குற்றம் கடிதல்

>> Sunday 4 October 2015

குற்றம் கடிதல் சமீபத்தில் பார்ததில் மனதுக்குள் நெருக்கமாக உளீர்க்கப்பட்ட படம். காட்சிப்படிமத்தில் செறிவாக கதைசொல்லல் நகர்கின்றது. படக்கதைகுக்கு உரிய மிகமுக்கியமான தகுதிகளை கொண்டிருகின்றது.

பள்ளியில் படிக்கும் சிறுவன் ஒருவனை மெர்லின்(ராதிகா பிரசித்தா) என்ற இளம் வயது ஆசிரியர் சாதரணமாக கண்ணத்தில் அடித்ததில் மயக்கமாகி கீழே விழுகிறான். அதன் பின்பு நடந்தது என்ன என்பதுதான் கதை. ஒரு தனிப்பட்ட கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி கதையைப்பின்னாமல் சம்பவங்களின் அடிப்படையில் படக்கதையை பின்னியுள்ளார் இயக்குனர் பிரம்மா.

சம்பவத்தோடு சம்பந்தப்பட்டவர்களாலும், காவல் துறை, ஊடகம், பொதுமக்கள் ஆகியோராலும் எவ்வாறு பார்க்கப்படுகிறது அணுகப்படுகின்றது என்பதை யதார்த்தமாகவும் மிகைபடுத்தப்படாமலும் அழுத்தமாகவும் சொல்லப்படுகின்றது. பார்வையாளர்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கும் இச் சம்பவங்களையொட்டிப் பல தரப்பட்ட மனிதர்கள் வருகிறார்கள். ஒவ்வொருவரின் தனிப்பட்ட கோணமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எல்லாருடைய பின்னணிகளும் முறையான படக்கதையின் ஆரம்பத்திலே சொல்லப்பட்டிருகின்றன. அசம்பாவிதம் நிகழக் காரணமான ஆசிரியையின் உணர்வு, கணவனின் உணர்வு, பள்ளி நிர்வாகத்தின் அணுகுமுறை, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய்மாமனின் கட்டுக்கடங்காத கோபம், அம்மாவின் கையறு நிலை, என எல்லாமே மிகச்செறிவானவை.

பாலியல் கல்வியை பாடசாலையில் கற்பிப்பது தேவையா என்று விவாதங்கள் பாடசையில் நீள்கின்றது. படத்தின் மையமும் அதனைச்சார்ந்துதான் இருகின்றது. ஒரு சிறுவன் தனது பகுப்பில் படிக்கும் சகமாணவிக்கு முத்தம்கொடுத்து விடுகின்றான். அதனை மெர்லில் டீச்சர் அணுகுகம் முறையில்தான் படத்தின் அடிநாதம் கட்டமைக்கப்பட்டு இருகின்றது. இவ்வாறான பாலியல் சார்ந்த கவர்ச்சியை ஓட்டிய பிரச்னைகள் பாடசாலையில் முளைக்கும்போது அதனைக்கையாளும் ஆசரியர்கள் அதனை இலகுபடுத்தி அதுதொடர்பான அடிப்படை புரிதலை பாதிக்கப்பட்ட மாணவன்,மாணவிக்கு புகுத்தாமல் கையாளும் நிலையில் ஏற்படும் விளைவுகளின் ஒரு சிக்கலான பகுதிதான் படத்தில் பேசப்படுகின்றது. 

நடிகர்களின் தேர்வு மிகப்பெரிய வியப்பை தரக்கூடியது. புதிதாக வீட்டை எதிர்த்து திருமணம் முடித்த மெர்லின் பாத்திரத்தில் நடித்த ராதிகா பிரசித்தாவின் பாத்திர தேர்வு மிக நுணுக்கமானது. கணவனுடன் இருக்கும் காதல் காட்சிகளில் பட்டப்பாக அவரது முட்டைக்கண்கள் பேசுகின்றது. பள்ளியில் மாணவர்கள் சேட்டைவிடும்போது அவரது முகம் சிடுமூஞ்சியாக மாறும்போது அவரது விரிந்த கண்கள் மிரட்டுகின்றன.

ஒருநாளில் நடக்கும் சம்பவங்களினூடே படக்கதை வேகமாக நகர்கிறது. வேகமான திரைக்கதை என்றாலும் பல்வேறு நுட்பங்களையும் தவறவிடாமல் கவனித்திருகின்றார்கள். கோபத்தின் உச்சியில் இருக்கும் தாய்மாமன் பள்ளியின் அதிபரை சொற்களால் காட்சி எடுக்கின்றார். அதற்கு அதிபரின் மனைவி சொல்லும் சில வார்த்தைகள் அவர் மனதைத் ஆழமாக தொடுகின்றன. நாங்க விட்ற மாட்டோம் தம்பிஎன்று கலப்படம் இல்லாத உணர்வுடன் சொல்லும்போது தாய்மாமனின் மனம் நெகிழ்வதை மகத்துவமாக ஒளிப்படம் பிடிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மாணவனின் தாயை ஆசிரியை சந்திக்கும் இடம் அற்புதமான தருணங்களாக நிறைந்திருக்கின்றன.

வசனங்களின் துணைகள் இல்லாமல் காட்சிகளால் கதை சொல்லும் கலை பிரம்மாவுக்குக் அட்டகாசமாக கைகூடியிருக்கிறது. கிறிஸ்த சமயத்தில் ஆழ்ந்த நம்பிக்கைகொண்ட தாயாரின் விருப்பத்தினை மீறி இந்துவான தனது காதலனை திருமணம் செய்துகொண்டது எந்த வசனத்திலும் சொல்லப்படவில்லை. ஆனால் காட்சிகளின் கதைசொல்லல் முறை அதனை அழகாகச் சொல்லும். பாதிக்கப்பட்ட ஆசிரியர் மிகுந்த மனவெழுச்சியில் தடுமாறும்போது தான் மதம் மாறி பொட்டு வைத்ததால் தான் இயேசு தன்னை தண்டிக்கிறாரோ என்ற குற்ற உணர்ச்சியில் தன் நெற்றியில் வைத்த பொட்டை திரும்பத் திரும்ப அழிக்கும் காட்சிகள் யதார்த்தமான முதிராத பெண்ணின் தடுமாற்றங்களை வெளிப்படுத்துகின்றது.
 
இயல்புத்தன்மையை படரவிடும் அழகான மணிகண்டனின் ஒளிப்பதிவு.  மிகவும் இயல்பான உருவாக்கம். நெகிழ்வூட்டும் பின்னணியிசை, கொஞ்சம் நேர இருப்புக்காக நடுவில் திணிக்கப்பட்ட பாடல் காட்சிகள், குற்றவுணர்ச்சியை பற்றிப் பேசும் கூத்துக் காட்சிகள் போன்ற மிகச் சில விஷயங்களைத் தவிர மிக அற்புதமான படமாக குற்றம் கடிதல் அமைத்திருக்கின்றது.



Comments

0 கருத்துக்கள்:

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP