என் கனா உன் காதல் - குறும்பட அலசல்

>> Sunday 19 April 2015

மீண்டும் மீண்டும் ஈழத்து சினிமாவை வலிமைப்படுதும் அல்லது அதன் இருப்பை உறுதிப்படுத்தும் முகமாக குறும்படங்ள் செறிவாக சமீபகாலமாக வெளிவர ஆரம்பித்துள்ளது. ஆரம்ப காலங்களில் இணையத் தளங்களில் வெளியிடப்பட்டாலும் தற்போது திரையரங்குகளில் வெளியிடப்படுவது ஆரோக்கியமான சடங்காகவே மாறிக்கொண்டு வருகின்றது. திரையரங்குகளில் குறும்படங்களை பார்வையிடுபவர்களில் கணிசமானவர்கள் ஈழத்து சினிமா முயற்சிகளில் தங்களை இணைத்தவர்கள், சினிமா கனவில் மையமாக சுழல்பவர்கள். தமது சக படைப்பாளிகளிடம் இருந்து குறும்படங்கள் வெளிவரும்போது குடும்ப வைபவமாக ஒன்றுகூடி ஆதரவை சுவாரஸ்யமாக வழங்குபவர்கள். இந்த பரஸ்பர ஒன்று கூடல்கள் ஈழத்து சினிமா வலிமைப்படுத்தலை இனிமையாக ஏற்படுத்தினாலும் தரமான படைப்புகள் வெளியாகும்போதே ஈழத்து சினிமா அவதானிகளைத் தாண்டி வெளியிட  மக்களிடம் கவனத்தை பெற்றுக் கொள்கிறது. பெரும்பாலான படைப்புக்கள் ஈழத்து சினிமா முயற்சியாளர்களைத்தாண்டி வெளியே கவனத்தில் எடுத்துக்கொள்ளத்தக்க வகையில் உருவாகுவது இல்லை. சக ஈழத்து படைப்பாளிகள் தங்களைத் தங்களே பரஸ்பரம் பாராட்டிக்கொள்வதோடு நின்றுவிடுகின்றது.

இவ்வாறான சூழ்நிலைகளில் உருவாகி திரையரங்கில் வெளிவிடப்பட்ட குறும்படம் “என் கனா உன் காதல்”. இக் குறும்படத்தின் கதைவரி கூட இதைச் சார்ந்தது. ஈழத்து படைப்பாளி ஒருவர் ஈழத்து சினிமாத்துறையில் தடம்பதிக்க முயன்றுகொண்டு இருப்பவர் அவரின் காதலி அதனை ஆதரித்தாலும் முழுநேரமாக சினிமா கனவில் அதன் முயற்சியில் அவன் ஈடுபடுவதை விரும்பாதவர். ஒரு தொழிலோடு தன்னை பொருத்தி சிக்கல் இல்லாமல் இயங்கிக்கொண்டு சினிமா முயற்சியில் ஈடுபட வலியுறுத்துகின்றாள் காதலி. இதற்கு சமரசம் செய்ய உடன்படாத காதலன் தனது முயற்சிகளை தொடர்ந்தும் தொடுகின்றான். இந்த கருத்து முரண்பாட்டால் இருவருக்கும் இடையிலான காதல் காதலியின் வலுகட்டாயத்தில் முடிவுக்கு வருகின்றது. ஆனால் காதலன் தனது முயற்சியினால் ஜெயிக்கின்றான். இவன் வெற்றியை பார்த்து வியந்த காதலி திரும்பவும் அவனிடம் வருகின்றாள். இவ்வாறு குறும்படம் முடிவடைகின்றது.

உண்மையில் ஈழத்து சினிமா களம் தென்னிந்திய சினிமாவினைபோல் பந்துவிரிந்ததா? ஒருவன் ஈழத்து சினிமா முயற்சியில் வெல்வதுபோல் காட்சிப்படுத்துவதற்கு புறக்காரணியல் சூழ்நிலை உள்ளதா? உண்மையில் இந்தக் கேள்விக்கான விடை அனைவர்க்கும் கசப்பாகத் தெரியும். அந்த இடத்திற்காகவே அனைத்து ஈழத்து கலைஞர்களும் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். இப்போதைய சூழ்நிலையில் குறும்பட படைப்பாளிகளின் பொருளாதார வரவீடுகள் குறும்படம் மூலம் எந்தளவுக்கு வருகின்றன என்ற சாரப்பட கேள்விக்கு குறும்படத்திலே ஒரு காட்சியில் கதாநாயகன் சொல்கின்றார் “பெரிசா இல்லை ஆனால் மனசுக்குபிடிச்சு இருக்கு..” என்ற கூற்றுப்பட. இந்த யதார்த்த கள அமைப்பில் சிக்குண்ட நாயகன் தன்னுடைய இலக்கில் ஜெயிப்பதாக காட்சிப்படுத்திய இடம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறும்படத்தில் ஈழத்து சினிமா தளம்  உருவாக்கப்பட்டுவிட்டது என்ற கற்பனை விம்பம் கட்டமைக்கப்பட்டு காட்சிகள் படிமமாகப்பட்டு இருக்கலாம், ஆனால் குறும்படம் அதனை பிரதிபலிக்கவில்லை.

கதாநாயகிக்கு அவர் காதலன் நடிப்புத்துறையில் இயங்குவது ஆரம்பத்தில் பிடிப்பதில்லை என்ற மையக்கரு அழுத்தமாக சொல்லப்படுகிறது. “நீ என்ன செய்துகொண்டு இருக்கின்றாய் என்று வீட்டில் கேட்டால் நடித்து கொண்டு இருக்கின்றான் என்பதை எப்படி வீட்டில் சொல்ல முடியும்” என்கின்றாள். அதே துறையில் பிரபலம் ஆனவுடன் காதலை முறித்த காதலி அவளாகவே தேடிவருகின்றாள். இப்போது அவன் பிரபல்யமாக நடித்துகொண்டு இருக்கின்றான் இதை எப்படி வீட்டில் சொல்லப்போகின்றாள்? இந்த தர்க்கரீதியான முரண்பாட்டுக்கு படத்தில் விடை இல்லை. திரைக்கதையில் கட்சிப்பின்னல்கள் இல்லை.

ஒரு துறையில் ஜெயித்தவுடன் பெண்கள் வந்து ஓட்டிக்கொள்வதாகவும் அதனை காதலன் இயல்பாக ஏற்றுக்கொள்வதாகவும் காட்சிப்படுத்துவது வேடிக்கை இல்லையா? பெண்ணியவாதிகளை சீண்டிப்பார்க்கும் விஷப்பரீட்சை. 

எடுத்துக்கொண்ட கருவுக்கு பொருத்தமான பல்வேறு அடுக்குகளுடன் இயங்கும் திரைக்கதை பலமாக இக் குறும்படத்தில் இல்லை. வந்தோம் போனோம் என்ற ரீதியில் அடிச்சட்டம் இயங்குகின்றது. ஆனால் படத்தினுடைய படிம உருவாக்கம் இயக்குனரின் கடந்த படமான “இலக்கு” குறும்படம்போல் எரிச்சல்தரும் வகையில் இல்லை. கள அமைப்பில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இடங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றன. மிகைப்படதாத நடிப்பை நாயகன் விஷ்ணு, நிரோஷா பிரதிபலித்து இருந்தனர். விஷ்ணுவின் ஏக்கம் கலந்த முகபாவனைகள் மாறும் சட்டங்கள் அருமையாக இருக்கின்றன. நண்பனுடன் ஈழத்து சினிமா கனவைப்பற்றி பேசும்போது முகத்தில் காட்டும் பாவனைகள் சிறந்த நடிகனுக்கான சான்று. சுதர்சனின் இசை தேவைக்கு ஏற்றால்போல் நேர்மையாக அட்டகாசமாக ஒலிக்கின்றது.

வசங்கள் இயல்பாக இருகின்றன. இன்னும் சென்மை படுத்தி இருக்கலாம். நடிக்கக் கேட்டு வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்கும்போது என்ன கதை என்ன பாத்திரம் என்று எதையும் பேசிகொள்ளாமல் வெறும் ஓகேஓகே என்ற மறுமொழிகளை பிரயோகிக்கின்றார் கதாநாயகன். படு செயற்கையான உரையாடல் உருவாக்கம்.

சிறந்த தேடல்கள் இருந்தால் இன்னும் சிக்கலான ஈழத்து வாசனைகளுடன் பின்னிப்பிணைந்த திரைக்கதையை உருவாக்கி அடுத்த கட்டத்துக்கு நகரலாம். மொன்மையா படங்களை மீண்டும் மீண்டும் உருவாக்கி திரையிடலை மேற்கோள்வது ஒரே கிணற்றில் வட்டம் அடிப்பதற்கு ஒப்பானது. இங்கே சிறந்த நடிகர்கள் இருக்கின்றார்கள், ஒளிப்பதிவளர்கள் இருக்கின்றார்கள் இயக்குனர்கள்கூட. ஆனால் திரைக்கதையாசிரியர்கள் மிகக்குறைவு.



Comments

0 கருத்துக்கள்:

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP