கோமகனின் தனிக்கதை - மதிப்பீடு

>> Wednesday 27 May 2015


கோமகனின் தனிக்கதை சிறுகதைத்தொகுப்பில் பதினாறு சிறுகதைகள் அடங்குகின்றன. ஈழத்து வட்டார வழக்குடன் வழமையான ஈழத்து எழுத்தாளர்களின் கற்பனை நுட்பத்துடன் கோமகனின் தனிக்கதைகள் இடம் பிடித்துள்ளது. பெரும்பாலும் எழுத்தென்பது வாழ்வின் சிக்கலானபோக்கை, அதன் தடுமாற்றங்களை இயல்பான போக்குடன் வாசகனுக்கு கொண்டு செல்வதினை  அடிப்படையாக கொண்டிருக்கவேண்டும். வாசகனின் வழமையான எதிர்பார்ப்புக்களை தகர்த்து நுட்பமாக பயணிக்கவேண்டும். நல்ல கதையென்பது படித்துமுடித்த பிற்பாடு வாசகனை அக்கதை சிறிதுநேரம் யோசிக்கவைக்கும். அதன் பாதிப்புக்கள் வாசகனைவிட்டு நீங்காமல் சிலநேரம் தொந்தரவு கொடுக்கவேண்டும். கோமகனின் இத் தொகுப்பில் சிலசிறுகதைகள் அதற்கான தன்மையை கொண்டிருகின்றன.

வழமையாக ஈழஎழுத்தாளர்கள் எழுதும் கதையின் களங்கள் ஒரேமாதிரியான தன்மையில் இருக்கும். இந்திய இராணுவத்தின் வருகைக்காலம், புலம்பெயர்வுக்காலம், புலம்பெயர்வின்பின் அவர்களின் வருகைக்காலம் என்ற சட்டத்தில் பொருத்தக்கூடிய வகையிலிருக்கும். கோமகனின் கதைகளும் ஏறக்குறைய அவ்வாறான ஒத்தியல்பு தன்மைகளுடன் பொருந்துகின்றன. சுயபுனைவியல்(Auto fiction) தன்மையுடன் சிலகதைகளும்  தொகுப்பில் அமையப்பெற்றிருகின்றன.
 
இலக்கிய தரத்தில் தொகுப்பிலுள்ள அணைத்து சிறுகதைகளையும் இணைக்கமுடியாது அதே நேரத்தில் வெகுஜன வர்த்தக எழுத்து வடிவத்திலும் பொறுத்த முடியாது. இவற்றுக்கு மத்தியில் உள்ள தட்டையான வடிவத்தில் பெரும்பாலான கதைகள் இயங்குகின்றன. இலக்கியத்தன்மையான சிறுகதை வடிவத்தில் தோராயமாகக் பொருந்தக்கூடிய சிறுகதைகளாக சின்னாட்டி ,பாண் ,சொக்கப்பானை, றொனியன் போன்ற கதைகளை குறிப்பிடலாம்.

சின்னாட்டி சிறுகதை கொடுக்கும்தாக்கம் ஆழமானது. 1970இலுள்ள யாழ்பாணத்து சாதீயத்தின் திமிரினை முடிந்தளவில் அருகில் செல்ல முற்பட்டுள்ளது. சாதீயத்தில் கூடிய வெள்ளாளர்கள் சாதீயத்தில் குறைந்தவர்களை உக்கிரமாக வெறுத்துஉமிழ்திய கரிய வெம்மை படர்ந்த மிகக்கசப்பான வரலாறுகளை புனைவினூடாக முன்வைகின்றது. பறையடிக்கும் சின்னான் சாதீயத்தினால் உடையாரிடன் அவமானப்படுத்தப்படுவதும் உடையாரின் இறுதிநேரத்தில் அவருக்காக பறையடிகச்செல்வதும் நுட்பமாக பதியப்படுகின்றது. உடையாரின் இறப்புவீட்டில் சின்னாட்டி உக்கிரமாக பறையடிக்கின்றான். அவரின் பறையொலி ஆதீய சாதிவெறியின் உமிழ்த்திய பக்கங்களை அதிரச்செய்தபடி ஒலித்துக்கொண்டேயிருகின்றது. கடந்தகால சாதீய வெறுப்பை வெம்மையாக உக்ரமாக அதிரச்செய்துகொண்டே பறை ஒலித்துக்கொண்டு இருக்க தன்னிலைமறந்து பறையடித்த சின்னாட்டி மாரடைப்பால் இறகின்றார். இந்த மாரடைப்பால் இறகின்றார் என்ற புனைவு தேவையற்றதாக இருகின்றது. சின்னாட்டியின் பறையொலி ஒலித்துக்கொண்டேயிருக்க கதையினை முடித்திருந்தால் இலக்கியத்தன்மையை கதை முற்றாக அடைந்திருக்கும். உடையாரும் இறக்கின்றார் சின்னாட்டியும் இறகின்றார் ஆனால் சாதீயம் ஒழிந்ததா என்ற கேள்வியுடன் சிறுகதையை முடித்திருப்பது கதையின் தன்மையை சிறுமைவியல்ப் படுத்துகின்றது. இந்த ஆதிதப்புனைவின் தன்மை சிறுகதையின் இலக்கியத்தன்மைக்கு இடையூறுதருகின்றது. சிவப்புச் சட்டைக்காரர்களின் வர்க்கவிடுதலைப் பேசுக்கள் தொடர்பாக குறிப்பிட்டு  சாதீயம் சாதிகுறைந்தவர்களை சிறுமைப்படுத்தியபோது அதிலிருந்து வெளியேவர கம்யூனிஸம் உதவுவதும் சிறுகதையில் முக்கியமாகப் பதியப்பட்டுள்ளது.

பாண் சிறுகதை இத்தொகுப்பில் இன்னுமொரு முக்கியமான சிறுகதை. பேக்கரி தொழிலாளர்களின் வாழ்வியல் அபத்தங்களை இந்திய இராணுவக் காலத்தில் சொல்லத்தொடக்கி புலம்பெயர்ந்தபின் பாண் உற்பத்திசெய்வது மீண்டும் புலத்திலும் வாழ்வளித்தாலும் பாண் தொடர்பான மிரட்சியான கசப்பான கடந்தாகல வலிகள் அகலமறுக்கின்றது. தந்தைக்கும் தனக்கும் நடந்த இருன்மையான நிகழ்வுகள் நரேனுக்கு அடிமனதில் துன்புறுத்திக் கொண்டேயிருகின்றது. துன்புறுத்தலில் எரிச்சல்கொண்ட எழும்மனவெழுச்சியில் தன்மகளின் மீதுகூட வன்மம் காட்டுகின்றான். இந்த இடத்தில் சிறுகதை முழுமையை எட்டி வாசகனை யோசிக்கவைகின்றது. இச் சிறுகதையில் உதிரியாக 1987இலுள்ள யாழ்ப்பாணம் தொடர்பான பலதகவல்களையும் கோமகன் செலுத்தியுள்ளார். 

றொனியன் சிறுகதை மேன்போக்காக படிக்கக்கூடிய சிறுகதையல்ல நுட்பமாக அவதானிக்க வேண்டிய எக்கச்சக்க நுணுக்கங்கள் கதையின் போக்கில் பின்னப்பட்டுள்ளது. அம்மாவின் சுத்தசைவச் சாப்பாட்டுடன் வளர்ந்த நாய் மரணப்படுக்கையில் கிடக்கின்றது. அம்மாக்கு ரொம்பவே பிடித்த செல்லநாய். அம்மா அவரோடு உரையாடும்போது றொனியன் தொடர்பாக எப்போதும் கூறுவார். புலத்திலிருந்து அம்மா இறந்தபின் தாயகம் வருகின்றபோது அம்மாவின் வளர்ப்புநாயான றொனியனை தேடுகின்றார். அம்மா இறந்தபின் றொனியன் சாப்பிடாமல் இளைத்துநொந்து பரிதாபமாக வினோத ஜந்துவாகவிருகின்றது. றொனியன் அவரைப் பார்க்கும்போது அம்மா பார்போதுபோல் உணர்கின்றார். நாயின் பார்வையில் நுட்பமாக அம்மாவின் ஸ்பரிசத்தை உணர்கின்றார்.  அதன்பின் அவரின் மன அலைக்களிப்புக்கள் தொடர்கின்றன. இயல்பான எழுத்துநடையோடு இன்சிறுகதை மகத்துவமாகப் பதியப்பட்டுள்ளது.

சாதிகூடியவர்களின் சாதிவெறியின் அபத்தங்களை பெரும்பாலும் தன் சிறுகதையோடு முன்வைகின்றார் கோமகன். சில எள்ளல்களோடு சிலகதைகளின்போக்கு அமைதிருகின்றது. உதரணமாக தனிக்கதை என்ற சிறுகதையினை முன்வைக்கலாம். இக்கதையின் ஆரம்பத்தில் கொடுக்கப்படும் குறிப்புகளில் சாதீயத்தின் பெயரினையும் பொழுதுபோக்கு என்ற குறிப்பில் தவறனையும் வெண்டிறோசனும் என்ற குறிப்பிடுகின்றார். இந்தகவல் கதைக்கு தேவையாக இருந்தாலும் அத்தகவலுக்குப்பின் உள்ள நுண்ணரசியலில் எள்ளல்கள் சுடர்விடுகின்றன. இந்த நுண்ணரசியல் எழுத்தாளருக்கு தெரியாமல் அவரின் எழுத்துகளுடன் இயல்பாக அமைந்திருகாலம். ஆனால் கதையின் முடிவினையும் இடைநடுவே வரும் சம்பவாங்களையும் நுட்பமாக பார்க்கும்போது எள்ளல்தொனி தெளிவாகப் புரிகின்றது.

கோமகன் எடுத்துக்கொண்ட நடை மிகவும் இயல்பானநடை. ஆரம்பகட்ட இலக்கியவாசிப்பாளர்கள் தடைகளின்றி அவரின் கதையினுள் நுழையமுடியும். ஆனால் மிகப்பழைமையான உவமைகளையும் வர்ணிப்புக்களையும் கையால்கின்றார். தீவிர இலக்கிய வாசிப்பில் உள்ளவர்களுக்கு நிச்சயம் உவகையளிக்காது, நவீனப்படுத்தப்படவேண்டும். ஈழத்து எழுத்துகளை ஈழம்சாரதா வாசகன் படிக்கும்போது அவனுக்கு ஈழம்தொடர்பான மண்ணும்,அதன் பண்பாடுகளும் வாசிப்பு அனுபவத்தில்கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தென்னிந்திய வாசகர்வட்டத்டதில் சொல்லப்படுவதொன்று. இதனடிப்படையில் கோமகனின் கதையும் முற்றுமுழுவதுமாக சேர்க்கமுடியாது. பல சிறுகதைகளில் மண்ணின் பண்பாடுகள் தொடர்பாக ஆழமாகச்சொல்லியிருகின்றார் அல்லது அவரின் எழுத்து நடையில் இயல்பாக அமர்ந்திருகின்றது.

கற்பனைபுனைவியல் தன்மையில் இன்னும் இவரின் புனைவுத்தன்மை பூரணமாக இல்லை. ஆரம்பத்தில் திறமையாக சொல்லவந்த சில கதைகளைகூட மந்தகமாக முடித்துள்ளார். பதினாறு சிறுகதைகள் இருந்தாலும் கொண்டாடக்கூடிய சிறுகதைகள் சொற்ப்பம். கோமகனின் ஆரம்பகால எழுத்துகள் உற்பட சமீபத்திய எழுத்துகளும் சிறுகதையில் உண்டு. நுட்பமாக பார்க்கும்போது எழுத்துநடை, சிறுகதையினை அனுபவங்களோடு புனையும் தன்மை வாளர்ச்சிகண்டுள்ளது. வாழ்வின் அபத்தங்களின் நுண்ணியல் விளிம்புகளை நுட்பமாக எனிவரும் தொகுப்பில் பதிக்கக்கூடிய தன்மை அவரிடம் உண்டு.

வெளியீடு
மகிழ்
விலை 200 ரூபாய்( ஸ்ரீலங்கா விலையில்)



Comments

3 கருத்துக்கள்:

திண்டுக்கல் தனபாலன் 28 May 2015 at 07:37  

ஒவ்வொரு சிறுகதையின் விளக்கமும் படிக்கத் தூண்டுகிறது...

Kasthuri Rengan 29 May 2015 at 08:22  

அற்புதமான அறிமுகம் தோழர்
நல்ல திறனாய்வு..
தொடருங்கள்
தம வேலை செய்யவில்லையா?

Kasthuri Rengan 29 May 2015 at 08:23  

அருமையான பதிவு தோழர்
வாழ்த்துகள்
தொடருங்கள்

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP