வலியவன் - சினிமா விமர்சனம்

>> Sunday 5 April 2015

வலியவன் மிகச்சமீபத்தில் பார்த்த தமிழ் திரைப்படம். “எகேயும் எப்போதும்”, “இவன் வேறமாதிரி” போன்ற திரைப்படங்களை இயக்கிய சரவணனின் நெறியாள்கையில் படிமாக்கப்பட்டு வெளியாகிய மூன்றாவது திரைப்படம் வலியவன். இவரின் முதலாவது திரைப்படமான எகேயும் எப்போதும் திரைப்படத்தில் உள்ள காதல் காட்சியமைப்புக்கள்,நுணுக்கமான உணர்வுகளின் வெளிப்பாடுகள் போன்றவற்றை காட்சிக்கோர்புக்களுடன் தொய்வற்ற திரைக்கதை நேர்த்தி மூலம் பிரதிபலித்திருந்தது பலருக்கு பிடித்திருந்தது. சிலபல செயற்கைத்தனங்கள் இருந்தாலும் பலரின் கவனத்தையும் எக்கச்சக்க பராட்டுக்களையும் பெற்ற திரைப்படம் அது. நீண்ட இடைவேளைகளின் பின் வெளியாகிய அவரின் இரண்டாவது படமான இவன் வேறமாதரி திரைப்படம் முன்னைய படத்தைபோல் பலருக்கு பிடிக்கவில்லை. ஆனால் எனக்கு படம் பிடித்திருந்தது. அவரின் தனித்துவம் படத்தில் இருந்தது. கதாப்பாத்திர தெரிவுகள், ஆடை வடிவமைப்புகள் தனித்துவமாக பிடிக்கும் வைகையில் இருக்கும். அவரின் தனித்துவமான டெம்ப்ளேட் படம் முழுவதும் செறிவாகவிருக்கும்.

வலியவன் திரைப்படத்தில் கவனிக்கச் செய்யும் சில உணர்வுகள்ரீதியான கதாப்பாத்திர பின்னல்கள் உண்டு. நடுத்தர ஆணுக்கும் இளம்பெண்ணுக்கும் இடையிலான நுட்பமான நட்பை இயல்பாக காட்சிப்படுதியிருந்த விதம் ரொம்பவே கவர்ந்தது. கூர்ந்து பார்த்தால் மகனுக்கும் தந்தைக்கும் இடையிலான மெலிதான உணர்வை சொல்லும்படம்தான் வலியவன். மகனையும் தந்தையையும் ஓர் பாக்ஸர் பிளேயர் அவமானப்படுத்திவிட மகனும் தந்தையும் ஒருவருக்கு ஒருவர் இயல்பாக முகம்கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர். மகனுக்கு தன்னுடைய இயலாமையின் காழ்ப்புணர்வு பரிதவிக்கவிட தந்தையுடன் பேசுவதையும் பழகுவதையும்கூட தன்னையரியாமல் விலத்துகின்றான். தந்தை மகனை சமாதனப்படுத்தினாலும் அவரின் ஆழ்மனதிலும் அந்த சம்பவம் மிகுந்த தாகத்தை தந்து விடுகின்றது. இதில் இருவரும் சிக்கித்தவித்தாலும் அதை ஒருவர்மீது ஒருவர் காட்டாது மொளனமாக இருகின்றனர்.

இந்த இயலாமை, தாழ்வுணர்ச்சியில் சிக்கிச் சுழலும் கதாநாயகனை ஓர் பெண் தனது பெண்மையின் ஸ்பரிசத்தாலும் காதல் எனும் பாரிய ஆயுதத்தினாலும் மீட்டேடுக்க முனைகின்றாள். இந்த உணர்வுகளின் பேசுபொருளே படத்தின் மையக்கரு. கடும் பயிற்சியானாலும் உழைப்பாலும் தன்னதுடைய வெளித்தோற்றம் மற்றுமன்றி அகத்திலும் தன்னை புதுபிகின்றான் கதாநாயகன். நேரிடையாக தூண்டுதலாக இல்லாமல் மறைமுகமாக கதாநாயகி கதாநாயகனை வலிமையடையவும், பழைய கசப்பான அவமானப்படுத்தல்களை துடைத்தெரியவும் உந்துதல் கொடுக்கின்றாள்.


முதல்பாதிய முழுவதும் படம் தொய்வாகவே நகர்கின்றது. கார்பயணத்தின் நீண்டநேர காட்சிக் காட்சிக்கட்டமைப்புகள் எரிச்சலையே வரவைகின்றது. சலிப்புத்தட்டும் வகையில் மட்டமான அந்த காட்சிப் படிமங்களை தேர்ந்த திரைக்கதை ஆசிரியர் சரவணிடம் இருந்து எதிர்பார்க்க முடியவில்லை. முதல்பாதியில் வரும் நகைச்சுவை காட்சிகளும் கவரவில்லை. இறுதிகட்டத்தை படம் அடையும்போதுதான் திரைக்கதை வேகம் பிடிக்கின்றது. வெறும் நேரிடையான திரைக்கதையாக இல்லாமல் நடுவில்சில முடிச்சுக்களையும் கட்டவிழ்கின்றது. திரைக்கதையின் பலமாக அதனைத்தான் சரவணன் கருதியிருக்கலாம்.

இடைப்பட்ட மேல்தட்டு குடிமக்களின் வாழ்க்கை முறைதான் படம்முழுவதும் சிக்கல் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கதாநாயகியாக நடித்துள்ள ஆண்ட்ரியா அட்டகசமான பி.எம்.டபிள்யூ காரில் மேல்தட்டு பெண்ணாக வருகின்றார். படம் முழுவதும் இவரின் காதாப்பாத்திரம் செறிவாக நிறைந்திருகின்றது. மெலிதாக மாறும் முகபாவனைகள் உற்பட பலமாறுதல்களை உள்ளடக்கிய நடிப்பு நிறைவு தருகின்றது. இவரின் உடையமைப்புக்கள், நளினங்கள் படம்பார்க்கும் அனைவரயும் கவரும் என்று நினைக்கின்றேன். கதாநயகன் ஜெய் ஆரம்பத்தில் சாதாரண பையனாகவும் இறுதில் கொஞ்சம் வன்மையான நபராகவும் வருகின்றார். இவரின் பாத்திரம் சட்டென்று வீரராக மாறி விடும் போது காட்சிகள் நம்பகத்தன்மை இழந்துவிடுகின்றது. அதைப் போலவே பாக்ஸின் துறையின் இயல்புகளை, நுணுக்கங்களை கற்றுக்கொள்ளளும்போது வேகமாக காட்டப்படும் காட்சியமைபுகள் சுவாரசியம் தரவில்லை. படம் முழுக்க ஜெய், வாய்ஸ் ஓவரில் நிறைய தத்துவங்கள் இடைக்கிடை பேசுகிறார். 

அப்பாவாக நடித்த அழகம் பெருமாளுக்கு நல்ல வேடம். அப்பா மகன் பேசிக்கொள்ளாத காட்சிகளும் அதன் விளைவுகளும் உணர்வுபூர்வமாகக் கையாளப்பட்டுள்ளன. தனது வழமையான குரலினாலும் நடிப்பினாலும் யதார்த்தம் மீறாமல் நடித்து சிறிது நேரம் நினைவு அடுக்குகளில் இருந்து நீங்காமல் இடம்பிடிக்கின்றார். படத்தில் இடம்பெறும் பாடல்கள் பெரிதாகக் கவரவில்லை பின்னனி இசையில் அந்தக்குறை இல்லை. வழமையான சரவணன் படத்தில் உள்ள டெம்ப்ளேட் இதில் இல்லை, ஆனால் அவரின் சில தனித்துவங்கள் ஓட்டிக்கொண்டு உள்ளது.

திரைமறைவில் இருக்கும் சில உத்தமர்கள் எளிய மனிதர்களினால் பலசமயம் வீழ்த்தப்படுகின்றனர் என்ற கருத்தோடு படம் முடிவடைகின்றது. சாதாரன ஜனரஞ்சக படம்தான் வலியவன், ஆனால் ஏதோவொன்று மற்றைய மசாலா படங்களுடன் இருந்து தள்ளி வைக்க உந்துதல் தருகின்றது. படத்தில் இழையோடும் ஆர்பாட்டம் இல்லாதன உணர்வுகளின் வெளிபாடுதான் அப்படி கருதவைகின்றதாக இருக்கலாம்.




Comments

0 கருத்துக்கள்:

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP