறையவே யோசிக்க வைகின்றது. முழுவதும் கறுப்பு வெள்ளையில் படமாக்கபட்டிருகின்றது, 82நிமிடங்கள் ஓடக்கூடிட இந்த திரைப்படம் அழகியலின் உச்சம். பின்னி இசை அதிகம் இல்லாமல் ஓவ்வரு உணர்வுகளும் கட்சிதமாக செறிவாக சொல்ப்படுகின்றது. பல படங்களுக்குக் ஒளிப்பதிவாளராக பணியாற்றி அனுபவம் பெற்றிருந்த “லூகாஸ்”இப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி ஆகச்சிறந்த உன்னதமான ஒளிப்பதிவை மேற்கொண்டிருக்கிறார். 

ஆஸ்கார் விருது பரிந்துரையில் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் அயல்மொழி திரைப்படப் பிரிவில் இடம் பெற்றிருந்தது. 2014 ஆம் ஆண்டு சிறந்த அயல் மொழி திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றுள்ளது. ஆஸ்கார் மட்டும் அல்லாமல் Alliance of Women Film Journalists, USABAFTA Awards போன்ற பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.

Directed by - PawełPawlikowski
Music by - Kristian Eidnes Andersen
 




Comments

0 கருத்துக்கள்:

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP