துலைக்கோ போறியள் – குறும்பட விமர்சனம்

>> Sunday 17 May 2015


நூதனமான திரைமொழி கட்டமைப்பின் மூலமும் ஈழத்து வட்டார மொழிவழக்கை கச்சிதமாக உள்வேண்டி திரையில் பிரயோகிப்பதன் மூலமும் சில குறும்படங்கள் யதார்த்தபோக்கின் மிக அருகில் நின்று சுவாரசியக்க வைக்கின்றன. இந்தத் திறன்களை தோராயமாக ஒத்து ஈழத்தில் வெளிவந்த குறும்படம் துலைக்கோ போறியள்?”

ஈழத்து வட்டார மொழியில் துலைக்கோ போறியள் என்ற வார்த்தைப் பிரயோகத்துக்கு தனித்துவமான கருத்தாக்கம் உண்டு. யாரவது வெளியே செல்லும்போது எங்கே போறீங்கள் என்று கேட்பது அபசகுனமாகக் கருதப்படிகின்றபடியால் அதற்குப் பதிலாக துலைக்கா போறியல் என்ற கேள்வியை மையமாகப் பயன்படுத்துவார்கள். ஒரு திருடனின் நூதனமான திருட்டுச் சம்பவத்துடன் ஈழத்தின் சில முக்கிய பிரச்னைகளை  தொட்டுச்செல்வதோடு சிறு புன்னகையுடன் ரசிக்கவும் வைகின்றது. திருடன் ஒருவன் பனைமரத்தில் கள்ளுச்சீவ ஏறியவரின் சைக்கிளை கவர்ந்துகொண்டு வலம்வரும்போது புலம்பெயர்தமிழர் ஒருவர் புலத்திலுள்ள நண்பனின் தாயகத்திலுள்ள பெற்றோர்க்கு பொதிஒன்றை கொடுக்கச் செல்கின்றார். அவருடன் இயல்பாக அறிமுகமாகி நைச்சியாம உரையாடிக்கொண்டு செல்லும்போது பல முக்கியபிரச்சனைகளை அவர்களுக்கு இடையேயான சொல்லாடல்களுடன் சொல்லப்படுகின்றது. புலம்பெயர்தமிழர்களின் நிதியுதவியினால் தாயகத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் நீர்ந்துபோகவைக்கப்பட்டாலும் பெரும்பாலான நிதிகள் ஆடம்பர கவர்ச்சிக்கும் செயற்கையான கட்டமைப்புகளுக்கும் சென்றுவிடுவதிணை புலத்தில் இருந்து ஊர் வந்த நபரும், சைக்கிள் திருத்துபவரும் சந்திக்கும் ஒரே காட்சியில் திரைமொழியூடாக வெளிப்படுத்தியவிதம் ஆழமானது.

குறும்படத்தை இயக்கியிருப்பதோடு திருடனுக்காண பாத்திரத்தையும் மதி.சுதா ஏற்றி நடித்திருகின்றார். ஏரம்போ ஐயாவின் சாதிபார்பதினை படிமமாக்கியவிதம் யதார்த்தப்போக்குடன் ஒத்துப் பரிமாணிக்கின்றது. வீட்டு வளவுக்குள் உள்நுழையும்போது வெறுப்புஉமிழும் முகத்துடன் மதி.சுதாவை ஏறிடுவது என்று ஏரம்போ பாத்திரம் சாதிய ஆழ்மனவெறுப்பை உதிர்கின்றது. மதி.சுதாவுக்கு பூக்கண்டுக்கு தண்ணீர்வார்க்க வைத்திருந்த குவளையில் குடிக்க தண்ணீர்கொடுப்பது பின்னர் தொலைபேசி வாங்க வரும்போது கதிரையை துடைக்க சொல்வதும், துடைக்கும்போது கதிரைய துப்ப முயன்ற மதி.சுதாவை கண்டு கிளர்ந்தெழுந்த உணர்ச்சியில் உதைந்து விழுத்திட்டு சுதாகரித்து மதிசுதாவை சாந்தப்படுத்த சோடா கொண்டுவருகின்றேன் என்று சொல்லும் இடங்கள் நுட்பமான படிமமாக்கள்.

சாதிய ஒடுக்குமுறையையும் திருடனின் திருட்டையும் இணைக்க முற்பட்ட இடத்தில் இயக்குனரின் கவனங்களையும்மீறி சில நுண்னரசியல் பின்புலத்தளத்தில் உருவாக்கிவிட்டது. ஏரம்போ ஐயா சாதிபார்ப்பதினால் தாழ்சாதியவர் பாதிக்கப்படுவதுபோல் சித்தரிக்க முற்படும்போது தாழ்சாதியவர் திருடனாக காட்டப்படும்போது சில அபத்தங்கள் உருவாகிவிடுகின்றன. சமூகத்தில் தாழ்சாதியவர்கள்தான் திருடர்கள் அல்லது அதற்கான திருட்டுகுணத்தை கொண்டுள்ளார்கள் என்ற அபத்தமான கருத்துநிகழ்கின்றது. அந்தக் கருத்தை இக்குறும்பட கட்டமைப்புக்கள் ஆமோதிக்கும்வகையில் அமைத்திருக்கின்றது. இந்த நுன்னிய முரண்பாடுச் சித்திரத்தை இயக்குனர் மதி.சுதா யோசிக்கத்தவறிவிட்டாரா என்று யோசிக்கவைகின்றது. இந்த நுன்னியல் தர்க்கக் கட்டமைப்புக்களை மேன்மையாக கையாள்வதன் மூலமே சிறந்த இயக்குனராக நிறுவ முடியும்.

நடிப்பு ரீதியில் மதி.சுதா, ஏரம்போ ஐய்யா பாத்திரத்தில் நடித்த இருவரும் இயல்பாக நடித்திருகின்றார்கள். புலம்பெயர் நபராக நடித்தவரின் உடல்மொழிகளும் வசன வெளிபாடுகளும் செயற்கையாக உள்ளன இன்னும் மேன்படுத்தமுடியும். பின்னியிசையில் ஒலிக்கும் துளைக்கா போறியளா என்ற தீம்இசை பரவசப்படுத்தும் விதத்திலிருந்தாலும் நகைச்சுவை துணுக்குகளில் ஒலிக்கும் இசை வீடியோகேமில் ஒலிக்கும் இசையை நினைவுபடுத்துகின்றது. ஒளிப்பதிவு சிலஇடங்களில் பின்னனி களங்களை உள்வேண்டுவதில் முனைப்புக்காட்டி பாத்திரங்களை கச்சிதமாக உள்வேண்ட தவறிவிட்டாலும் உறுத்தவில்லை. பத்து நிமிட குறும்படத்தில் தான் சொல்லவந்த கருத்தை நூதனமாக காட்சிமொழிகளுடனும் ஈழத்து வட்டாரவழக்கு மொழியுடனும் பதிவுசெய்திருக்கிறார் மதி.சுதா.


நன்றி வலம்புரி.



Comments

1 கருத்துக்கள்:

திண்டுக்கல் தனபாலன் 18 May 2015 at 08:13  

மதி.சுதா அவர்களுக்கு வாழ்த்துகள்...

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP