அச்சம் தவிர் - யாழ்ப்பாணத்தில் உருவாகிய முழுநீளத்திரைப்படம்

>> Wednesday 6 May 2015

நீண்ட தசாப்தங்களுக்குப்பின் முற்றுமுழுதா யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டு திரையிடப்பட்ட முழுநீளத்திரைப்படம் அச்சம்தவிர். ஈழத்து தமிழ்சினிமா உருவாக்கத்தில் வணிகசினிமாவினைநோக்கி முன்னகர்த்த ஏதுவான முயற்சியாக இத்திரைப்பட உருவாக்கமும் திரையிடலும் அமைந்திருகின்றன.

இரவு கடைசிநேர பிரயாண பஸ்சை தவறவிட்டு வீடுசெல்ல தவிக்கும் கல்யாணசுந்தரம் ஒரு கொலையைக்காண நேருகின்றது. கொலைசெய்தது ஆதியும் அவர்களின் காங்ஸ்டர் நண்பர்களும். கொலையை பார்வையிட்ட கல்யாணசுந்தரம் ஆதிக்கு எதிரான முக்கியமான சாட்சியாமாறிவிட கல்யாணசுந்தரத்தின் தடயங்களை விட்டுவிட்டு கல்யாணசுந்தரத்தினையும் கடத்திக்கொண்டு ஆதிகுழாம் தலைமறைவாகின்றது. தடயங்களை பின்பற்றும் பொலிசார் கல்யாணசுந்தரம்தான் கொலையாளி என்ற கோணத்தில் விசாரணையை முடுக்குகின்றது. அதேநேரத்தில் கொலைசெய்ப்பட்டவரின் இரகசிய மகனான காங்ஸ்டர் குருவும் கொலையாளியை பழிவாங்கும்நோக்குடன் தேடத்தொடங்குகின்றார். இந்தபாணியில் செல்லும் கதை கொலையின் பின்னணிக்கு என்னகாரணம் என்ற சுவாரசியத் தேடலுடன் நகர்கின்றது.


படத்தில் காட்டப்படும் காட்சிகள் யாழ்ப்பாணத்தில் கதைநடப்பதாக  தெளிவுபடுத்துகின்றது. யாழ்ப்பாணத்துக்கு புதியகற்பனையான தளம் ஒன்றினை அமைத்து கதாப்பாத்திரங்களை இயங்கவைத்திருக்கின்றார் இயக்குனர் கவிமாறன் சிவா. அந்தத்தளத்தில் காங்ஸ்டர்கள் ஆயுதங்களுடன் சுதந்திரமாகச் யாழ்நகரத்தை சுற்றிவருகிறனர். எந்த இராணுவ கெடுபிடிகளும் இல்லாத சுதந்திர நகரம். நகரமத்தியில் தென்னிந்திய சினிமாப்பாணியில் ஒருவரையொருவர் துரத்துகின்றனர். சரமாரியாக சுட்டுக்கொள்கிறனர். தமிழ் பொலிஸார் உயர்பதவிகளுடன் வந்துபோகின்றனர் காணி,பொலிஸ் அதிகாரங்களுடன் 13 பிளஸ் வழங்கியாகிவிட்டதா என்று கிள்ளிப்பார்த்துக்கொள்ளத் தோன்றுகின்றது.

ஒவ்வொரு பாத்திர உருவாக்கத்துக்கு இடையில் நுட்பமான உள்கட்டுமானங்கள் புரிதலுடன் இல்லை. கதாநாயகன் ஆதி தம்பிபாசமானவன். அவன் செய்தகொலைக்கு வலுவான நியாயமான இரக்கம் கொள்ளச்செய்யும் பின்னணி என்று உருவகித்துவிட்டு அப்பாவியான கல்யாணசுந்தரத்தினை ஆதி பொலிசாரிடம் மாட்டிவிட எத்தனிப்பது என்று மாறுபட்ட தர்க்க கட்டமைப்பை ஆதியின் பாத்திரங்களுக்கு இடையில் உருவாக்கி வலுவிழக்கச்செய்து உள்ளார் இயக்குனர். ஆதிக்கும் அவனின் தம்பிக்கும் இடையிலான பாசத்தை காட்டும்காட்சியில் ஏன் இத்தனை பழைமைவாதம் என்று எரிச்சல்கொள்ளாமல் முகத்தைவைத்திருக்க பார்வையாளர்கள் முயன்றாலும் தோற்பதில் தவிர்க்க முடியவில்லை. ஆதி பதின்மவயது தம்பியை சைக்கிளில் ஏற்றிச்செல்வதும் தம்பிக்கு முகம்கழுவிவிடுவதும் என்று பாசத்தை பொழிகின்றார். தங்கை அண்ணன் பாசக்காட்சிகளைகூட இப்படிவைத்தால் பார்வையார்கள் கேலிப்புன்னைகை புரிவதென்பது முப்பாட்டன் முருகனின் காலத்திலிருந்து காலகாலம் தமிழ்திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு உவப்பானதொன்று. நுட்பமாக பாசத்தை வெளிக்காட்டும் காட்சிகளை அமைத்து வலிகளை தைக்கவேண்டிய இடங்களில் கற்பனைவறட்சி சுடர்விடுகின்றது.

வசன உருவாக்கம் ஏன் பக்குவம் இல்லாமல் அமைந்திருகின்றது என்றகேள்வி துளைத்தெடுக்கிறது. படத்தின் ஆரம்ப காட்சிகளிலே இதனை புரிந்துகொள்ளமுடிகின்றது. கல்யாணசுந்தரம் பஸ்ஸ்டான்ட் ஊழியருடன் பேசும்போதுபோதும், ஆதி செய்யும் கொலையைபார்த்த பின்னும் செலுத்தும் வசனங்கள் செயற்கையாக அப்பாவிதனமாக மிளிர்கின்றது. “சேர்..” என்றுகூறிக்கொண்டு உயர் சக பொலிஸ் அதிகாரி முதுகில் கைபோடும் காட்சிகள், இரவு களத்தில் படிமமாக்கப்பட்ட காட்சிகளில் கருப்புக் குளிர்கண்ணாடியுடன் இயங்கும் பொலிஸ் அதிகாரி என்று பல்வேறுகாட்சிப்பிழைகள். பகலில் ஒளிப்பதிவாக்கி இரவாக காட்சிப்படுத்தியுள்ளார்கள் என்பது புரிகின்றது.

மிகத்திறமையான ஒளிப்பதிவாளர்கள் குறைந்த பட்ஜெட் குறும்படங்கள்மூலம் முத்திரை பதித்துவரும்நேரத்தில் மிக மட்டமான ஒளிப்பதிவு  படம்முழுவதும் நிறைந்திருக்கின்றது பெரும் வியப்பைத்தருகின்றது. லைட்டின் என்ற விடயம் ஒளிப்பதிவில்  கையாளப்பட்டது என்பதினை கற்பனைசெய்து கொள்ளமுடியவில்லை. நிறச்சமநிலையை பார்க்கும்போது கல்யாண கசட்டினை பார்ப்பதுபோல பிரம்மை வருகின்றதை உதறமுடியவில்லை. எடிட்டர் துஷிகரன் இதனை புரிந்துகொண்டு முடிந்தளவு காட்சிகோர்புக்களை செழுமைப்படுத்தி படிமங்களை காப்பாற்ற முயன்று இருக்கின்றார் என்று ஊகிக்கின்றேன் அவரின் கைவண்ணம் தனித்துவமாத் தெரிகின்றது.

நடிகர்களின் நடிப்பு முடிந்தளவு இயல்பாக அமைந்திருகின்றது. கல்யாணசுந்தரமாக நடித்த உமாகரன் அட்டகாசமாக நடித்திருந்தாலும் செயற்கைத்தனமான உடல்மொழியினை கைவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். குருவாக நடித்த யசிதரன் கண்களால்கூட அட்டகாசமாக நடித்து ஸ்கோர் செய்கின்றார். ஆனால் அவரின் நடிப்பின் உச்சிகளை படத்தில் பயன்படுத்தும் காட்சிகள் இல்லை. ஆதியாக நடித்த கதாநாயகன் சயன் மிகைபடாமல் அளவாக நடித்திருகின்றார். அறிமுகக்காட்சியில் துப்பாக்கியை சுழற்றியபடி காமராவுக்கு முகத்தைதிருப்பிக்காட்டும் காட்சிப் படிமங்களை தவிர்த்து இருக்கலாம். அவை கதாநாயகனுக்கு உரிய அழுத்தத்தினை தராமல் சிரிப்பைத் தருகின்றன. கொலைசெய்யப்பட்ட முதலாளியாக நடித்த சிவசுப்பிரமணியதினுடைய நடிப்பு அதகளம். முகபாவனையில் காடும் நடிப்பு சிறந்த கலைஞனுக்கான சான்று.

சுதர்சனின் இசை மிகப்பெரிய ப்ளஸ்பாயின்ட், பின்னியிசையில் கிறங்கடிகின்றார். அவரின் இசையை வியக்காமல் இருக்கமுடியவில்லை. இயக்குனரின் ஆரம்பகால படைப்புகளுடன் ஒப்பிடும்போது அச்சம் தவிர் மிகப்பெரிய பாய்ச்சல். அடுத்த படைப்புக்கள் ப்பீட்டளவில் இன்னும் நன்றாக அமையும் என்பதில் ஐயப்பாடுகள் இல்லை.

எடுத்துக்கொண்ட செயற்கையான களத்துக்கு திரைக்கதையின் உள்சார்புக் கருத்தாடல்களுடன்கூடிய கோர்ப்பு தொய்தலுடன் அமைந்து இருகின்றது. இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.

இயக்குனர் கவிமாறன் சிவா ஈழத்துசினிமாவினை வணிகத்துறையாக அமைக்க எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கது. ஆனால் தென்னிந்திய வெகுஜன சினிமாவின்தாக்கம் அவரிடம் நிறையவே தென்படுகின்றது. நமக்கான ஈழத்து சினிமாவிற்கான தனித்துவம் அவரிடம் இல்லை. அவரின் அடுத்த குறும்படமான ஃஜப்ணாவின் டிரைலாரை பார்க்கும்போது இது உறுதியாகின்ற பிரம்மை. போலியான கள கட்டமைப்பினை உருவாக்கி செயற்கையான பிளாஸ்டிக் பரவசத்தை தர எத்தனிக்கின்றார். இவை தவறான முன்னுதாரங்களை மற்ற படைபாளிகளிடன் உருவாக்குமோ என்று அச்சப்படவைகின்றது. மீண்டும் வெண்திரையில் முழுக்கமுழுக்க யாழ்ப்பாணத்தில் உருவாகிய திரைப்படத்தை வெளியிட முயன்ற ஆளுமையையையும் உழைப்பையும் நாம் ஒவ்வொருவரும் மதிக்கவேண்டியது கடப்பாடு.



Comments

2 கருத்துக்கள்:

திண்டுக்கல் தனபாலன் 7 May 2015 at 07:52  

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

Annogen 7 May 2015 at 19:05  

திண்டுக்கல் தனபாலன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP