லூசி (2014) - ஒரு பார்வை

>> Thursday 26 February 2015

நார்மலாக மனிதனின் மூளையில் பத்து வீதம்தான் இயங்குகின்றது மீதி தொண்ணூறு வீதம் இயங்காமல் அப்படியேதான் சமர்த்தாக இருக்கிறது. அந்த பத்துவீதத்தில்தான் நாம் சிந்திகின்றோம் புதிய கண்டுபிப்புக்களை உற்பத்திசெய்கின்றோம், அதி சிக்கலான பிரபஞ்ச இரகசியங்களை ஆராய்கின்றோம்.

நவராத்திரி தினத்தில் கொலுவைத்தல் என்ற விஷயம் இந்துக்களுக்கும் அதை சார்ந்தவர்களும் தெரியும். ஒன்பது படிகளில் கொலு பொம்மைகள் வைக்கப்படும். புழுவாய் பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகின்றோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரியில் ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கப்படுகிறதென்று இந்துசமயம் சொல்கின்றது.

முதல் படியில் ஓரறிவு உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவரகள் இருக்கும். இரண்டாம் படியில் இரண்டறிவான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.மூன்றாம் படியில் மூவறிவான கறையான், எறும்பு போன்ற பொம்மைகள்.நான்காவது படியில் நான்கு அறிவான நண்டு, வண்டு பொம்மைகள் வைக்கப்படும்.ஐந்தாம் படியில் ஐயறிவான நான்குகால் விலங்குகள், பறவைகள், போன்ற பொம்மைகள். ஆறம் படியில் ஆறறிவான மனிதர்களின் பொம்மைகள். ஏழாம் படியில்சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள்.எட்டாம் படியில் தேவர்களின் உருவங்கள், நவக்கிரக பகவான்களின் பொம்மைகள்.ஒன்பதாம் படியில் விநாயகர் பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற கடவுள்கள்.
இந்த வரிசையை ஏன் சொல்கின்றேன் என்றால் ஆறறிவான மனிதன் வரும் ஆறாம் படியில்தான் பத்துவீத கணக்கு வருகின்றது. பத்து வீதத்திலும் அதிகமான மூளை இயக்கத்தை கொண்டவர்கள் மகாரிஷிகள் அதைவிட அதிகமான மூளை இயக்கத்தை கொண்டவர்கள் தேவர்கள். அதையும் தாண்டி நூறுவீதம் மூளையை இயக்கமாக கொண்டவர்கள் கடவுள் அவ்வளவுதான். இப்போ நமக்கு கொடுக்கப்பட்ட இந்த முளையிலிருந்து நாம் பத்துவீதத்தை தாண்டி செயல்படும் திறனை பெற்றால் என்னவாகும்? மேல் சொன்ன விடயங்களிலிருந்து உங்களுக்கே புரிந்திருக்கும். அந்தக் கேள்வியின் விடைதான் லூசி திரைபடத்தின் தேடல்.

தாய்வானில் மேல்படிப்பு படிக்கும் மாணவி லூசி. ஜாலியாக அவள் வாழ்கை சென்று கொண்டிருக்கின்றது. அவளுக்கு வேண்டப்பட்ட நெருக்கமான நண்பன் ஒரு சூட்கேஸை ஜாங் என்பவனிடம் கொடுத்துவர சொல்கிறான்.லூசி மறுக்கிறாள். அவன் அந்தப் சூட்கேசை அவளது கையில்விலங்கிட்டுவிடுகிறான். சாவி உள்ளே ஜாங்கிடம் இருக்கும் என்கின்றான். பெட்டியை விடுவிக்க முடியாது வேறுவழியின்றி ஜாங்கை பார்க்க போகின்றாள். அதுவொரு ஐந்து நட்;சத்திர விடுதி வரவேற்பில் ஜாங்கை பார்க்க வந்திருப்பதாக சொல்கிறாள். அப்போது அந்த சீரியஸான மாறுதலை கவனிகின்றாள். துப்பாக்கி சத்தம் வெளியில் நின்றுகொண்டிருந்த நண்பன் சுடப்பட்டு இறகின்றான். நிலைமையை சுதாகரிக்க முதல் ஆறுபேர் லூசியை தூக்கிக் கொண்டுபோய் ஜாங் தங்கியிருக்கும் அறையில் விடுகிறார்கள். 
அங்கேயிருக்கும் கொடூரங்களை பார்த்து லூசி தவிக்கின்றாள். கொடுரமான சில கொலைகளும் கையில் இரத்தமுமாக ஜாங் அறிமுகமாகின்றான். ஜாங் மிகக் கொடூரமான மாபிய தலைவன். அவனுக்கும் இவளுக்கும் மொழிபிரச்சனை, தொலைபேசியில் ஜாங்கின் ட்ரான்ஸ்லேட்டரை பிடித்துக்கொடுக்க ஒருமாதிரி உரையாடுகின்றாள். சூட்கேஸ்குள் உண்மையில் என்ன இருக்கிறது ஜாங்காலும் உறுதிபடுத்த முடியவில்லை. உள்ளே எதுவும் சக்திவாய்ந்த பாம் இருக்கா என்றுவேற சந்தேகம். லூசியை திறக்க சொல்லிவிட்டு ஜாங்கும் மறவர்களும் பாதுகாப்பாக ஒதுங்குகின்றார்கள். பயத்துடன் பரிதவிப்புடன் நடுக்கம் கலந்து திறக்கின்றாள். உள்ளே அதி சக்தி வாய்ந்த போதை பொருளான மூளையின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் ரசாயன பவுடர் CPH4இருக்கிறது.உனக்கு ஒரு வேலை தருகின்றேன் செய்யென்று சொல்கிறான் ஜாங் வேலையும் வேண்டாம் ஒன்றும்வேண்டாம் தன்னை விடச் சொல்கின்றாள் லூசி.

லூசி ஒரு அறையின் உள்ளே மயக்கத்தில் இருந்து எழுகிறாள். அடிவயிற்றில் பாண்டேஜ் செய்யப்பட்டுள்ளது ரத்தம் கசித்துள்ளது.போதை மருந்து பை ஒன்றை அவளின் வயிற்றின் உள்ளே வைத்து தைத்துள்ளார்கள் அப்படியே எயார்போட் மூலமாக அனுப்பி லாவகமாக கடத்தபோகின்றார்கள். அவளுடன் சேர்த்து மேலும் முன்று பேரை முகத்தை மூடி இழுத்து செல்கிறார்கள். அவர்கள் ஓவ்வருவர்களின் வயிற்றிலும் போதைபொருளை வைத்து தைத்துளார்கள். 
லூசி ஒருவளே பெண் மற்றவர்கள் ஆண்கள். அடைத்து வைத்துள்ள அறையில் ஒருத்தன் லூசிமேல் அந்த எண்ணத்தில் கைவைக்க அதை லூசி தடுக்க கடுப்பாகி லூசியின் வயிற்றில் உதைக்கிறான். மற்றைய அடியாள் அவனை வெளியில் அவசரமாக அவனை இழுத்துக்கொண்டு போய்விட அறையில் தனியே லூசி. லூசியின் வயிற்றுக்குள் இருக்கும் பை உடைந்து லீக்காகி அந்த போதை மருந்துஉடலில் கலக்கிறது. அதிக அவஸ்தையில் துடிக்கும் லூசி தீடீரென்று அமைதியாகின்றாள். இருபது வீதத்திற்க்கு அவளின் மூளை இயங்க தொடங்குகின்றது. அங்கேயிருந்து லூசியின் அக்ஷன் சரவெடிகள் ஆரம்பிக்கின்றன. அங்கே இருந்து தப்பிக்கின்றாள். விடாமல் துரத்துகிறது ஜாங்கின் கடத்தல் மாபிய கும்பல்.
மெல்ல மெல்ல அவளது மூளைத்திறன் கூடிக்கொண்டே போகிறது.இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு ஒவ்வொருவரையும் தன் மூளையால் கட்டுப்படுத்தும் இயல்பு வருகின்றது. இந்த துறையில் ஆராச்சி செய்யும் புரொபசர் நார்மனிடம் சென்று தன்னுடைய பிரச்சினைக்கு தீர்வு காண செல்கிறாள். ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் உபயோகதிறன் கூடுகிறது. புதிதாக சக்தி வருகின்றது. மிச்ச பைகளை வயிற்றில் வைத்து கடத்தும் மற்றை நபர்களை அட்காசமாக தனது சக்திகளால் ஒரு போலிஸ் ஆபிசருடன் இணைந்து தடுக்கின்றாள். தடுத்துவிட்டு மிச்ச CPH4 வையும் தானே உள்ளேடுகின்றாள். கடுப்பாகிய ஜாங்கின் கும்பல் தேடிவந்து லூசியுடன் அனாவசியமாக வேண்டிக்கட்டி கொள்கின்றார்கள். இறுதியில் அவள் மூளை நூறு சதவீதத்தை படிப்படியாக அதிகரிக்க ஓவ்வரு கட்டத்திலும் உயிர்களின் பரிமாண வளர்சிகளின் இரகசியங்களை அறிகின்றாள். நூறு வீதத்தை முழுமையாக அடைய அனைத்து பிரபஞ்ச உருவாக்கங்களையும் அதன் மர்மங்களையும் அடைகின்றாள். அனைத்தையும் அடைய சிம்பிள் முதலே சொன்னதுபோல் கடவுளாகின்றாள் லூசி. நூறு வீதம் அவளின் மூளை இயங்குகின்றது. பிரபஞ்சத்துடன் கரைந்து விடுகின்றாள்.

படத்தில் லூசியாக வருவது ஸ்கார்லட் ஜோஹான்சன். இவரை பற்றி தெரியாத ஹாலிவூட் ரசிகர்கள் இருக்க முடியாது அக்ஷன் மங்கை, இந்தப் படத்தில் கலக்கியிருக்கிறார். ஜாங்காக நடித்தவர் தென்கொரிய நடிகர் அவரின் அமைதியான அலச்சிய மிரட்டல் நடிப்பு அட்டகாசமாக கட்டிப் போடுகின்றது. ‘தி லேடி , தி ஃபிஃப்த் எலிமெண்ட் , ஏஞ்சல் - போன்ற பெண்கதாபாத்திரங்களை மையமாக கொண்ட படங்களை இயக்கிய லூக் பெஸ்ஸன் தான் இந்தப்டத்தையும் அட்டகாசமாக இயக்கியுள்ளார். வசனங்களும் அக்ஷன் காட்சிகளும் பிரமாண்டமாக ரசிக்க வைக்கின்றன. ஒளிப்பதிவும் கிராபிக்ஸ் வேலைகளும் பிரம்மிக்கவைக்கின்றன. சயின்ஸ் ஃபிக்ஷன் பிளஸ் திரில்லர் திரைப்படம். எடுத்துக்கொண்ட மையக்கரு அட்டகாசம். கண்டிப்பாக இந்த படத்தை சுவாரசியத்துக்கு பார்கலாம். இந்த படத்தை பார்த்த எத்தனை பேருக்கு கொலுபொம்மை வைக்கும் நிகழ்வு ஞாபகம் வந்ததோ தெரியவில்லை. படம் கொஞ்சம் லேட்டாகவே பார்க்க முடிந்தது. ரொம்ப நாளாக எழுதநினைத்த பதிவு இப்போது கீபோர்டில் விரல் நடனமாடி விட்டேன். கண்டிப்பாக ஒரு தபா பார்க்கலாம்.


Comments

2 கருத்துக்கள்:

மெக்னேஷ் திருமுருகன் 26 February 2015 at 16:49  

சூப்பர் ப்ரோ ! நா எழுதலாமா வேண்டாமானு ரொம்ப நாளா யோசிச்சு அப்படியே விட்ட படங்கள்ல இதுவும் ஒன்னு . அருமையா எழுதிருக்கிங்க . தொடர்ந்து கலக்குங்க சகோ

Annogen 26 February 2015 at 19:45  

megneash k thirumurugan - நன்றி ப்ரோ

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP